மணிரத்ன மாலை !

16

 

ரத்தினச் சுருக்கமான வசனங்கள் தான் மணிரத்னம் பாணி. பொதுவாகவே பத்திரிக்கையாளர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்பவர், கொரானா சமயத்தில் தன் மனைவி சுஹாசினியின் வலைத்தளத்தில் நேரடியாக ரசிகர்களோடு பேசினார். நடிகர் மாதவன், நடிகைகள் அனுஹாசன், பூனம் தில்லான்  உள்ளிட்ட பிரபலங்களும் ரசிகர்களாக மாறி மணிரத்னத்திடம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டார்கள்.

மணிரத்னம் வழங்கிய சில சுவாரஸ்யமான பதில்கள் இங்கே.

பழி போடதீங்க!

“உங்கள் படங்களைப் பார்த்து சினிமா கற்றுக் கொண்டேன். நான் படம் எடுக்கலாமா?”

“நீங்கள் என்னால் தான் இயக்குநராக வேண்டும் என்று முடிவு எடுத்தீர்கள் என்றால், நீங்கள் எப்படிப் படம் எடுத்தாலும் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. என் மீது பழி போடக்கூடாது”.

எல்லாமே கஷ்டம்தான்!

“கதை, திரைக்கதை எதை எழுதுவது கடினம்?”

“எதுவும் எளிதல்ல. எல்லாமே கடினம்தான். இந்த ஊரடங்கின் போது நான் ஒரு கதை எழுத உட்கார்ந்தேன். ஆனால், ஒரு வரி கூட எழுத முடியவில்லை.”

பொறுப்பு இருக்கு ஒத்துக்கறேன்!

“இயக்குநர்களுக்கு பொறுப்பு உண்டா?”

“சமூகததில் எல்லோருக்குமே பொறுப்பு உண்டு. பத்திரிக்கையாளர், எழுத்தாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இசைக் கலைஞர் என்று எல்லோருக்குமே இருப்பதைப் போல இயக்குநருக்கும் பொறுப்பு உண்டுதானே? ஆனா, சினிமா இயக்குநருக்கு அதை சுமையாக்கிவிடுகிறார்கள். சினிமா இயக்குநரின் பொறுப்புக்கு மற்றவர்கள் நிறைய முக்கியத்துவம் தருகிறார்கள். திரைப்படத்தின் தாக்கம் என்பது பற்றி பேச வேண்டும் என்றால், அவை திரைப்படங்கள் மட்டுமே. அவை ஏற்படுத்தும் தாக்கம் மட்டுமே உங்கள் குணத்தை தீர்மானிக்காது. உங்கள் குணத்தைத் தீர்மானிக்கும் காரணிகள் வெவ்வேறு உண்டு. இதில் திரைப்படம் என்பது ஒரு பகுதி மட்டும்தான். ஓர் இயக்குநராக நான் அதில் சிறு பங்கு மட்டுமே பெறுகிறேன். எனவேதான் ஒவ்வொரு படத்திலும் பாடம் எடுக்க வேண்டும் என்ற சுமையை நான் ஏற்றுக் கொள்வதில்லை. எனது படங்களில் நான் பாடம் எடுக்கக்கூடாது என்று தான் கவனமாக இருக்கிறேன். நான் நினைப்பதை, என்னைப் பாதித்த விஷயங்களைத்தான் படத்தில் வைக்கிறேன்”.

மழை, ரயில், மலையாளிகள்!

“உங்கள் படங்களில் சில விஷயங்கள் க்ளிஷேவாக திரும்பத் திரும்ப இடம் பெருகின்றனவே?”

கேரளா நம்ம பக்கத்து ஊரு. தமிழகத்தோடு தங்களை நிறைய மலையாளிகள் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, பல கேரக்டர்கள் கொஞ்சம் மலையாளத்தனமாக இருப்பதுண்டு. அப்புறம் மழை என் படங்களில் பெய்துகொண்டே இருக்கிறது என்றொரு விமர்சனம். படப்பிடிப்பை பெரும்பாலும் கேரளாவில் நிகழ்த்துவதால் அங்கு பெய்யும் மழை, நம் படத்திலும் பெய்கிறது. சினிமாவில் ரயில் ஒரு காட்சியில் வரும் போது அது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. சினிமா உருவான சமயத்தில் ஏதோ ஒரு காட்சியில் ரயில் வந்து ரசிகர்களை பிரமிக்க வைத்தது, இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் க்ளிஷேவான்னு தெரியாது. ஆனா, என் படங்களில் இந்த மூன்று விசயங்களும் நிறைய முறை அதுவாகவே வந்து விழுந்திருக்கிறது”

நேரில்தான் உணரணும்னு இல்லை!

“உங்கப் படங்களில் உறவுகள் ரொம்ப நுணுக்கமா பதிவாகிறது. ஆனா, தனிமையை விரும்பும் உங்களுக்கு அவ்வளவு அனுபவங்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லையே?”

“உங்களால் ஒரு விஷயத்தைப் பார்க்க முடிந்து, அது ஒரு குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் பொருந்தும் என்று தோன்றினால், இது இந்தக் காலத்தில் நடக்கக்கூடிய விஷயம் என்று புரிந்தால், அதை திரையில் பிரதிபலிக்கவும் தெரித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாமே சென்று எல்லாவற்றையும் அனுபவப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் வேகமாக வளர்ந்து வரும் போது தானாகவே தெரிந்துகொள்ளும் விஷயம் தான் அது. அடிப்படைச் சிந்தனையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. 2020ல் நடப்பது உங்கள் இளமைக்காலத்திலும் உங்கள் மனதில் தோன்றியிருக்கலாம்”

வேலு நாயக்கர்!

“உங்க ‘நாயகன்’ படத்தில் வேலு நாயக்கர் அவ்வளவு உயிரோட்டமா இருந்தாரே?”

“அந்தப் படத்தை இயக்கும்போது என்னிடம் பணியாற்றிய உதவி இயக்குநர் ஒருவர், வரதராஜ முதலியாரின் குழுவில் இருந்தவர். அவர் எப்போதும் வெள்ளை உடைதான் அணிவார். முதலில் எனக்கு அவர் யாரென்று தெரியாது. ஆனால், எங்கள் அதிஷ்டமோ என்னவோ, படப்பிடிப்பு முடியும்வரை அவர் எங்களுடனேயே இருந்தார். ‘சோஃபா இருந்தாலும் முதலியார் தரையில்தான் உட்காருவார்’ என்பதை அவரிடம் இருந்துதான் தெரிந்துகொண்டேன். ஒரு நபரைப் பற்றிய இந்த விஷயத்தை வைத்து, கிட்டத்தட்ட அந்தக் கதாப்பாத்திரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதை திரையில் இன்னமும் விரிவாக்க முடியும். எனவே, அப்படியொரு தன்மையைத் தெரிந்து கொண்டால் அந்த கதாபாத்திரத்தை துல்லியமாகப் படைக்கலாம்”

காதலையும் தாண்டியது!

“உங்க படங்களில் காதல் ரொம்ப ஸ்பெஷல்?”

“நான் காட்டியதுதான் காதலின் தூய்மையான வடிவமா என்று எனக்குத் தெரியாது. எது சரியான காதல் என்று யார் தீர்மானிப்பது? முதல் படத்திலிருந்தே காதலின் வெவ்வேறு பரிமாணங்களை முயற்சி செய்து வருகிறேன். அதில் சில உண்மையாக இருப்பதாக உணர்கிறோம். சில பார்க்க கச்சிதமாக இருக்கும். ஆனால், உண்மையில் அப்படி இருக்காது. எனவே, நான் சொல்ல வருவது வெறும் ஆண், பெண்ணுக்கு இடையேயான உறவு மட்டுமல்ல. அது சகோதரர்களுக்கு இடையே இருக்கும் உறவு மற்றும் ஆண், பெண் குழந்தைக்கு இடையே இருக்கும் உறவு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நான் உறவுகளின் தன்மையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். அவ்வளவு தான்”

எனக்கு கால்பந்து ஆடத் தெரியாது!

“வெப்சீரிஸ், டிவி சீரியல், ஓடிடி-ன்னு எவ்வளவோ வந்துடுச்சி. இன்னும் சினிமாவே எடுத்துக்கிட்டு இருக்கீங்களே?”

“இருபது வருடங்களாக டென்னிஸ் ஆடிக் கொண்டு இருப்பவனை, திடீரென்று கால்பந்து ஆடச் சொன்னால் எப்படி? கண்டிப்பாக அது நடக்காது. சரியாகவும் வராது. எனக்கு என்ன தெரியுமோ அதை தெளிவாகச் செய்கிறேன். அவ்வளவுதான்!”

நல்லா நடிக்கிறாங்களே?

“உங்க படங்களில் மட்டும் எப்படி எல்லோருமே நல்லா நடிக்கறாங்கா?”

“நல்லா நடிக்கச் சொல்லி கெஞ்சுவேன். எல்லாம் எப்போதும் சரியாக வரும் என்று சொல்ல முடியாது. ஒரு காட்சியை மீண்டும், மீண்டும் எடுத்துக்கொண்டே இருக்க முடியாது. சில நேரங்களில் நான் கேட்பதற்கு நேர்மாறாக நடிப்பார்கள். அது சரியாக இருக்கும். எனவே, சரியானது எது என்பதை நடிகரிடம் தேடுவதுதான் அந்த வேலை. இருவருக்கும் பொதுவாக, நேர்மையாக ஒரு விஷயம் தெரியும் இல்லையா? அதுதான் திரையில் வரும். அது ஒரு தேடல் தான். இதில் என் வேலை எதுவும் இல்லை. நடிகர்கள்தான் நடிக்க வேண்டும். அவங்களுக்கு நடிக்க ஸ்கோப் இருக்கிற கதையைதான் நான் தருவேன். அதில் சிறப்பாக நடிப்பது அவர்கள் வேலை”

 

Leave A Reply

Your email address will not be published.