படம்: மகான்
நடிப்பு: விக்ரம், துருவ் விக்ரம், சிம்ஹா, சிம்ரன், சனந்த், முத்துக்குமார், தீபக் பரமேஷ், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், கஜராஜ்
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
தயாரிப்பு: எஸ்.எஸ்.லலித்குமார்
இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்
ரிலீஸ்: பிரைம் வீடியோ
காந்தியவாதி கொள்கையை கடைபிடிக்கும் தியாகிகள் குடும்பத்தில் பிறந்தவர் விக்ரம். இவருக்கு காந்தி மகான் என்று பெயர் சூட்டுகின்றனர்,. சிறுவயதில் நண்பர்களுடன் சேர்ந்து சூதாடுவதை கண்டு அவரது தந்தை கண்டிப்பதுடன் காந்தி மகான் போல் வாழ வேண்டும் என்று சத்தியம் செய்யச் சொல்கிறார். வளர்ந்து குடும்பஸ்தராகி மனைவி பிள்ளையுடன் வாழும் விக்ரம் நல்லபிள்ளையாகவே இருக்கிறார். ஒருநாள் அவருக்கு குடிக்க வேண்டும் என்று ஆசை வர பாருக்கு சென்று குடித்துவிட்டு வருகிறார். அதை அறிந்து அவரது மனைவி சிம்ரன் கோபம் அடைவதுடன் அவரை விட்டு பிரிகிறார். அத்துடன் குழந்தையையும் தூக்கி செல்கிறார். இந்நிலையில் சிறுவயது நண்பர்கள் விக்ரமுடன் மீண்டும் வந்து சேர்கின்றனர். நண்பருடன் சேர்ந்து சாராய சாம்ராஜ்யம் நடத்துகிறார். போதும் போதும் என்றளவுக்கு செல்வம் சேர்ந்தாலும் மனைவி, மகன் இல்லாததால் வேதனை அடைகிறார். திடீரென்று அவரது மகன் திரும்பி வருகிறார். காந்திய கொள்கையில் பிடிவாதமாக இருக்கும் மகன் அதிகாரமிக்க போலீஸ் அதிகாரியாக இருக்கிறான். தந்தையின் செயலை கண்டிக்கும் மகன் அவருடன் இருக்கும் நண்பர்களை சுட்டுக்கொள்கிறார். இதன் முடிவு என்ன என்பதை படம் விளக்குகிறது.
விக்ரம், அவரது மகன் துருவ் இருவரும் இணைந்து நடித்திருக்கும் முதல் படம் என்பதால் ரசிகர்களுக்கு இது நிச்சயம் ஸ்பெஷல் படமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் யோசித்து இருவரும் வரும் காட்சிகளில் அனல் பறக்க வைக்கிறார்.
திருவிழாவில் தாண்டவம் ஆடும் விக்ரம் கண் முன் அவரது மகன் துருவ் விக்ரம் வந்து நிற்பதும் இருவரும் போட்டி தாண்டவம் ஆடுவதும், அதேபோல் சிம்ஹா மகனை துருவ் என்கவுண்ட்டர் செய்ததும் கோபம் அடையும் விக்ரம் துருவ்வுடன் பயங்கரமாக மோதுவதும் படத்தில் ஹைலைட்டாக அமைகிறது.
சிம்ஹா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விக்ரம் மனைவியாக வரும் சிம்ரன் காந்திய கொள்கை கொண்டவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
சந்தோஷ்நாராயணன் இசையில் பாடல்கள் கானா பாணியில் ஒலிக்கிறது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு நிறைவு.
காந்திய கொள்கையை மையமாக வைத்துக்கொண்டு ஒரு கமர்ஷியல் படம் தந்திருக்கிறார்.
மகான் – விக்ரம், துருவ் இருவரின் அட்டகாசம்.