பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ என்ற படத்தை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்துள்ளார். இது குடிகார தந்தைக்கும், மகனுக்குமான உறவு பற்றிய கதை. கூழாங்கல் தலைப்பை போல் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. இத்திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்வது என முடிவு செய்துள்ளோம் என்று நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தெரிவித்து இருந்தனர். கூழாங்கல் படம் நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிட தேர்வானது. இதற்காக படக்குழுவினருடன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ரோட்டர்டம் சென்று இருந்தனர். அங்கு படம் திரையிடப்பட்டு உயரிய டைகர் விருதை பெற்றுள்ளது. ரோட்டர்டம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.