தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த இயக்குநர் கே.பாலசந்தர் பிறந்த தினமின்று

2

 

தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தார் (1930). தந்தை, கிராம அதிகாரி. அதே ஊரில் பள்ளிப் படிப்பு பயின்றார். சிறு வயதிலேயே நாடகம், சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். 12 வயது முதலே நிறைய நாடகங்கள், சினிமாக்களைப் பார்க்க ஆரம்பித்தார். இதனால் சினிமா ஆசை விழுதுவிட்டது.

சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. விலங்கியல் முடித்தார். கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது ஆகிய திறன்களை பட்டை தீட்டிக்கொண்டதால், கல்லூரி விழாக்களில் இவரது நாடகம் தவறாது இடம்பெறும். சென்னை ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் 12 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

ஓய்வு நேரங்களில் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக் கொண்டார். ஆங்கிலத்தில் வெளியான ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து இயக்கினார். இந்த நாடகம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘நீர்க்குமிழி’, ‘நாணல்’, ‘விநோத ஒப்பந்தம்’ உள்ளிட்ட நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

எம்.ஜி.ஆர். நடித்த ‘தெய்வத்தாய்’ திரைப்படத்துக்கு வசனம் எழுதி, சினிமா வாழ்க்கையை 1964-ல் தொடங்கினார். அடுத்த ஆண்டில் இவரது கதை, வசனம், இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் நீர்க்குமிழி மகத்தான வெற்றி பெற்றது. 1981-ல் ‘கவிதாலயா’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். குறைந்த செலவில் நிறைவானப் படங்களைக் கொடுத்தவர். ரஜினி, நாசர், டெல்லி கணேஷ், சார்லி, விவேக், எஸ்.பி.பி., சரிதா, சுஜாதா, பிரகாஷ்ராஜ் உள்பட ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். ‘பொய்’, ‘ரெட்டைச் சுழி’, ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது பெரும்பாலான படங்களில் மனித உறவு முறைகளுக்கு இடையேயான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் கருப்பொருளாக விளங்கின.

கலைஞர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் கை தேர்ந்தவர். ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘எதிர் நீச்சல்’, ‘வறுமையின் சிறம் சிவப்பு’, ‘அக்னி சாட்சி’, ‘வானமே எல்லை’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சிந்துபைரவி’ உள்ளிட்ட ஏராளமான படங்கள் இவரைப் புகழேணியின் உச்சியில் ஏற்றின.

‘இயக்குநர் சிகரம்’ எனப் போற்றப்பட்டார். திரைத் துறையில் கமல், ரஜினி உள்ளிட்ட பலர் இவரை குருவாகப் போற்றினர். ‘ரயில் சிநேகம்’, ‘கை அளவு மனசு’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். சின்னத்திரையில் நெடுந்தொடர் முறையை அறிமுகம் செய்தவர் இவர்தான்.

இயற்கையை நேசித்தவர். மலையருவியும் கடற்கரையும் இவரது படங்களில் நிச்சயம் இடம்பெறும். 1995-ல் வாழ்நாள் சாதனையாளர் விருது, 2010-ல் தாதா சாகேப் பால்கே விருது, எட்டு முறை தேசிய விருதுகள், மாநில அரசின் விருதுகள், பத்ம அண்ணா விருது, கலைமாமணி, 12 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஆந்திர அரசின் நந்தி விருது உள்ளிட்ட பல விருதுகள் வென்றவர்.

அரை நூற்றாண்டுக்கும் மேல் திரையுலகில் வெற்றி உலா வந்தவரும், திரைப்பட ‘உலக பிரம்மா’, ‘கலையுலக பாரதி’ என்றெல்லாம் போற்றப்பட்டவருமான கே.பாலசந்தர் 2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 84-வது வயதில் மறைந்தார்.

Leave A Reply

Your email address will not be published.