இயக்குநர் ஹிட்ச்சாக் பிறந்த நாள் – சில நினைவுகள்!

3

உலக திரை ரசிகர்களை மிரட்டிய இயக்குநர் ஹிட்ச்சாக் பிறந்த நாள் – சில நினைவுகள்!?

ஆல்பிரட் ஹிட்ச்காக் 1899ம் ஆண்டில் இதே ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார்.

பொதுவாக 13 என்பது மேற்கத்திய உலகினருக்கு அதிர்ஷ்டமில்லாத எண்.

ஆனால் இவருக்கு இதுவே ராசியான எண்ணாக அமைந்துவிட்டது.

பிரிட்டனில் சில மௌனப்படங்களை இயக்கிய பிறகு அவர் ஹாலிவுட்டுக்கு வந்தார்.1956ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் சினிமா கலையின் புதிய சகாப்தத்தை உருவாக்கினார்.

ரசிகர்களை திகிலடைய வைக்கும், முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட திரைக்கதைகளையே அவர் படமாக்கினார்.

ஆனாலும் காட்சி வழியே கதை சொல்லும் பாணியால் உலகையே வியக்க வைத்தார். தஸ்தவஸ்க்கியின் கிரைம் அன்ட் பனிஷ்மென்ட் எப்படி ஒரு மர்ம நாவல் போல தெரிந்தாலும் அதைக் கடந்த தத்துவார்த்தப் பிரச்சினைகளைப் பேசுகிறதோ அதைப் போலவே, ஹிட்ச்காக்கின் திரைப்படங்களும் தத்துவ சாயை கொண்டிருந்தன.

மரணபயம், அச்சம், துரோகம் போன்ற காரணங்களால் அந்தப் படங்கள் உளவியல் மற்றும் சமூகவியல் ஆவணங்களாகவும் கருதப்பட்டன.

ஹிட்ச்காக் ஹாலிவுட்டுக்கு வந்த போது ஸ்டூடியோ முறை பிரபலமாக இருந்தது.தயாரிப்பு, விநியோகம், திரையிடுதல் போன்ற சகல விஷயங்களிலும் ஈடுபட்டு பிரம்மாண்டமான நெட்வொர்க்கை கொண்டிருந்த 5 முன்னணி ஸ்டூடியோக்களில் நடிகர்கள் உட்பட அனைவரும் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். ஸ்டூடியோ முத்திரைக்காகவே படங்கள் பாராட்டும் புகழும் பெற்றன.

தவறான குற்றத்தின் வலைக்குள் வந்து சிக்கிக் கொள்ளும் ஹிட்ச்காக்கின் கதாபாத்திரங்கள் தாஸ்தயவஸ்கியின் நாவல் பாத்திரங்களுக்கு நிகரான மதிப்பைப் பெற்றன.

ஆசை, பொறாமை, சந்தேகம் போன்ற குணங்களால் ஏற்படக் கூடிய வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உணர்ச்சியின் மிகுதியால் நிகழ்ந்துவிடும் கொலை போன்ற குற்றங்களின் மறுபக்கத்தை ஹிட்ச்காக்கின் படங்கள் ஒளியூட்டின.

இதனால்தான் தாஸ்தயவஸ்கி, காப்காவுக்கு இலக்கியத்தில் உள்ள இடம் சினிமாவில் ஹிட்ச்காக்குக்கு உண்டு என்றார் திரைப்பட மேதை ட்ரூபோ.

ஹிட்ச்காக்கை பேட்டி கண்ட அவர் அதை ஒரு புத்தகமாக்கியிருக்கிறார். திரைப்படத்தின் நுட்பங்களை அறிய விரும்பும் ரசிகர்களுக்கு அந்தப் படம் ஒரு பிரமாதமான ஆவணம்.

திரைப்படம் குறித்த ஹிட்ச்காக்கின் ஆழமான எண்ணங்கள் அதில் பதிவாகியுள்ளன.அவருடைய திரைக்கதை உத்திகள் ரசிகர்களுக்கு அதிகபட்ச திகிலையும் தவிப்பையும் ஏற்படுத்தும் நோக்கம் உடையவை.

அழகான பெண்களை கொலை செய்வதற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் என்று தனது படப் பாத்திரங்களைப் பற்றி ஹிட்ச்காக் கூறுகிறார்.

ஓர் அழகான பெண் அநியாயமாக கொலை செய்யப்படும் போது ஏற்படும் அனுதாபம் மொத்தமும் அவளுக்கு கிடைத்துவிடும் என்ற அவரது கணிப்பு சரியானதுதான்.

சைக்கோ படத்தில் கதாநாயகி ஷவரில் குளி்க்கும்போது கொலை செய்யப்படும் அந்த பிரசித்திப் பெற்ற காட்சி சினிமா ரசிகர்களால் மிகவும் சிலாகிக்கப்படுகிறது.

அழகான கழுத்து வெட்டுவதற்கு ஆசையைத் தூண்டுவது என்ற விதமாக படுகொலை படங்களின் தந்தையான ஹிட்ச்காக் கூறுவார் என்றாலும் அவர் உண்மையில் போலீஸ்காரர்களைப் பார்த்தால் பயந்த சுபாவம் உடையவராகவே இருந்தார்.

ஒரு படத்தின் வில்லன் எவ்வளவு வெற்றிகரமாக செயல்படுகிறானோ அந்த அளவுக்கு படம் வெற்றி பெரும் என்பது அவர் கணிப்பு.

மிகச் சாதாரணமான பின்புலங்களில் மிக அதீதமான நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக காட்டுவது அவருக்குப் பிடித்தமானது.

இருள் கொண்ட திகிலான ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒரு கொலை நடப்பதைக் காட்டுவதை விட மக்கள் புழுங்கும் இடத்தில், கூட்டத்தின் இடையே வில்லன் புகுந்து கொலை செய்து தப்பிச் செல்வது பரபரப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்த ஹிட்ச்காக் இந்த உத்தியையே பின்பற்றினார்.

தி மேன் ஹூ நியு டூமச் படத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் கொலை நடக்கும் போது ஏற்பட்ட பரபரப்பை நினைத்துப் பாருங்கள்.

ரசிகர்களை அது அந்தளவுக்கு திடுக்கிட வைத்தது.

தனக்கு வலுவான விஷூவல் மைன்ட் இருப்பதாக ஹிட்ச்காக் ஒருமுறை கூறினார்.

படத்தின் திரைக்கதை தயாரானதும் அதை முழுவதுமாக காட்சி வடிவில் கற்பனை செய்துக் கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு அந்த திரைக்கதையை புரட்டிக் கூடப் பார்க்க மாட்டாராம். அதை தன் உள்ளத்தால் அணு அணுவாக அறிந்து வைத்திருப்பதாக அவர் கூறுவார்.

ஹிட்ச்காக் படங்களில் பெண்களுடனான மனித உறவுகளுக்கு கூடுதல் அழுத்தம் தரப்பட்டிருந்தது.

குறிப்பாக தாயுடன் மனிதன் கொள்ளும் உறவு அவருடைய படங்களில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.

நடிகர்களை மந்தையைப் போல் நடத்தியவர் என்று ஹிட்ச்காக் மீது புகார் உண்டு.

ஆனால் நடிப்புக்கு என வந்துவிட்ட பிறகு அவர்கள் திரைக்கதைக்கு நியாயம் செய்ய வேண்டும் என்றும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியவர் ஹிட்ச்காக்.

60 ஆண்டு திரையுலக வாழ்வில் 53 படங்களை இயக்கியவர் ஹிட்ச்காக்.

Rear Window, A Man who knew too much, 39 Steps, Psycho, Vertigo, Rebecca போன்ற படங்கள் அவருடைய சாதனைகளாக கருதப்படுகின்றன.

அகடமி விருதுகள் அவருக்கு பலமுறை நிராகரிக்கப்பட்ட போதும் ஸ்பெல் பவுண்ட் என்ற படத்தின் இசைக்கு அகடமி விருது கிடைத்தது.

கலிபோர்னியாவில் தமது இறுதிக்காலத்தைக் கழித்த அவர் 80 வது வயதில் 1960ம் ஆண்டில் காலமானார்.

எந்த வித திடுக்கிட வைக்கும் மர்மம் இல்லாமல் இயற்கையாகவே அவர் உயிர் பிரிந்தது.

ஆனாலும் மரணமும் எப்போது வரும் என்று தெரியாத ஒரு மர்ம வில்லன்தானே.

தகவல் உதவி: செந்தூரம் ஜெகதீஷ்

Leave A Reply

Your email address will not be published.