ஒரே தேதியில் பிறந்த கண்ணதாசன் & எம்.எஸ்.விஸ்வநாதன்

2

கவியரசு கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் இருவரும் தமிழ் திரையுலக வரலாற்றில் சாதித்த சாதனைகள் என்றென்றைக்கும் மாறாது, மறையாது. இருவருக்கும் அவ்வளவு  பொருத்தம் அதற்கு காரணம் இருவரும் ஜூன் 24ம் தேதி பிறந்தாதாக இருக்குமோ என்றுகூட பலர் வியப்பதுண்டு. அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொள்வோம்.

காதலிக்க நேரமில்லை பாடல் கம்போஸிங்குக்காக சித்ராலயா அலுவலகத்தில் எம்.எஸ்.வி. தன்னுடைய ஆர்மோனியத்துடன் அமர்ந்திருந்தார். (அப்போதெல்லாம் புரொடக்ஷன் அலுவலகத்தில் வைத்து ட்யூன் போட்டு ஓ கே ஆன பிறகு ரிக்கொர்டிங் தியேட்டரில் பதிவு செய்வது வழக்கம்)

கவிஞர் கண்ணதாசனும் வந்துவிட்டார்.

எம்.எஸ்.வி.க்கு இசையை விட்டால் வேறு எதுவும் தெரியாது. யார் எந்த நாட்டில் ஜனாதிபதி என்பதெல்லாம் கூட தெரியாது. அப்போது செய்தித்தாளில் ஐசனோவர் பற்றி யாரோ படிக்க, இவர் உடனே “ஐசனோவர் யாரண்ணோ” என்று கேட்டார்.

அப்போது கண்ணதாசன் “அடே மண்டு அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர்” என்றார்.

அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், “அடே, ரெண்டு பேரும் வந்துட்டீங்களா? சரி சிட்டுவேஷன் என்னன்னா, தன்னை வேலையிலிருந்து நீக்கிய எஸ்டேட் ஓனரை எதிர்த்து ரவிச்சந்திரன் போராட்டம் நடத்துகிறார். இந்த சிட்டுவேஷனுக்கு பாட்டுப்போடுங்க” என்று சொல்லி விட்டு உள்ளறயில் சி.வி. ராஜேந்திரனோடும், கோபுவோடும் கதை டிஸ்கஷன்னுக்குப் போய்விட்டார்.

சற்று முன்னர் யாரோ சொன்ன ஐசனோவர் என்ற பெயரை மட்டும் நினைவில் வைத்திருந்த எம்.எஸ்.வி. ‘ஐசனோவர்…. ஆவலோவா….’ என்று வாய்க்கு வந்தபடி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். உள் அறையிலிருந்து எட்டிப்பார்த்த ஸ்ரீதர் “அண்ணே இப்போ நீங்க கத்தினீங்களே அதுதான் ட்யூன்” என்றார். இவருக்கோ ஆச்சரியம் இதில் என்ன ட்யூனைக் கண்டுவிட்டார் ஸ்ரீதர் என்று கவிஞர் கண்ணதாசன் பாடலை சொல்லாமல், வெட்டிப் பேச்சில் நேரம் கழித்துக் கொண்டிருந்தார். அப்போது எம்.எஸ்.வி. “அண்ணே சீக்கிரம் பாட்டைச் சொல்லுங்கண்ணே இதை முடிச்சிட்டு ஆலங்குடி சோமு கூட வேறு இடத்தில் பாடல் பதிவு இருக்கு எனக்கு” என்றார்.

அதற்கு கண்ணதாசன் “இதோ பாருடா விசு. ஒரு வாரமா பெங்களூர்ல தங்கி கையில இருந்த காசையெல்லாம் செலவழிச்சிட்டேன். இப்போ செலவுக்கே காசில்லை.இன்னைக்கு ஸ்ரீதருக்கு ரெண்டு மூணு பாட்டு எழுதினேன்னா அவர் ஒரு தொகை கொடுப்பாரு. இந்த நேரத்தில என்னை விட்டுட்டு அங்கே இங்கேன்னு போகாதேடா, எனக்கு வேலை கொடுடா விஸ்வநாதா….! என்றார்.

‘எலி காது’ படைத்த ஸ்ரீதருக்கு இதுவும் கேட்டுவிட்டது. மீண்டும் தலையை நீட்டி “கவிஞரே, இப்போ கடைசியா சொன்னீங்களே அதுதான் பல்லவி” என்றார். இப்போது இவருக்கும் அதிர்ச்சி. விஸ்வநாதன் கேட்டார் “ஏண்ணே, இன்னைக்கு ஸ்ரீதருக்கு என்ன ஆச்சு….? நான் வாய்க்கு வந்தபடி கத்தியதை ‘அதுதான் ட்யூன்’னு சொல்றார். வேலை கொடுடா விஸ்வநாதான்னு நீங்க சொன்னதை ‘அதுதான் பல்லவி’ என்றார். என்னண்ணே இதெல்லாம்?’ என்று கேட்டதும் கண்ணதாசன் சொன்னார்.

“இதோ பார் விசு, நம்ம ரெண்டு பேருக்கும் ஸ்ரீதர் இன்னைக்கு ஒரு டெஸ்ட் வச்சிருக்கார். அதை சாதிச்சுக் காட்டி பேர் வாங்கணும். நீ கத்தியதுதான் ட்யூன், நான் சொன்னதுதான் பல்லவி, ஆரம்பி’ என்றார்.

சரியென்று இறங்கினார்கள். “ஐனோவர்…. ஆவலோவா…. என்று கத்தியதற்கு ஏற்ப “வேலை கொடு விஸ்வநாதா” என்று ஆரம்பித்தார்கள். அப்போது எம்.எஸ்.வி. ‘அண்ணே எஸ்டேட் ஓனர்’ பாலையா வயசானவர். தவிர முதலாளி, ரவிச்சந்திரனோ சின்ன வயசுக்காரர், அவரிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா, தவிர இப்படத்தில் புதுமுகம். வேலை கொடுன்னு கேட்பது மரியாதைக்குறைவா தெரியுதே’ என்று அபிப்பிராயம் சொல்ல, உடனே கண்ணதாசன், “சரி, அப்படீன்னா இப்படி செய்வோம், வேலை கொடு விஸ்வநாதா” என்பதற்கு பதிலாக “விஸ்வநாதன் வேலை வேணும்” என்று துவங்குவோம் என்று சொல்லி மளமளவென மற்ற வரிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

 

எம்ஜிஆர் நடித்த பெரிய இடத்துப் பெண் படத்தின் ரிகார்டிங் நடந்த நேரம்.

எப்போதும் தாமதமாக வரும் கவியரசு கண்ணதாசன், இந்தப் படத்துக்கு மட்டும் சீக்கிரமாக வந்துவிட்டாராம். ஆனால் எம்எஸ்வி வரவில்லை.

முந்தைய நாள் நள்ளிரவு வரை நடந்து பாடல் பதிவுகளால் களைப்பில் அயர்ந்து தூங்கிவிட்டாராம் எம்எஸ்வி. விஷயம் தெரிந்த கண்ணதாசன், ஒரு தாளில் இப்படி எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாராம்.

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவோ…

இந்த வரிகள் அருமையாக இருந்ததால், அதையே படத்தில் எம்ஜிஆர் பாடும் சோகப் பாடலுக்கு பல்லவியாக எடுத்துக் கொண்டு, மீதி வரிகளைத் தரும்படி கேட்டு கவிஞரை குளிர்வித்தாராம் எம்எஸ்வி.

எம்.எஸ்.விஸ்வநாதன் புகழின் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் அது. ரொம்ப பிசி. கைவசம் நிறைய படங்கள்.

அச்சூழலில் ஒரு பாடல் கம்போசிங்குக்காக, கண்ணதாசனுடன் படக்குழுவினர் 2-நாள் பாண்டிச்சேரி சென்றிருக்கிறார்கள். எல்லோருக்குமே தனித்தனி அறை கொடுக்கப்பட்டிருந்துச்சு.

பாண்டிச்சேரி வந்த முதல்நாள் முழுவதும் கவிஞர் தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறார். கண்ணதாசன் தூங்கும்போது யாராவது எழுப்பினால் கோபம் வந்துவிடுவாம். இதனால் அன்றைய நாள் முழுதும் எந்த கம்போசிங்கும் நடக்கவில்லை. மறுநாள் காலையும் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

இதனால் எம்.எஸ்வி. டென்ஷன் ஆகிவிட்டார். கண்ணதாசனின் அறைக்கதவு முன்பு நின்று கொண்டு, யாராவது போய் கவிஞரை எழுப்பிவிட போறீங்களா? இல்லையா? இல்லேன்னா நான் கிளம்பி ஊருக்கு போயிடுவேன்” என்று அங்கிருந்த படக்குழுவினரிடம் சத்தம் போட்டிருக்கிறார்.

அப்போ படக் கென்று கண்ணதாசனின் அறை கதவு திறந்தது. எல்லோரும் பயந்தே போய்விட்டார்கள். எம்எஸ்வி பேசியது எப்படியோ கேட்காமல் இருந்திருக்காது என்று. கவிஞர் வெளியே வந்தார்.

எம்எஸ்வியிடம்… “சொன்னது நீதானா”… என்றார். எம்எஸ்வியோ ஒரு கணம் பதறிட்டார். ஐயோ..நான் இல்ல… அது வந்து.. என்று திணறினார்.

ஆனால் கவிஞரோ, எம்எஸ்வியை உற்றுபார்த்துவிட்டு “இல்லை… சொன்னது நீதானா? சொல்.. சொல்.. சொல்.. என் உயிரே” என்று சொல்லி, இதை கம்போஸ் செய், இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு போனாராம்.

இப்படித்தான் அந்த பாடல் பிறந்தது.

Leave A Reply

Your email address will not be published.