இன்றைக்கும் பல பாடல்கள் மூலம் பலரின் மனங்களில் நீங்கா இடம்பிடித்திருக்கும் இசையமைப்பாளர் பரத்வாஜ் பிறந்த தினம்!
திருநெல்வேலி டிஸ்ட்ரிக்கில் பிறந்து டெல்லியில் வளர்ந்து சார்ட்டட் அக்கவுன்ட் முடித்து விட்டு அங்குள்ள பல்கலைக்கழகத்தில் கர்நாடக சங்கீதப் பிரிவில் படிச்சவரிவர். அதன் பயனாக அனைத்திந்திய வானொலியிலும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனத்திலும் சில நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார். அவற்றுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இசைத் துறைதான் தன் எதிர்காலம் என்று முடிவெடுத்து இப்போ சென்னையாகிப் போன மெட்ராஸூக்கு வந்தார்.
இங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள் என்று இசையமைத்துக் கொண்டிருந்தவர் 1994இல் வெளியான ‘சொகசு சூடா தரமா’ என்னும் தெலுங்குப் படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளர் ஆனார். மேலும் சில தெலுங்குப் படங்களுக்கு இசையமைச்சார்.
அச்சூழலில்தான் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சீடரான சரண், 1998-ல் வெளியான ‘காதல் மன்னன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் பரத்வாஜ். அஜித்தின் திரைவாழ்வில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்திய ‘காதல் மன்னன்’ படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன. குறிப்பாக ‘உன்னைப் பார்த்த பின்பு நான்’ என்ற காதல் பாடல் இளைஞர்களின் தேசிய கீதமானது. இன்றுவரை ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் பாடலாகத் திகழ்கிறது.
‘காதல் மன்னன்’ படத்தில் தொடங்கிய சரண்-பரத்வாஜ் கூட்டணி தமிழ் சினிமா ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த அதே நேரம் நீண்ட காலம் நீடித்த வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று. 2010இல் அஜித் மிகப் பெரிய நட்சத்திரமானதற்குப் பிறகு நடித்த ‘அசல்’ படம் வரை சரண் தன் அனைத்துப் படங்களுக்கும் பரத்வாஜையே இசையமைப்பாளராக்கினார். ‘அமர்க்களம்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘ஜெமினி’, ‘ஜேஜே’, ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’, ‘அட்டகாசம்’, ‘வட்டாரம்’ என இந்த அனைத்துப் படங்களிலும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்தவிட்ட பாடல்களும் தரமான பின்னணி இசையும் தீம் இசைப் பாடல்களும் அமைந்திருந்தன.
சரணுடன் ஒர்க் செய்து கொண்டே மற்ற பல இயக்குநர்களுடன் கைகோத்து பல வகையான படங்களில் பல வகை மாதிரிகளைச் சேர்ந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறார் பரத்வாஜ். பாலசந்தரின் தயாரிப்பான ‘பூவேலி’ படத்துக்கு இசையமைத்தார் பரத்வாஜ். அந்தப் படத்தில் ‘ஒரு பூ எழுதும் கவிதை’ என்னும் பாடல் சாகாவரம் பெற்றது. மற்ற பாடல்களும் வெற்றிபெற்றன.
இயக்குநர் சேரனுடன் இணைந்து அவர் பணியாற்றிய ‘பாண்டவர் பூமி’, ‘ஆட்டோகிராப்’ இரண்டிலும் மிகச் சிறந்த பாடல்கள் இடம்பெற்றன. ‘ஆட்டோகிராப்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த தன்னம்பிக்கைப் பாடல்களில் ஒன்று. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு கிளாசிக்கான ‘ஆட்டோகிராப்’ பரத்வாஜின் திரைவாழ்வில் மிக முக்கியமான படம்.
சசியுடன் அவர் பணியாற்றிய ‘ரோஜாக்கூட்டம்’ படத்திலும் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்த காதல் பாடல்கள் அமைந்திருந்தன. இயக்குநர் ஹரியின் அறிமுகப் படமான ‘தமிழ்’ படத்துக்கு இசையமைத்தவர் பரத்வாஜ். அந்தப் படம் விமரச்கர்களின் பாராட்டைப் பெற்று வெற்றியும் பெற்றது. இனிமையான பாடல்களும் அமைந்திருந்தன.
அடுத்ததாக அவர் ஹரியுடன் இணைந்த படம் ‘ஐயா’. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு வார்த்த சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்’ என்னும் பாடல் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் பாடலானது. தங்கர்பச்சானுடன் இணைந்து ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற படங்களிலும் சுந்தர்.சியுடன் ‘அரண்மனை’ படத்திலும் சிறந்த பாடல்களை வழங்கினார்.
‘ஜெமினி’, ‘ஆட்டோகிராப்’ ஆகிய இரண்டு படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம்பேர் விருதை வென்றார் பரத்வாஜ். ஒருவகையில் இதுவே அவருடைய திறமையையும் இசையமைப்பாளராக அவருடைய சிறப்புகளையும் பளிச்செனத் தெரிவித்துவிடும்.
அதிலும் ‘ஜெமினி’ படத்தில் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்த ‘ஓ போடு’ போன்ற குத்துப் பாடலையும் அவரால் கொடுக்க முடியும். அதே படத்தில் ‘பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்துவிட்டான்’ போன்ற உயிரை உருக்கும் காதல் பாடலையும் கொடுக்க முடியும். ‘ஆட்டோ கிராப்’ படத்தில் மென்மையான காதல் மற்றும் உணர்ச்சிகர சூழ்நிலைகளுக்கான பாடல் களையும் அவரால் கொடுக்க முடியும். மெலடி, டூயட். அதிவேக பாடல், உணர்ச்சிகரமான பாடல், ஆட்டம் போடவைக்கும் பாடல் என அனைத்து வகையான பாடல்களையும் அவரால் சிறப்பாகக் கொடுக்க முடியும். இவை அனைத்தையும் அவர் சமமாக மதித்தார் என்பது முக்கியமான விஷயம். குறிப்பாக குத்துப்பாட்டுகள் தாழ்வாகப் பார்க்கப்பட்ட காலத்தில் ‘ஓ போடு’ பாடல் ஒரு புரட்சியையே நிகழ்த்தியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்த அந்தப் பாடல் குத்துப் பாடல்கள் மீதான பார்வையையே மாற்றியது என்று சொன்னால் மிகையில்லை. .
ஆனால், அதை விட (தமிழ்) உலக மக்களுக்காக ஒரு நல்ல காரியத்தை அவர் செய்துள்ளார். ஆம், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் 1330 குறளுக்கும் தனித்தனி டியூன்கள் போட்டு மெகா ஆல்பம் தயார் செய்து அதையும் ஹிட் அடித்திருக்கிறார்
அப்பேர்ப்பட்ட இசை சூரன் பரத்வாஜூக்கு ஹேப்பி பர்த் டே சொல்வதில் ஃபிலிம் நியூஸ் 24 x 7 மகிழ்ச்சி கொள்கிறது