ஹேப்பி பர்த் டே லைகா சுபாஸ்கரன் அல்லிராஜா..

0

 

இலங்கைவாசியான இவர் ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா டெலிகாம் கம்பியில்லா சேவையை தொடங்கியதில் பெரும் பங்காற்றியவர். அதாவது மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா போன்றவற்றை இணைக்கும் தெற்காசியா-மத்திய கிழக்கு-மேற்கு ஐரோப்பா (SEA-ME-WE) என்ற கடலடி ஒளியிழை (submarine optical fibre) தடத்தின் இணைப்புப் புள்ளியாக இலங்கை இருக்கிறது. இந்த இணைப்புப் புள்ளியை முன்னின்று ஏற்படுத்தியவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. இந்த மாபெரும் பிராஜக்ட் கிடைக்காத பலரும் அப்போதே இவர் ராஜ பக்‌ஷே-வின் பினாமி என்று சொன்னதுண்டு.

அதை எல்லாம் பொருட்படுத்தாமல் வளர்ந்த இவரால் லண்டனில் தொடங்கப்பட்டு இயங்கி வந்த நிறுவனம்தான் லைகா மொபைல்ஸ். உலகின் மிகப்பெரிய விர்ச்சுவல் மொபைல் நிறுவனமான லைக்கா, சர்வதேச வான்வெளி அலைக் கற்றைகளை மொத்தமாக வாங்கி இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒப்பீட்டளவில் மலிவான பிரீபெய்டு கார்டுகளாக விற்றதில் பெரும் இலாபம் அடைந்தது.

இன்று 49 வயதாகும் அவர் லைக்கா மொபைல் நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் இருக்கிறார். பிரிட்டனில் அவர் 600-க்குள் இருக்கும் பணக்காரராக பட்டியலிடப்பட்டு வாழ்கிறார். பிரிட்டனில் இருக்கும் ஆசிய தொழில் முனைவோர் சாதனையாளராக அவர் 2010-ல் கௌரவிக்கப்பட்டு தங்க விருதை பெற்றார். இதே போன்று வேறு சில விருதுகளையும் தொழில் கூறும் ஐக்கிய ராஜ்ஜியம் (united kingdom) எனப்படும் இங்கிலாந்தின் நல்லுலகம் அவருக்கு அளித்திருக்கின்றது.

இப்போதைக்கு(ம்) உலகெங்கும் பிரபலமான இந்நிறுவனத்தின் சேர்மன் சுபாஸ்கரன் ஒரு தீவிர சினிமா ரசிகர் ஆவார். ஆம்.. தன் இலங்கை வாழ் நாட்களில் அவர் எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினி பட ரசிகராக வளர்ந்ததை நேர்காணல் ஒன்றில் கூறி இருந்தார்

தனது எத்தனையோ அலுவல்களுக்கு இடையே, நாளுக்கொரு திரைப்படம் பார்க்கும் அளவுக்கு இவர் சினிமா மீது பெருங்காதல் கொண்டவராக இருந்துள்ளார். இதுவே இவரை சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட செய்ததாம்.

அதன் காரணமாகவே லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவத்தை தொடங்கி தமிழில் 2014-ஆம் ஆண்டு கத்தி திரைப்படத்தை இவர் தயாரித்தார். படத்தின் ரிலீஸுக்கு முன்பே கடுமையான எதிர்ப்புகள் கிளம்ப, அதையும் கடந்து வெளியான இத்திரைப்படம் வசூலில் ஹிட் அடித்ததுடன் பெருவாரியான பாராட்டுக்களையும் குவிச்சுது.

இதை தொடர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு, இப்படை வெல்லும், எமன், தியா என சிறுபட்ஜட் படங்கள் ஒருப்பக்கம், கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம், வட சென்னை, காப்பான் என டாப் நடிகர்களின் படங்கள் இன்னொரு பக்கம் என பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளது லைகா ப்ரொடக்‌ஷன்ஸ்.

மேலும் நம் கோலிவுட், டோலிவுட், தொடங்கி பாலிவுட் அடங்கிய இந்தியாவில் அதிக பட்ஜட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் முதல் இடத்தில் இருக்கக்கூடிய ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 திரைப்படத்தை தயாரித்து தமிழ் சினிமாவின் வீச்சை இன்னும் வீரியமாக பதிவு செஞ்சது லைகா நிறுவனம்.

இதுமட்டுமின்றி நானும் ரவுடிதான், விசாரணை, காலா, பரியேறும் பெருமாள் போன்ற தரமான திரைப்படங்களை விநியோகித்து, தமிழ் சினிமாவில் தன் சாம்ராஜ்யத்தை ஆழப்படுத்தியது.

அடுத்ததாக ஓரிரு சிறிய படங்களோடு, கமலின் இந்தியன்-2, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், சிவகார்த்திகேயனின் டான் ஆகிய மெகா ப்ராஜக்ட்களையும் கைவசம் வைத்துள்ளது லைகா ப்ரொடக்‌ஷன்ஸ்.

இத்துடன் இந்த 2021-ஆம் ஆண்டில், இன்னும் பல்வேறு சிறிய மற்றும் பெரிய தமிழ் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டத்தில் உள்ள லைகா, ஹிந்தி சினிமாவிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.

இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவில் உள்ள ஏம்ய்ஸ் பல்கலைக்கழகம், சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இதற்கான பாராட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றதில் கலந்துகொண்ட முருகதாஸ், “கத்தி படத்தின்போது சுபாஸ்கரனை ஒரு தயாரிப்பாளராக மட்டுமே தெரியும். ஆனால் லண்டனுக்கு சென்றபின்னர் அவரது பின்புலம் தெரியவந்தது. அவருடன் சமீபத்தில் 4 நாட்கள் இருந்தபோது அவரது வாழ்க்கையை முழுவதுமாக சொன்னார். தாய்நாட்டில் இருந்து வெளியேறிய ஒருவன் ஒன்றுமே இல்லாமல் தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இந்த நிலைக்கு வந்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க ஆர்வமாக இருக்கிறேன்’ அப்படீன்னார்.

முன்னதாக பேசிய இயக்குனர் மணிரத்னமும் சுபாஸ்கரனின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறினார். இதுபற்றி முருகதாசிடம் கேட்டதற்கு இருவருமே எடுக்கலாம்’ என்று சொன்னதெல்லாம் பலரும் மறந்து போன நிலையில் அண்மையில் சூரரைப் போற்று ஹிட் அடித்த தெம்பில் இந்த சுபாஸ்கரன் பயோபிக் விரைவில் தொடங்க இருக்கிறதாம்.. அதுவும் ஒரே நேரத்தில் இந்தியாவின் ஏழு மொழிகளில் (எதெது, யார் நடிப்பு, இயக்கம் என்பதெல்லாம் விரைவில்)ரிலீஸாக திட்டமிடப்பட்டு வருகிறதாம்.

filmnews24/7 சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லைகா சுபாஷ்கரன்!?

Leave A Reply

Your email address will not be published.