பிரகாஷ் ராஜ் பிறந்த நாளின்று!

0

ரு நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பல மொழிகளில் தன் பன்முகத் திறன்களால் முக்கியமான பங்களிப்புகளைச் செலுத்திவரும் பிரகாஷ்ராஜ் ஒரு தனிநபராகவும் சமூகத்தின் மீது உண்மையான அக்கறையுடனும் வன்முறைக்கு எதிரான துணிச்சலுடன் செயல்பட்டு வருபவரிவர். ஒரு காலகட்டத்தில் நட்சத்திர நாயகர்களின் படம் என்றாலே பிரகாஷ்ராஜ்தான் மெயின் வில்லனாக இருக்க வேண்டும் அல்லது அவர் ஒரு முக்கிய மான துணைக் கதாபாத்திரத்திலாவது நடித்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக அனைவராலும் பின்பற்றப்பட்டது. பிரகாஷ்ராஜ் தென்னிந்திய அளவிலான முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். பாலிவுட் படங்களில் தடம் பதித்தார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெற்றிபெற்ற ‘போக்கிரி’, தொடங்கி ‘சிங்கம்’ வரை கொடூர வில்லன் கதாபாத்திரங்களின் மூலம் பிரகாஷ்ராஜ், ரசிகர்களை வசீகரித்த படங்களின் பட்டியல் நீளமானது

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் ‘எனக்கு அந்த நடிகரைப் பிடிக்கும்! உனக்கு இந்த நடிகரை பிடிக்குமா?’ -அப்படி இப்படி கச்சை கட்டிப் பிரிந்து கிடப்பார்கள் ரசிகர்கள். அதே சமயம், சில நடிகர்களை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும். பிரகாஷ் ராஜ்… அப்படியானவர். சகல ரசிகர்களும் கொண்டாடும் கலைஞர். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் அறிமுகமான நடிகர், நடிகைகளின் பட்டியல் மிகப்பெரியது. அந்தப் பட்டியலில் பிரகாஷ் ராஜ் மிக முக்கியமானவர்.

ஒரு படத்தில் ஹீரோ, அடுத்த படத்தில் கம்பீரமான போலீஸ் ஆபீசர், வேறொரு படத்தில் வில்லன், இன்னொரு படத்தில் காமெடி கலந்த கதாபாத்திரம் என ஆல்ரவுண்டராக அதகளம் பண்ணுவதே பிரகாஷ் ராஜ் ஸ்டைல்.

‘கில்லி’யில் த்ரிஷாவைத் துரத்தித் துரத்தி ‘லவ்யூடா செல்லம்’ என்று சொன்ன அதே பிரகாஷ் ராஜ், ‘அபியும் நானும்’ படத்தில், த்ரிஷாவுக்கு அப்பாவாக நடித்திருப்பார். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் மகளை கொடூரமான முறையில் பறிகொடுத்துத் தவிக்கும் போலீஸ் ரிட்டையர்டு பிரகாஷ் ராஜ், ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில், சிரித்துக் கொண்டே, காமெடி செய்து வில்லத்தனத்தில் வெளுத்துக் கட்டுவார்.

‘இருவர்’, ‘காஞ்சிவரம்’, ‘சொக்கத்தங்கம்’, ‘அசுரன்’ என்று பிரகாஷ் ராஜ் பின்னிப் பெடலெடுத்ததெல்லாம் தனிக்கதை. இந்தப் படங்களில் பிரகாஷ் ராஜ் கேரக்டர் அவரின் சிறந்த நடிப்பைக் காட்டும் ஆடுகளமாக அமைக்கப்பட்டிருக்கும்.  இப்படி அவர் ஏற்று நடித்த கேரக்டரில் தனி முத்திரையில் பதிப்பார். பல மொழிகளில் நடித்து, தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் ஒரு தனித்துவ நடிகராக பெயர் வாங்கிய பெருமைக்கு உரியவர் பிரகாஷ் ராஜ்.

நல்ல நடிகனாக இருக்கும் பிரகாஷ் ராஜ், நல்ல சினிமா மீதான காதலும் ஏக்கமும் கொண்டவர். அதனாலேயே ‘அபியும் நானும்’, ‘மொழி’ போன்ற அற்புதமான சில படங்களை தயாரிக்கவும் செய்தார். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்யும் கலைஞர்களில் ஒருவராக இருக்கும் பிரகாஷ் ராஜுக்கு, இன்று (மார்ச் 26) 57 வதுபிறந்த நாள்.

அப்பேர்ப்பட்ட கோலிவுட் செல்லத்துக்கு ஹேப்பி பர்த் டே!

Leave A Reply

Your email address will not be published.