கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினமின்று..

2

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினமின்று..

சிரிப்பு… இந்த உலகத்தின் மாமருந்து… வாய் விட்டுச் சிரித்தால்   விட்டுப் போகும் – இது ‘கிழமொழி’ மட்டுல்ல, இன்றைக்கு உள்ள ‘யூத்’களுக்கும் தேவை யான ‘இளமொழி’. மனிதர்களை மிருகங் களிடம் இருந்து பிரித்து காட்டும் ஒரே அற்புதம் இந்த சிரிப்பு மட்டும்தான். இதை சொன்னவர் தென்னிந்தியாவின் சார்லி சாப்ளின், கலைவாணர், நகைச்சுவை வேந்தர், சிந்தனைச் சிற்பி, என்.எஸ்.கிருஷ்ணன் தான்.

அவருக்கு பிறகு தமிழ்த்திரையுலகில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் உதயமானாலும், ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் என்.எஸ்.கே. காரணம் சமுதாயத்தின் தேவைகளை பல சீர்திருத்தக் கருத்துகளை நகைச்சுவை மூலமாக நாட்டு மக்களுக்கு கொடுத்தார். எத்தனையோ சொல்லலாம். உதாரணத்துக்கு சில.. ‘மணமகள்’ படத்தில் ஒரு காட்சி

டி.ஏ.மதுரம் படிப்பறிவு இல்லாதவர். அவர் பெயருக்கு ஒரு மணியார்டர் வருகிறது. மகன் அனுப்பி இருக்கிறான். 25 ரூபாய் போஸ்ட் மேனிடம் பெற்றுக்கொள்கிறார். பிறகு அவனிடம் இந்தாப்பா இதில் என்னமோ எழுதியிருக்கு என்னன்னு படிச்சு சொல்லு என்கிறார். உடனே போஸ்ட்மேன் படிக்கிறார். “அன்புள்ள அம்மா நீ அனுப்பிய பணத்தில் படித்து பாசாகி நல்ல வேலையிலும் சேர்ந்து விட்டேன். என் முதல் மாத சம்பளத்தில் உனக்கு 25 ரூபாய் அனுப்பி இருக்கிறேன். அத்துடன் என் அன்பு ‘கிஸ்’சையும் அனுப்பி இருக்கிறேன்”.

உடனே மதுரம் கோபமாக, ‘ஏம்ப்பா’ போஸ்டமேன் 25 ரூபாய் கொடுத்தே சரி! ஏதோ ‘கிஸ்’னு ஒண்ணு அனுப்பி இருக்கானாமே அதையும் குடுத்துட்டு போ” என்றவுடன் போஸ்ட்மேன் ஓட்டம் பிடிப்பார்.

அப்போது வீட்டில் உள்ளே இருந்து வரும் என்.எஸ்.கே., ‘இதுக்குத்தான் பெண்களுக்கு எழுத்தறிவு, படிப்பறிவு வேணும்கிறது’- என்பார்.

எப்பேர்ப்பட்ட, நகைச்சுவை! தேன் தடவிய கருத்து மாத்திரை!

இன்னொரு படத்தில் பானுமதி குதிரையில் வருகிறார். அப்போது எதிரில் சைக்கிள் பழகும் கலைவாணர் விழுந்து, எழுந்து நிற்கிறார்.

பானுமதி (பேன்ட் சட்டை அணிந்து) குதிரையில் இருந்து இறங்க…

‘ஐயா! மன்னிச்சுக்குங்க… எனக்கு இது புது பழக்கம்’ என்கிறார், கலைவாணர்.

உடனே பானுமதி கோபமாக, ‘என்னது ஐயாவா?’ என்று கேட்க,

கலைவாணர், அவரை ஏற இறங்கப் பார்த்து விட்டு,

‘ஆ! அம்மா … இதென்னம்மா வேஷம்?’- என்பார்.

உடனே பானுமதி “ஷட் அப்” என்பார்.

அதன் பிறகு, பானுமதி கேட்கும் கேள்வி எதற்கும் பதிலே சொல்லாமல் சிரிப்பார் கலைவாணர்.

‘ஏன்யா, பதில் சொல்ல மாட்டேங்கிற?’- என்பார் பானுமதி.

அதற்கு அவர், ‘நீங்கதானே ‘ஷட் அப்’னு சொன்னீங்க’- என்பார்.

உடனே பானுமதி ‘சே’ உனக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியுமா?- என்று வியப்புடன் கேட்க… அதற்கு அவர் “தெரியும்மா?… ஆனா உங்கள மாதிரி இங்கிலீஷ்-ஐயும், தமிழையும் கலந்து பேச மாட்டேன்” என்று பஞ்ச் அடிப்பார். தமிழ் தெரிந்தும் ஆங்கிலம் பேசுவதை ஒரு உயர்வாகக் கருதும் பழக்கத்தை அப்போதே நையாண்டி செய்திருக்கிறார்.

இன்னொரு படத்தில் ஓர் கருத்தாழமிக்க காட்சி என்.எஸ்.கேவும் இன்னொருவரும் பேசும் வசனங்கள்…

‘அண்ணே! நம்ம செல்லமுத்து நடக்கிறது சரியில்லை’

என்.எஸ்.கே: ஏன் கால்ல கட்டியா?

இல்லண்ணே! நடத்தை சரியில்லைன்னு சொல்ல வந்தேன்!

ஏன் என்ன ஆச்சு?

‘பொண்டாட்டிய ஊருக்கு அனுப்பி வைச்சுட்டு யாரையோ கொண்டாந்து வீட்டில வைச்சிருக்காராம்… நைட்டு ரெண்டு மணி வரைக்கும் லைட் எரியுதாம்… இனி அவரு உருப்பட்ட மாதிரிதான்’ என்று சொல்லி அந்த நபர் சிரிக்க, கூடவே என்.எஸ்.கேவும் போலியாக சிரித்து விட்டு “அப்ப இனி செல்லமுத்து கதை குளோஸ்” அப்படித்தானே!

ஆமாண்ணே! குளோஸ்தான்…

நல்லா தெரியுமா?…

தெரியும்ணே…

“சரி! தம்பி! இப்ப உன் சட்டைப் பையிலே என்ன வைச்சிருக்கே?”

கொஞ்சம் சில்லரைக் காசு, பேப்பர், பேனா இருக்குண்ணே!

“அப்படிச் சொல்லக்கூடாது தம்பி! சில்லரைன்னா எவ்வளவு சில்லரை, பேப்பர்னா எத்தனை பேப்பர், அதில என்ன எழுதியிருக்கு”- கரைக்டா சொல்லணும்.

‘சே! அப்படிச் சொல்லணுமா? – என்று சட்டைப் பைக்குள் கையை விட போனவரை, தடுத்து கலைவாணர்,

“தம்பி! பாக்காம சொல்லணும் தம்பி”

‘அதெப்பிடிண்ணே! பாக்காம சொல்ல முடியும்?’

‘சே! உன் சொந்த சட்டைப் பையில் இருக்கிறதையே உன்னால பாக்காம சொல்ல முடியல, ஆனா யாரோ செல்லமுத்து வீட்டுக்குள் நடக்கிறது மட்டும் உனக்கு தெளிவா தெரியுதா?’- என்று ஆரம்பித்து அந்த நண்பருக்கு ‘வதந்தி’ பரப்பக்கூடாது என்று நல்ல புத்தி சொல்லியிருக்கிறார் நம் என்.எஸ்.கே.

அவர் காமெடியன் மட்டுமல்ல… கருத்து சொல்லும் கலைஞர் மட்டுமல்ல… விஞ்ஞானம் பேசும் நாகரிகக் கோமாளியும் கூட…

“பட்டனத் தட்டினா… தட்டில் இரண்டு இட்லியும் சட்னியும் வர வேண்டும்”, என்று குக்கரும் ஒவன் அடுப்பும் வரும் முன்னாடியே பாடினார்.

மதுவிலக்குக்காக அவர் எழுதிப் பாடிய பாடல்:

‘குடிச்சுப் பழகணும்’- என்று ஆரம்பித்து ஒரு அதிர்ச்சியைக் கொடுத்து விட்டு… அதன் பின் “காலையில் பல் தேய்ச்சவுடன் கண்டிப்பாக நீராகாரம் குடிச்சுப் பழகணும்” என்று ஆரோக்கிய வாழ்வுக்காக அட்வைசும் செய்கிறார். காலங்கள் கடந்தாலும் கலைவாணர் என்.எஸ்.கே. இன்றும் மக்கள் நினைவில் நீங்கா இடம்பிடிக்க காரணம், அவரது நகைச்சுவையோ, கருத்தோ, பாடும் திறமையோ, பாடல் புனையும் திறமையோ, நகைச்சுவை எழுதும் திறமையோ மாத்திரம் அல்ல. அவரது ‘கொடுக்கும் குணம்’. இல்லை என்று வருபவருக்கு ‘இல்லை’ என்று சொல்லாமல் அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல் அவர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கூறும் போது, ‘பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் எனக்கு வந்ததற்கு காரணமே அண்ணன் என்.எஸ்.கே. வுடன் பழகியது தான்’ என்கிறார். அந்த அளவுக்கு தானம் செய்வதில் தாராளமாக இருந்தவர் கலைவாணர். அதனாலேயே தன் சொத்துகளை இழந்தார் என்றும் கூறுவோரும் உண்டு.

முத்தாய்ப்பாக ஒரு நிகழ்வு. கலைவாணர் தன் வாழ்நாளின் நிறைவுக்காலத்தில் உடல் நலமின்றி படுக்கையில் இருக்கும் போது அவரை பார்க்க எம்.ஜி.ஆர். வருகிறார். பேசி முடித்து விட்டு கிளம்பிச் செல்லும்போது, அவர் என்.எஸ்.கேவுக்கு தெரியாமல் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு கிளம்ப, இதை அறிந்து கொண்ட கலைவாணர், ‘தம்பி! ராமச்சந்திரா… வைக்கிறது வைக்கிற இப்படி ஆயிரமா வைச்சா எப்படி? 100 ரூபாயா சில்லரைமாத்தி வைச்சின்னா உதவி கேட்டு வருகிறவங்களுக்கு குடுக்க வசதியா இருக்குமே’- என்கிறார். அவர்தான் என்.எஸ்.கே. என்ற கலைவாணர்.

அதனால்தான் இன்று ‘சிலையாக’ ஆனாலும் மக்கள் மனதில் ‘நிலை’யாக வாழும் கலைவாணருக்கு ஹேப்பி பர்த் டே சொல்வதில் ஆந்தை சினிமா அப்டேட் குழு டீம் மகிழ்ச்சிக் கொள்கிறது!

Leave A Reply

Your email address will not be published.