தஞ்சை ராமையாதாஸ் நினைவை போற்றுவோம்

4

கவிஞர், பாடலாசிரியர், கதை, வசனகர்த்தா, தயாரிப்பாளர் என் பன்முக திறமிக் கொண்டவரவர். பெரும்பாலும் திரைப்படக் கலைஞர்கள் வாழும் போது கொண்டாடப்படும் அளவுக்கு அவர்கள் மறைந்தபின் நடப்பதில்லை. சிலர் வாழும் போதேயும் கூட இப்படிப்பட்ட நிலை இருப்பதில்லை என்பது வேறு. அந்த வகையில் திரைப்படப்பாடல் ஆசிரியர்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், உடுமலை நாராயணகவி போன்றோருக்கு நிகராகத் தஞ்சை ராமையாதாஸ் பேசப்படுவதில்லை. பலநேரங்களில் எந்தப் பாடல் பட்டுக் கோட்டையின் பாடல், எது தஞ்சை ராமையாதாசின் பாடல் என பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு நல்ல பல பாடல்களை எழுதி யவர் தஞ்சை ராமையாதாஸ்.

“எத்தனைக் காலம் தான் ஏமாற் றுவார் இந்த நாட்டிலே” (மலைக்கள்ளன்), “அநியாயம் இந்த ஆட்சி யிலே இது அநியாயம்” (குலேபகாவலி) போன்ற பாடல்கள் இன்றைக்கும் அரசியல் சாடலுக்குத் தேவைப்படுகின்றவை. காங்கிரஸ் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தும் விதமாக திராவிட இயக்கத்தவரால் திரைப்படங்களில் இணைக்கப்பட்ட பாடல்கள். இவை இன்று திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளுக்கும் பொருந்தி நிற்பதுதான் நகைமுரண்.

ராமாயணத்தில் ராவணன் வில்லன் பாத்திரம் என்றாலும் திரைப்படத்தில் அதற்கு அழியாப்புகழ் கொடுத்த வரிகள்.“இன்றுபோய் நாளை வாராய் என எனை ஒரு மனிதன் இயம்புவதோ”(சம்பூர்ண ராமாயணம்) சி.எஸ்.ஜெயராமனின் கம்பீரமான குரலில் சோகமும் கர்வமும் இழையோடும் இந்த வரிகளை மறக்க இயலுமா?

வயது வேறுபாடின்றி சில பாடல் கள் இன்றைக்கும் கவனத்தைச் சுண்டியிழுக்கும் சக்தி பெற்றவை. அவற்றில் ஒன்றுதான்.“கல்யாண சமையல் சாதம்காய்கறிகளும் பிரமாதம்இந்த கவுரவப்பிரசாதம்இதுவே எனக்குப் போதும் ஹஹஹஹா… ஹஹஹஹா…” சிறுவர்களும் முதியவர்களும் சேர்ந்து ரசிக்கத்தக்கப் பாடலும் காட்சிகளும் 2233 மாயாபஜாரை மறக்க முடியாமல் செய்தன.

புரியாத மொழியில் `ஜிகினா’ வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் “ஜாலியோ ஜிம்கானா” பாடலை எழுதியதும் இவரே.

கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த “புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே” பாடலை போடுவார்கள். “பானை பிடித்தவள் பாக்கியசாலி” படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்.

இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.
மற்றபடி அந்தப் படத்தின் கதையும் காட்சிகளும் இன்று எத்தனைபேருக்கு நினைவில் இருக்கும்? T.R.மகாலிங்கத்தின் வெண்கலக் குரலில் ஒலிக்கும் “ஆடை கட்டி வந்த நிலவோ” (அமுதவல்லி), சீர்காழி கோவிந்தராஜனும், பி.பி. ஸ்ரீநிவாசும் கலக்கும் “கண்களும் கவிபாடுதே” (அடுத்த வீட்டுப் பெண்) நினைவிலிருந்து நீங்காதவை அல்லவா? “பிருந்தாவனமும் நந்தகுமார னும் யாவருக்கும் பொது செல்வமன்றோ” (மிஸ்ஸியம்மா), “மயக் கும் மாலை பொழுதே நீ போ… போ…” (குலேபகாவலி), “அழைக்காதே நினைக்காதே அவைதனிலே எனையே நீ ராஜா” (மணாளனே மங்கையின் பாக்கியம்) போன்ற இனிய பாடல்களுக்கும்,“சொக்காபோட்ட நவாபு, செல்லாது உங்க ஜவாபு” (குலேபகாவலி), “வாங்க மச்சான் வாங்க வந்த வழிய பார்த்து போங்க” (மதுரை வீரன்) போன்ற எள்ளல் பாடல்களுக்கும் சொந்தக்காரர் தஞ்சை ராமையாதாஸ் மறைந்த இந்நாளில்  (ஜனவரி 14) அவரது நினைவை போற்றுவோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.