அரசு மருத்துவர்களின் கோரிக்கை எப்போது நிறைவேறும்? மநீம கட்சி கேள்வி

0

மக்கள்நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்  அரசு மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக அரசு எப்போது நிறைவேற்றும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

கொரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு முன்பே அரசு மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று போராட்டம் நடந்தினர். கொரோனா காலத்தில் தங்களுடைய நலனை பெரிதாக கருதாமல் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அயராது உழைத்து வருகின்றனர். அவர்கள் இரவு பகல் பாராமல் பாடுபட்டதன் விளைவு, பல லட்சக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. கொரோனாவில் பல மருத்துவர்கள் உயிரிழந்ததையும் நாம் அறிவோம். இப்படியிருக்க, உயிர்காக்கும் மருத்துவர் களுக்கு, உரிய ஊதியத்தை தர மறுப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் தரப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பல முறை வலியுறுத்தி உள்ளது. இருந்தாலும், மாநில அரசு அதைக் காதில் வாங்கியதாக தெரியவில்லை. அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வை மறு ஆய்வு செய்வது தொடர்பாக, 2009-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி
2017-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மறுஆய்வு நடைபெறவில்லை. பல மருத்துவ சங்கங்கள் ஊதியப் படியை மறுத்து ஊதிய உயர்வையே வலியுறுத்தியுள்ளன.

தற்போது உள்ள 8, 15, 17, 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை 5, 9, 11, 12 ஆண்டுகள் என மாற்றி கொடுக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டின் அரசாணை எண் 354-ஐ உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு தருவதற்கு இதுவரை வழிவகை செய்யப்படவில்லை. கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படாமல் இருக்கிறது.

அதிமுக கட்சி ஆட்சியில் இருந்தபோதும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ‘அடுத்து நமது ஆட்சி தான் அப்போது உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என்று உறுதியளித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் ஆட்சிப் பொறுப்பேற்று எட்டு மாதங்கள் ஆகியும் அவர்களின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை. இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தற்போது, அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்கள். மக்கள் உயிர்காக்கும் மருத்துவர்களை பட்டினி போடாமல் அவர்கள் கோரிக்கைகளை இந்த அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பல காலங்களாக நீடிக்கும் இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுக் காணப்பட வேண்டும்.

இவ்வாறு – முரளி அப்பாஸ், கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.