காலில் ‘ஆபரேஷன்’ கமல்ஹாசன் ஓய்வு

11

காலில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், தற்காலிகமாக ஓய்வில் செல்ல இருப்பதாக, கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை:

தமிழகத்தை தலை நிமிரச் செய்ய, ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முதல் கட்ட பிரசாரத்தை பூர்த்தி செய்துள்ளேன். ஐந்து பாகங்களாக, 5,000 கி.மீ., பயணித்து, தமிழ் மக்களை சந்தித்துள்ளேன். மாற்றத்திற்கான மக்கள் எழுச்சியை சந்தித்துள்ளேன்.

கொரோனா பொது முடக்கத்தின் போது துவங்கிய, ‘பிக்பாஸ் சீசன் – 4’ நிகழ்ச்சியும் முடிந்துள்ளது.

அதன் மூலம் மக்களுடன் உரையாடியது மகிழ்ச்சி. சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில், காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்திருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக, மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதை மீறித்தான், சினிமா மற்றும் அரசியல் வேலைகள் தொடர்ந்தன. பிரசாரத்தை துவங்கும் போதே, காலில் நல்ல வலி இருந்தது. அதற்கு, மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது.

இப்போது, சிறிய ஓய்வு கிடைத்துள்ளது. அதனால், காலில் சிறு அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன்.

சில நாட்கள் ஓய்வுக்கு பின், மீண்டும் என் பணிகளை புதிய வேகத்துடன் தொடர்வேன்.மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் என் மனக்குறையை, தொழில்நுட்பத்தின் வாயிலாக போக்கிக் கொள்ளலாம்.

இந்த மருத்துவ விடுப்பில், உங்களோடு இணையதளம் வாயிலாக பேசுவேன். மாற்றத்திற்கான நம் உரையாடல், தடங்கலின்றி தொடரும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.