சிவகுமாரால் புகைப்பதை விட்டேன்!

9

புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டது தொடர்பாக, பிரபல குணச்சித்திர நடிகர், ‘டில்லி’ கணேஷ்: சினிமா உலகில் நான் நுழைந்த புதிதில், புகைப்பிடிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது.

நடிகர் சிவகுமாருடன் இணைந்து, பல படங்களில் நடித்துள்ளேன். அப்படி நடிக்கும் போது, அவர் முன் அமர்ந்து கூட, சிகரெட் பிடித்துள்ளேன்.

சிகரெட் போன்ற எந்த தீய பழக்கங்களும் இல்லாத சிவகுமார், நான் புகைப்பிடிப்பதை, சில சமயம் கூர்ந்து பார்ப்பார்; ஒன்றும் சொல்ல மாட்டார். அதனால் தான் தொடர்ந்து, அவர் முன் சிகரெட் பிடித்து வந்தேன்.

அவர் பார்வை, எப்போதும் கூர்மையாகவே இருக்கும். ஒரு முறை காரணத்தோடு பார்த்தார். அந்த பார்வையின் அர்த்தம் எனக்கு புரியவில்லை.

தொடர்ந்து, வழக்கம் போல சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒன்றும் சொல்லாத அவர், இரண்டு நாட்கள் கழித்து, என்னை அழைத்தார்.

அப்போது நான் சிகரெட் பிடிக்கவில்லை. சிவகுமார், ‘என்ன மிஸ்டர் கணேஷ், சிகரெட் பிடிக்கவில்லையா… சிகரெட் எங்கே?’ என கேட்டார்.

நான், ‘இப்பத் தான் பிடித்தேன்; கொஞ்ச நேரம் கழித்து தான் அடுத்து பிடிப்பேன்’ என்றேன்.

‘ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள்?’ என்றார், சிவகுமார். ‘சரியாக தெரியவில்லை சார்… நான், ‘செயின் ஸ்மோக்கர்’ கிடையாது; எப்பப்ப மூடு வருகிறதோ, அப்பப்ப சிகரெட் பிடிப்பேன்’ என்றேன்.

அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

அருகில் இருந்த இயக்குனர் ஒருவர், என்னை தனியாக அழைத்தார். ‘சிவகுமார் எவ்வளவு பெரிய கலைஞர். அவர் முன் சிகரெட் பிடிக்கலாமா?’ என்றார். மேலும், ‘அவருக்கு சிகரெட் பிடிக்காது’ என்றார்.

அதன் பின், சிவகுமார் முன் சிகரெட் பிடிப்பதை நான் விட்டு விட்டேன். ஆனால், சிவகுமார் விடவில்லை என்னை. ‘என்ன மிஸ்டர் கணேஷ், சிகரெட்டோடு உங்களை ரொம்ப நாளாச்சு. ஏன் பிடிக்கிறது இல்லையா?’ என்றார்.

நான் உடனே, ‘ரொம்ப சாரி சார். இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்’ என்றேன்.

அதற்கு சிவகுமார், ‘எனக்கு மரியாதை கொடுக்கவில்லை என நினைத்து, அப்படி கேட்கவில்லை. வீணாக காசு கொடுத்து, வியாதியை வாங்குகிறீர்களே என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டேன்’ என்றார்.

மேலும், ‘இதற்கு காரணம், நீங்க ரொம்ப காலத்திற்கு உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பது தான்; வேறு ஒன்றும் இல்லை’ என்றார்.

இது நடந்தது, 1978ம் ஆண்டு. சிவகுமார் என்னிடம் சொன்ன அறிவுரை, இப்போது வரை என் நினைவில் நிற்கிறது.

அவர் சொன்ன பிறகு, சிகரெட் பக்கமே நான் செல்லவில்லை. புகைப்பதை அடியோடு விட்டு விட்டேன். எல்லா புகழும் சிவகுமாருக்கே!

Leave A Reply

Your email address will not be published.