‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய நடிகர் சூர்யாவுக்கு, கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றைப் பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த 3-ஆம் தேதி வெளியானது. உலக அளவில் இதுவரையில் சுமார் 200 கோடி ரூபாயை வசூலாக அள்ளியுள்ளது.
விக்ரம். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். படத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாட துவங்கியுள்ளார் கமல்ஹாசன்.
அதன் ஒரு பகுதியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்திருந்தார். தொடர்ந்து படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்களுக்கு இருசக்கர வாகனத்தை பரிசாக வழங்கியிருந்தார். இந்த நிலையில், இப்போது நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக வழங்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் கவுரவத் தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்திருந்தார் சூர்யா. அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ரோலக்ஸ். அதை நினைவுகூரும் வகையில் இந்தப் பரிசு அமைந்துள்ளது. அதை சூர்யா சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் படங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிரும்போது, ”ரோலக்ஸை சந்தித்த விக்ரம்” என்று கேப்ஷனிட்டிருந்தார்.