ஹாஸ்டல் – விமர்சனம்!

1

டிப்பு: அசோக்செல்வன், பிரியா பவானி சங்கர், நாசர், கிரிஸ், சதிஷ், ரவிமரியா, முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, முண்டாசுபட்டி ராமதாஸ், யோகி

தயாரிப்பு: ஆர்.ரவீந்திரன்

இசை: போபோ சசி

ஒளிப்பதிவு: பிரவின்

இயக்கம்: சுமந்த் ராமகிருஷ்ணன்

அசோக் செல்வன் ஹாஸ்டல் ஒன்றில் தங்கி காலேஜில் படிக்கிறார். அந்த விடுதியின் பொறுப்பாளர் நாசர். காவலாளி ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ். மாணவர்கள் மட்டுமே தங்கும் அந்த விடுதியில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு நாள் இரவு மட்டும் தங்குவதற்கு உதவி செய்தால் வேண்டுமளவு பணம் தருகிறேன் என்று சொல்லி அசோக் செல்வனிடம் சொல்கிறார் ப்ரியா நாயகிபவானி சங்கர். பணத் தேவையுடன் விழி பிதுங்கி நிற்கும் அசோக் செல்வனும் அதற்கு ஒப்புக் கொண்டு ப்ரியா பவானி சங்கரை ஹாஸ்டலுக்குள் அழைத்துச் செல்கிறார். பொழுது விடிவதற்குள் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்ற திட்டமிடலுடன் உறங்குகிறார் ப்ரியா. நிம்மதியாக தூங்கி விட்ட காரணத்தால் ப்ரியாவால் நினைத்தப்படி விடுதியிலிருந்து வெளியேற முடியவில்லை. இதற்கிடையே விடுதிக்குள் பெண் இருக்கிறார் என்று சொல்லும் ராம்தாஸின் பேச்சை நம்ப மறுக்கும் நாசர் விடுதியை சோதனை செய்ய முடிவு செய்கிறார். அதிலிருந்து ப்ரியாவை தப்பிக்க வைக்க அசோக் செல்வனும் அவருடைய நண்பர்களும் முயற்சி செய்கிறார்கள். மாணவர்களின் முயற்சிக்குப் பலன் கிடைத்ததா, இல்லையா? என்பதை நகைச்சுவையோடு சொல்வதுதான் கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், எப்பவும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவார். அதற்காக, இம்முறை கல்லூரி மாணவன் என்பதால் உடலை மெலிய வைத்தெல்லாம் வந்தாலும் நடிப்பில் பெரிய முன்னேற்றம் இல்லை. நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், மிடில் பட்ஜெட் நயன்தாராவாக வந்து ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொள்கிறார். காதல் காட்சி இல்லையென்றாலும் ஸ்கோர் செய்கிறார்.

நண்பராக வரும் சதீஷ், நாசர், ராம்தாஸ் ஆகியோர் தங்களில் கேரக்டருக்கு தேவையான ஆக்டிங்கை ஃபர்பெக்டாக வழங்கியிருக்கிறார்கள்.

படத்துக்கு பெரிய பலம், ரவிமரியா. வழக்கமான ‘சவுண்ட்’ஆன நடிப்பு என்றாலும் வழக்கம்போலவே ரசிக்க வைக்கிறார். அதுவும் பேயிடம் அடிபடும் காட்சியில் அசத்தி இருக்கிறார். (மனிதருக்கு எங்கெங்கு காயமோ பாவம்!)

ஒரே கதைக்களம் என்றாலும் போரடிக்காமல கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். பாடல்களை ரீமேக் செய்வார்கள். இந்தப் படத்தில் பின்னணி இசையை ரீ மேக் செய்திருக்கிறார், ‘போபோ’ சசி. ரசிக்கவைக்கிறது.

காமெடி என்று நம்பி படம் பார்க்க வரும் ரசிகர்களை மகிழ வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் படம் எடுத்திருக்கும் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் வெற்றி அடைந்து விட்டதாகவே நினைக்க வைக்கிறது ஹாஸ்டல்

Leave A Reply

Your email address will not be published.