இன்னிசை இளவரசி ஸ்ரேயா கோஷல் பர்த் டே டுடே!

3

ஸ்ரேயா கோஷல் குயில் குரலால் பாடிய அத்தனை பாடல்களும் தேன் போன்று காதினுள் நுழைந்து இதயத்துக்குச் செல்வதோடு அங்கேயே தங்கி நம்மோடு பயணிக்கும் . தெற்கிலிருந்து தென்றலாய் வீசிய குரல்களைப் போலவே, வடக்கிலிருந்து வீசிய வாடைக் குரல்களுக்கும் தமிழ் சினிமாவில் பஞ்சமில்லைதான். கான்பூரைப் பூர்விகமாகக் கொண்ட கே.ராணி, கொல்கத்தாவில் பிறந்து, வளர்ந்த பாம்பே ஜெயஸ்ரீ, மதுஸ்ரீ, இந்தியாவின் வானம்பாடி சகோதரிகள் லதா மங்கேஷ்கர் – ஆஷா போஸ்லே, சாதனா சர்கம், மால்குடி சுபா, மகாலஷ்மி ஐயர், டெல்லியில் பிறந்த கவிதா கிருஷ்ணமூர்த்தி எனத் தமிழ் தெரிந்த, தெரியாத பாடகியர் பலர் இருந்தாலும், பாடல்களின் எண்ணிக்கை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத ஒருவர் தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் விதம், விருதுகளின் எண்ணிக்கை ஆகிய அளவுகோல்களில் ஸ்ரேயா கோஷல் தொட்ட உயரத்தைத் தொட்டதில்லை என்பதே உண்மை. தமிழில் மட்டுமே 230 பாடல்களுக்கு மேல் பாடி முடித்துவிட்டார்.

இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு தவிர ஒரியா, மராத்தி, போஜ்புரி தவிர, ஜார்க்கண்ட் மாநிலத்தின் அங்கிகா மொழி, நேபாளி, பஞ்சாபி, துளு, ஆங்கிலம், பிரெஞ்சு எனப் பல மொழிகளில் சுமார் 5,000 பாடல்களைப் பாடியிருக்கும் இவருக்கு வயது 38.
இதன் காரணமாகவே நான்கு தேசிய விருதுகள், தென்னிந்திய மொழிகளையும் சேர்த்து மொத்தம் பதினைந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருது என ஸ்ரேயா கோஷல் வீட்டு வரவேற்பரை விருதுகளால் குவிந்து கிடைக்கும். மேற்குவங்கத்தில் 1984-ம் ஆண்டு பிறந்த ஸ்ரேயா கோஷலின் பெற்றோருக்கு இருந்த இசை ஆர்வத்தால் நான்கு வயதிலிருந்தே மகேஷ் சந்திர சர்மா என்ற இந்துஸ்தானி இசைக்கலைஞரிடம் ஸ்ரேயாவை இசை கற்க வைத்தனர்.இந்த விருதுகளுக்கு வெளியே அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் ‘ஸ்ரேயா கோஷல்’ நாள், லண்டனில் நாடாளுமன்ற விருது, மூன்று முறை ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் புகழ் பெற்றோர் பட்டியலில் இடம்பெற்றது மட்டுமல்லாது, உலகப் புகழ்பெற்ற மேடம் டுஸாட் மெழுகுச்சிலைக் காட்சியகத்தின் டெல்லி கிளையில் ஸ்ரேயாவுக்குச் சிலை அமைந்ததும் தனித்த கௌரவம்.

1984-ல் மேற்கு வங்கத்தில் பிறந்து, ராஜஸ்தானிலும் மும்பையிலும் வளர்ந்தவர். நான்கு வயதில் இசை கற்கத் தொடங்கி, பதினான்கு வயதில் முதல் தனி ஆல்பம் வெளியிட்டார். பதினாறாம் வயதில் ‘ஜீ’ தொலைக்காட்சியின் ‘ச ரி க ம’ நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசைப் பெற்றார். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியுடைய தாயார் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஸ்ரேயாவைப் பரிந்துரைக்க, இவருக்கு பன்சாலியின் ‘தேவதாஸ்’ படத்தில் ஐஸ்வர்யா ராய்க்குப் பின்னணிக் குரலாக முதல் பாடல் வாய்ப்பு கிடைத்தது.

உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஸ்ரேயா, பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு பாடல் பதிவுக்கு வந்தார். ‘தேவதாஸ்’ படத்தில் ஒன்றல்ல; ஐந்து பாடல்களைப் பாடினார். இவர் பாடிய ஐந்து பாடல்களுமே இவரை நட்சத்திரப் பாடகியாக்கியது என்றால், அவற்றில் ‘பைரி பியா’ பாடலுக்கு அந்தச் சிறிய வயதில் தேசிய விருது இவரைத் தேடி வந்தது. இவரின் தமிழ் உச்சரிப்பு தாளாத ஆச்சர்யம் என்றால் அதே ஆச்சரியம்… இந்தி ரசிகர்களுக்கும். இந்தியும் இவர் பின்னாளில் கற்றுக்கொண்ட ஒரு மொழியே!

தமிழில் ‘ஆல்பம்’ படத்தில் இடம்பெற்ற ‘செல்லமே செல்லம் என்பாயடா’ பாடல் தான் ஸ்ரேயா கோஷல் பாடிய முதல் தமிழ் பாடல். அதன்பிறகு ‘முன்பே வா என் அன்பே வா’ , வெயில் படத்தில் இடம்பெற்ற ‘உருகுதே மருகுதே’ இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இன்று தனது 37வது வயதில் அடியெடுத்து வைக்கும் பாடும் தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

Leave A Reply

Your email address will not be published.