மாநாடு (திரைப்பட விமர்சனம்)

2

படம் : மாநாடு

நடிப்பு: சிலம்பரசன் டி.ஆர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, மனோஜ், உதயா, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், வாகை சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சுப்பு பஞ்சு

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: ரிச்சர்டு எம் நாதன்

தயாரிப்பு: சுரேஷ் காமாட்சி

இயக்கம்: வெங்கட் பிரபு

 

மாநாடு என்று பெயர் வைத்த நாள் முதல் இந்த படத்தை மாநாடாக கூட்டுவதற்கு வந்த தடைகள் ஏராளம். எல்லாவற்றையும் கடந்து வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறது படம்.

துபாயில் வேலை பார்க்கும் சிம்பு தனது நண்பரின் திருமணத்தில் பங்கேற்க ஊட்டிக்கு வருகிறார். விமனாத்தில் அவர் வரும்போது திடீர் கனவு அவரை வாட்டுகிறது.  நண்பனின் காதலியை கடத்தி வந்து அவருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணும்போது  போலீஸ் படை துரத்துகிறது. போலீஸ் அதிகாரி எஸ்.ஜே.சூர்யா சிம்புவை தனி இடத்துக்கு அழைத்து வந்து மிரட்டுகிறார். தான் சொல்வதுபோல் செய்யாவிட்டால் நண்பர்களை கொன்றுவிடுவேன் என்கிறார். அதற்கு பயந்து ஒப்புக்கொள்கிறார் சிம்பு. மாநாட்டில் பேச வரும் முதல்வரை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று எஸ்.ஜே. சூர்யா சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார் சிம்பு. முதலில் மறுத்தாளும் நண்பர்களின் உயிரை காப்பற்ற ஒப்புக்கொள்கிறார். மாநாட்டில் முதல்வர் பேசும்போது அவரை சுட முயல அதேநேரம் வேறு யாரோ முதல்வரை சுட்டுக் கொள்கிறார்கள். பதறிப்போன சிம்பு தப்பித்து ஓட முயல போலீஸ் அவரை சுற்றி வளைத்து சுட்டுக்கொல்கிறது.ஆனால் இதெல்லாம் கனவு கண்டதுபோல் விமானத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் சிம்புவுக்கு தெரிகிறது. மீண்டும் இதே காட்சி நடப்பதால் தான் டைம் லூப் எனப்படும் ஒரே நாளில் சிக்கிக்கொண்டிருக்கும் விவரம் தெரிகிறது. அதை பயன்படுத்தி முதல்வரை காப்பாற்ற முடிவு செய்து பல முறை முயற்சிக்கிறார். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு மாற்று வழியில் முதல்வரை  யாரோ சுட்டுக்கொல்கிறார்கள். இறுதியில் சிம்புவால் முதல்வரை காப்பாற்ற முடிந்ததா என்பதற்கு  படம் பதில் சொல்கிறது.

மேலே சொன்ன கதை சுருக்கத்தில் பாதிவரை புரிந்தநிலையில் அதன்பிறகு ஏற்படும் குழப்பம் போல்தான் படம் பல குழப்பங்களுக்குள் சுழன்றடித்து தெளிவான நீரோடையாக மாறுகிறது படத்தின் திரைக்கதையும்.

சிம்புவின் அறிமுக காட்சி ரசிகர்களுக்காகவே பில் டப்புடன் எடுக்கப்பட்டிருந்தாலும் அது அரங்கை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது.

மணப்பெண்ணை சிம்பு கடத்தியதும் கதை தொடங்கி விடுகிறது. வேகமாக தப்பிச் செல்லும்போது யாரோ ஒருவர் காரில் அடிபட்டு சாய்ந்ததும் அங்கு வரும் போலீஸ் அதிகாரி எஸ்.ஜே.சூர்யா, சிம்புவையும் அவரது நண்பர்களையும் தனி இடத்துக்கு அழைத்து சென்று மிரட்டுவது பரபரப்பு.

மாநாட்டில் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் முதல்வர் எஸ்.ஏ.சந்திரசேகரை துப்பாக்கியால் சுட்டதும் போலீஸ் சிம்புவை சுற்றி வளைப்பதும் அப்போது வரும் எஸ்.ஜே.சூர்யா ’ஏண்டா, சி எம் மை சுட்ட ’என்று கேட்க, ’நீங்கதானே சுடச் சொன்னிங்க’ என்று சொல்லி முடிப்பதற்குள் சிம்புவை சூர்யா சுட்டுத்தள்ளுவது பரபரப்பு.

முதல்வரை சுடுவதும் சிம்பு அதை தடுப்பதற்காக எடுக்கும் முயற்சிகளும் பலமுறை  கிளைமாக்ஸ் வரை கொண்டு செல்லப்பட்டாலும் ஒவ்வொரு காட்சியிலும் சில திருப்பங்களை வைத்து காட்சிகளை போரடிக்காமல் விறுவிறுப்பாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

சிம்புவுக்கு சவால்விடும் அதிரடி வில்லனாக எஸ்.ஜே.சூர்யா தனது பாணியில் புதுவிதமாக கலக்கி இருக்கிறார். சிம்புவை கொன்றுவிட்டால் அவர் மீண்டும் பிழைத்து வந்துவிடுவார் என்பதால் அவரை யாரும் கொன்றுவிடாதபடி இருக்கச் செய்ய எஸ்.ஜே. சூர்யா பதறுவது அமர்க்களம்.

முதல்வராக எஸ்.ஏ.சந்திரசேகர், அமைச்சராக வாகை சந்திரசேகர், ஒய்.ஜி,.மகேந்திரன் நடித்துள்ளனர். போலீஸாக வரும் மனோஜ் பாரதிராஜா, பெண்ணின் தந்தையாக வரும் உதயா, முதல்வரின் மகனாக வரும் சுப்பு பஞ்சு, சிம்புவின் நண்பர்களாக வரும் கருணாகரன். பிரேம்ஜி, ஹீரோயின் கல்யாண் பிரியதர்ஷன் தங்களுக்கு கொடுத்த வேலைகளை பக்காவாக செய்திருப்பதால் காட்சிகள் விறுவிறுப்பு குன்றாமல் பறக்கிறது.

சுரேஷ் காமாட்சி படத்தை அதிக பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். வெங்கட் பிரபு தன்னால் பரபரப்பான ஆக்‌ஷன் படத்தை எப்போதும் தர முடியும் என்பதை மங்காத்தா, பிரியாணி படங்களுக்கு பிறகு மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

ரிச்சர்டு எம் நாதன் கேமரா பளிச்சென காட்சிகளை படமாக்கி இருக்கிறது. எல்லாவற்றுக்கும் கிரீடம் வைத்தார்போல் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்துக்கு பெரிய தூணாக தாங்கி இருக்கிறது.

மாநாடு – சிம்புவின் ஆக்ஷன் கலக்கல்.

Leave A Reply

Your email address will not be published.