காத்துவாக்குல ரெண்டு காதல் – விமர்சனம்

1

டிப்பு : விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு

தயாரிப்பு : ரவுடி பிக்சர்ஸ் & செவன் ஸ்கீரின் ஸ்டியோஸ்

இசை : அனிருத்

இயக்கம் : விக்னேஷ் சிவன்

 

ஹீரோ விஜய் சேதுபதி பிறந்ததிலிருந்து துரதிஷ்டசாலி என்ற நினைத்தபடி வாழும் மனுசன். அதாவது அடைமழை பெய்யும் போது இவர் வெளியே போனால் அந்த மழை கூட நின்றுவிடுமாம். அப்பேர்பட்டவருக்கு திடீரென்று நேருக்கு மாறாக நடக்கிறது. அதாவது பகலில் கார் டிரைவராகவும் இரவில் பவுன்சராகவும் வேலை பார்த்து வாழ்க்கையை ஓட்டி வரும் சூழலில் டிரைவராக வேலை செய்யும்போது நயன்தாராவையும், பவுன்சர் வேலை செய்யும்போது சமந்தாவையும் காதலிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த காதல் பிரச்சனையாக மாறுகிறது. இறுதியில் விஜய் சேதுபதி காதல் பிரச்சனையை எப்படி சமாளித்தார்? நயன்தாரா, சமந்தா இருவரில் யாருடன் காதலில் ஒன்று சேர்ந்தார்? என்பதே படத்தின் கதை.

பக்கா ரொமான்ஸ் கலந்த கதைகளை குளோப்ஜாமூன் சாப்பிடுவது போல் கையாண்டு பேர் வாங்கியவர் விக்னேஷ் சிவன். அந்த வகையில் இதிலும் புகுந்து விளையாடி இருக்கிறார். சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதி மூன்று பேருக்கும் இடையில் நடக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் சுவாரஸ்யமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. சமந்தாவை காதலிக்க தொடங்கும் காட்சியாகட்டும் நயன்தாராவை லவ்வும் சீன் ஆகட்டும் – ஒவ்வொன்றும் நம்பும்படி அழகாய், ரசிக்கும்படி வைத்துள்ளார். சமந்தாவும், நயன்தாராவும் அழகிலும் சரி நடிப்பிலும் சரி போட்டி போட்டுக் கொண்டு சகல தரப்பினரையும் கவர்கிறார்கள். விஜய் சேதுபதியுடனான காட்சிகளை விட இவ்விரு அழகிகளால்தான் படமே வழுக்கிக் கொண்டு செல்கிறது.

ஆனாலும் நாயகன் விஜய் சேதுபதி, ராம்போ ரோலில் ரசிகர்களை பெரிதும் கவர்கிறார். அதிலும் இது லவ் சப்ஜெக்ட் என்பதை உணர்ந்து சின்ன சின்ன அசைவுகள் மற்றும் முக பாவனைகளில் கூட கொஞ்சமும் ரொமான்ஸ் எக்ஸ்பிரஸன்ஸ் இல்லை என்றாலும் கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசை என்பதை சொல்லாமல் பேசும் வசனங்கள், காபியை டீயையும் சாசரில் இணைத்து ஊற்றி குடிக்கும் காட்சி, ஒரு கட்டத்தில் ‘ஐ லவ் யூ டூ.. – ஐ லவ் யூ டூங்க’ என்று சொல்லும் காட்சிகளில் எல்லாம் ரசிகனும் ‘ஐ லவ் யூ டூ’ என்று வாய் விட்டுச் சொல்ல வைக்குமளவு ஏகப்பட்ட ஹோம் ஒர்க் செய்து வந்து நடித்திருக்கிறாற் என்பது அப்ப்பட்டமாக தெரிகிறது.

ரியாலிட்டி டாக்-ஷோ நிகழ்ச்சி காம்பியராக வரும் இளைய திலகம் பிரபு கொஞ்சம் போஷாக்கான சின்னத் தம்பியாகவே வந்து கவர்கிறார். இவர்களுடன் கலா மாஸ்டர், உசேன், மாறன், கிங்ஸ்லி, பிரபு, சித்ரா லட்சுமணன்,கூட்டணியும் காத்து வாக்கில் பல காமெடிகளை கணக்கு வழக்கு இல்லாமல் அவிழ்த்து விடுகிறார்கள். ஆனால், டயலாக்கே இல்லாமல் இவர்கள் எல்லோரையும் ஓவர்டேக் செய்து சிரிக்க வைக்கிறவர் ‘கராத்தே’ உசேன் என்பது நிஜம்

படத்திற்கு பெரிய பலம் அனிருத்தின் இசை. பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார். பாடல்கள் அனைத்தும் சூப்பர். ஸ்ரீதரின் ஒளிப்பதிவோடு பார்க்கும்போது கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

அந்த பக்கமோ அல்லது இந்த பக்கமோ கொஞ்சம் பிசகினாலும் தப்பாகி போக வாய்ப்புள்ள ஒரு முக்கோண காதல் கதையை அநாயசமாக கையாண்டு வெற்றி கண்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். படத்தில் கொஞ்சம் ஆபாசமோ, பெரிய ட்விஸ்டோ, பரபரப்பான பஞ்ச் வசனமோ, அதிரவைக்கும் கூஸ்பம்ப் காட்சிகளோ இல்லாமல் இருந்தாலும் ஜஸ்ட் லவ்., லவ் மற்ரும் லவ் சீன்களை மட்டுமேக் கொண்டு கலகலப்பாக ரசிகர்களுக்கு பிடித்தவாறு அமைத்து படத்தை பக்காவாக கரை சேர்த்துள்ளார்.

மொத்தத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் -ரசிக்கலாம்

Leave A Reply

Your email address will not be published.