ஜெய் பீம் (திரைப்பட விமர்சனம்)

9

படம்: ஜெய்பீம்

நடிப்பு: சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், தமிழரசன், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கரன்,

இசை:சான் ரோல்டன்

ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.கார்த்திக்

தயாரிப்பு: 2 டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா, ஜோதிகா

இயக்கம்: தா செ.ஞானவேல்

ரிலீஸ்: பிரைம் வீடியோ  (ஒ டி டி)

இருளர் இனத்தை சேர்ந்த ஜோடி மணிகண்டன், லிஜோ மோல் கல்வீட்டு கனவில் காலத்தை கழிக்கின்றனர். வறுமை அவர்களை வாட்டி எடுக்கிறது. விளை நிலத்தில் பதுங்கி இடக்கும் எலிகளை உண்டு வாழ்கின்றனர். ஊர் பணக்காரர் வீட்டில் திடீரென்று பாம்பு புகுந்துவிட அதை பிடிக்க மணிகண்டனை அழைத்து வருகின்றனர்.  அடுத்த நாள் அந்த வீட்டில் பணம் நகை திருடு போகிறது. மணிகண்டன்தான் கொள்ளையடித்துச் சென்றதாக போலீசில் புகார் தரப்படுகிறது. மேலிடத்து பிரஷர் காரணமாக மணிகண்டனையும் அவரது உறவினர்களையும் போலீஸ் பிடித்து சித்ரவதை செய்து விசாரித்து கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ள சொல்கின்றனர்.  அதற்கு மணிகண்டன் மறுக்கிறார். திடீரென்று சிறையிலிருந்த கைதிகள் தப்பிவிட்டதாக போலீஸ் அவர்களை தேடுகிறது.லாக்கப்பிலிருந்த கணவனை காணவில்லை என்பதை அறிந்து பிஜோமோல் கதறுகிறார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் சமூக சேவகர் ஒருவர் மூலமாக ஐகோர்ட் வழக்கறிஞர் சூர்யாவை சந்தித்து நடந்த விவரங்களை சொல்கிறார் லிஜோ. அவரது பரிதாப நிலையை கண்டு கோபம்கொள்ளும் சூர்யா கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து நீதிக்காக போராடுகிறார். அவரால் அதிகாரவர்கத்தின் அடக்குமுறைகளை மீறி நீதி பெற முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

மணிகண்டன், லிஜோ மோல் இருளர் பழங்குடி மக்களாகவே மாறியிருக்கின்றனர். மெல்ல மெல்ல சுவாரஸ்ய வசனங்களுடன் காட்சி நகர்ந்துக்கொண்டிருக்க மணிகண்டன் மீது போலீஸில் புகார் கொடுத்தபிறகு கதை வேகம் எடுக்கிறது..மணிகண்டனை போலீஸ் பிடித்ததும் அவரை தாறுமாறாக தாக்கி திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லும்போது போலீஸ் அராஜகம் கட்டவிழிந்து  ஆட்டம்போட்டிருக்கிறது.

லாக்கப்பில் இருந்த மணிகண்டனும் மற்ற இருவரும் தப்பிவிட்டதாக போலீஸ் கூறுவது அவர்கள் நடத்தும் நாடகம் என்று  தெரிந்தாலும் சம்பவங்களை நிஜம்போல்  சித்தரிக்க அவர்கள் சொல்லும் பொய்க்கு மேல் பொய் கதையை டென்ஷனுடன் கொண்டு செல்கிறது.

சூர்யா எண்ட்ரிக்கு பிறகு படம் கோர்ட் வளாகத்துக்குள் வட்டமடிக்கிறது. போலீஸ் தரப்பில் கண்ணால் கண்டசாட்சி, தப்பியததற்கான ஆதாரம் என வலுவான ஆதாரங்கள் இருந்தும் அதை சட்ட ரீதியாகவும் தன்னுடைய தனிப்பட்ட முயற்சியாலும் உடைத்து நொறுக்குகிறார் சூர்யா.

வழக்கறிஞர் சந்துருவாக உருமாறிவிட்ட சூர்யா நீதிபதிகள் முன் வாதாடும் காட்சிகள் அனல் தெறிக்க விடுகிறார். தர்மம் தோற்றுவிடுமோ என்ற நிலை உருவாகும்போதெல்லாம் புதிய வாதங்களை முன்வைத்தும்,  புதிய சாட்சிகள், குறுக்கு விசாரணை நடத்தியும் வாதாப் போராட்டங்கள் நடத்தி கைதட்டல் பெறுகிறார்,

வில்லாதி வில்லனாக நடித்துக்கொண்டிருந்த பிரகாஷ்ராஜ் இப்படத்தில் நீதி விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்று கண்ணியமான நடிப்பை வெளியிட்டிருக்கிறார். கீறியும் பாம்புமாக சூர்யாவும் பிரகாஷ்ராஜூம் பார்வையால் மோதிக்கொண்டாலும் அவர்களுக்குள் எழும் சவால் நீதியை வெளிக்கொண்டு வருவது அழுத்தம் நிறைந்தது.

2 டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில்  சூர்யா, ஜோதிகா தயாரித்திருக்கின்றனர். த.செ.ஞானவேல் உண்மைக் கதையை மையமாக வைத்து காட்சிகளை பரபரப்பு குறையாமல் இயக்கி இருக்கிறார்.

சான் ரோல்டன் இசை, காட்சிகளை கண்கள் மட்டுமல்ல காதுகளும் உருகும் வகையில் காற்றலையாய்  பாய்கிறது.

எஸ். ஆர் கார்த்திக் ஒளிப்பதிவு வறுமை, சித்ரவதை காட்சிகள், கோர்ட் காட்சிகள் என ஒவ்வொன்றுக்கும் ஒரு கலர்டோன் உருவாக்கி மனதில் புகைப்படம்போல் காட்சிகளை பதியம்போடுகிறது.

ஜெய் பீம் –  நீதிக்காக போராடும் ஒரு வழக்கறிஞரின் தீராதகோபம்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.