இறுதிப் பக்கம் (திரைப்பட விமர்சனம்)

10

படம்: இறுதிப் பக்கம்

நடிப்பு: ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா சீனிவாசன், விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ், சுபதி ராஜ்,

இசை: ஜோன்ஸ் ரூபர்ட்

ஒளிப்பதிவு: பிரவின் பாலு

தயாரிப்பு: சிலம்பரசன் (கிருபாகர்), செல்வி வெங்கடாசலம்

இயக்கம்: மனோ வெ.கண்ணதாசன்

பிரபல எழுத்தாளர்களின் நாவல் அவ்வப்போது படமாகி வெற்றியும் பெறுகிறது. ஆனால் ஒரு நாவல் நேரடியாக இறுதிப் பக்கம் என்ற திரைப்படமாகி இருக்கிறது. இப்படியொரு சஸ்பென்ஸ் த்ரில்லர் நாவலே படமாக வருவது சமீபத்தில் இதுவே புதியது. அதற்காக இயக்குனர் மனோ வெ கண்ணதாசனுக்கு கைகுலுக்கி பாராட்டு தெரிவிக்கலாம்

தன் வாழ்க்கையில்  நடக்கும் சம்பவங்களை கதையாக எழுதும் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். அவளை கொன்றதுயார் என்ற ஒரு வரிக் கதைதான் இரண்டு மணிக்கும் அதிகமாக திரையில் ஓடும் இறுதிப்பக்கம் என்ற படமாகி இருக்கிறது.

இயல் என்ற பாத்திரத்தில் அம்ருதா இயல்பாக நடித்திருப்பதாலோ என்னவோ அவரது கதாபாத்திரத்துக்கும் பொருத்தமாக இயல் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. சிவப்பாக ஆண்களை கவரும் வசீக்ரத்துடன் வரும் அம்ருதா காதல் விளையாட்டுக்கள் விளையாடுவார் என்று எதிர்பார்த்தால் அவர் அதற்கும் மேல் சென்று ஆண் பெண் உறவு விளையாட்டு விளையாடி அதிர்ச்சி தருகிறார்.

தன்னை அன்பாக நேசிக்கும் விக்னேஷிடம் மனதை பறிகொடுத்து காதலில் விழும் அம்ருதா பிற ஆண்களிடம் படுக்கையை பகிர்ந்து அதன் மூலம் வரும் அனுபவத்தை கதையாக எழுதுவதாக கூறும்போது மின்சார ஷாக்காக உடல்முழுவதும் அதிர்வலைகளை படரவிடுகிறார். இப்படியொரு கதாபாத்திரத்தை அம்ருதா துணிந்து ஏற்றதற்கு அப்ளாஸ் அள்ளுவார்.

ஹீரோ விக்னேஷ் எதர்த்தமான காதலனாக மின்னுகிறார். தன் காதலி பிற ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை கூசாமல் தன்னிடமே சொல்லும்போது எந்த ஆணுக்குத்தான் கோபம் வராது என்ற உணர்வை நடிப்பின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அதேபோல் மிதுன் பாத்திரத்தில் வரும் ஸ்ரீராஜ் வில்லத்தனம் தொணிக்க நடித்து கொலைக்காரன் இவராகத்தான் இருக்கும் என்ற சந்தேக பார்வையை தன் மீது விழவைப்பது கதைக்கு திருப்பம் தருகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ராஜேஷ் பாலசந்திரன் மலையாள ஹீரோ போல் இயற்கையான நடிப்பை  நூறு சதவீதம் வெளிப்படுத்தி சக நடிகர்களுக்கு சரி போட்டியாக வலம் வருகிறார். தன்னுடன் உதவியாளராக இருந்து கொலைகாரனை கண்டுபிடிக்கும் வேலையில் ஈடுபடும் பெண் போலீஸ் கிரிஜாவை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் ராஜேஷின் செயல் அவரது கதாபாத்திரத்தின் திறமையை வெளிக்கொண்டு வருகிறது. அடுத்தடுத்து அவர் கொலைக்காரனை கண்டுபிடிக்க காட்டும் வேகம் படத்தை ராக்கெட் வேகத்தில் கிளைமாக்ஸுக்கு இழுத்து சென்று விடுகிறது.

இயக்குனர் மனோ வெ கண்ணதாசன் கோலிவுட்டில் தேடப்படும் இயக்குனராக மிளிர்வதற்கு இந்த ஒரு படமே போதும்.

பிரவின் பாலு ஒளிப்பதிவு. கதையின் போக்கிற்கு ஏற்ப இயல்பாக காட்சிகளை பட,மாக்கி இருக்கிறது.

ஜோன்ஸ் ரூபன் இசையும்  கதையோடுயொட்டி பயணிப்பது இதம்.

இறுதிப் பக்கம்- இன்ப அதிர்ச்சி.

 

– க. ஜெயச்சந்திரன்

 

Leave A Reply

Your email address will not be published.