கமல்ஹாசன் மேலாளர் டி என் எஸ் காலமானார்

11

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் முன்னாள் நிர்வாகியும், நடிகர் கமல்ஹாசனிடம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்தவருமான டி.என்.எஸ் என திரையுலகினரால் அழைக்கப்பட்ட டி.என்.சுப்பிரமணியம் நேற்று தன்னுடைய 92 வது வயதில் காலமானார். அவரது உடலுக்கு கமல்ஹாசன் மற்றும் சினிமாப் பிரபலங்கள் பலரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

ஐம்பதுகளில் வேலை தேடிச் சென்னைக்கு வந்தவர் ஏ.எல்.சீனிவாசனின் தயாரிப்பு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் கூறும்போது “என்னுடைய சின்ன மாமனார் கண்ணதாசன் அவர்கள்கிட்ட வேலை கேட்டு 1950-ம் வருஷம் டிசம்பர் மாசம் கடிதம் எழுதியிருக்கார் டி.என்.எஸ். கவிஞர் தன் அண்ணன்கிட்ட சிபாரிசு செய்ய, அதன் மூலமா எங்க நிறுவனத்துல வேலை பார்த்தார்’’ என்கிறார்.

தொடர்ந்து முக்தா சீனிவாசன் உள்ளிட்ட சிலருடன் பணிபுரிந்து விட்டு, ராஜ்கமல் நிறுவனத்துக்கு வந்திருக்கிறார் டி.என்.எஸ். அங்கு நிர்வாகியாகப் பணியாற்றியபோதும், கமல் நடித்த ‘குணா’ படத்தை தனியாக தயாரித்தவர் இவர். இதுத்தவிர, பிரபு, குஷ்பு, நடித்த ‘சின்ன வாத்தியார்’ படமும் டி.என்.எஸ் தயாரிப்புதான்.

ராஜ்கமல் நிறுவனங்களின் படங்கள் வெளியீட்டில் ஏதாவது சிக்கல் என்றால் அதைச் சரி செய்யும் பொறுப்பை இவரிடம்தான் ஒப்படைப்பாராம் கமல். ஒரு தயாரிப்பு நிர்வாகியாக கமலுக்கு இவரை மிகவும் பிடிக்கும். டி.என்.எஸ் ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற போது சென்னை மியூசிக் அகாடமியில் பெரிய விழா ஒன்றையும் இவருக்காக எடுத்திருக்கிறார் கமல்.

டி.என்.எஸ். உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.