ஓணம் பண்டிகையில் தியேட்டருக்கு வருகிறார் மரக்கார் – மோகன்லால் அறிவிப்பு

1

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள மலையாள படம் மரைக்கார்: அரபிக் கடலிண்டே சிம்ஹம். மலையாள சினிமா சரித்திரத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள சரித்திரப் படம். 18ம் நூற்றாண்டில் கேரளாவை நோக்கி கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மரக்கார் என்ற வீரரை பற்றிய கதை.

இந்தப் படத்தில் மோகன்லாலுடன் பிரபு, அசோக் செல்வன், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, முகேஷ், நெடுமுடி வேணு, பைசால், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாராகி உள்ள இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோனி நபேல் இசை அமைத்துள்ளார். 3 தேசிய விருதுகளையும் பெற்றது.

படத்தின் பணிகள் அனைத்தும் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து விட்டாலும், கொரோனா அச்சுறுத்தலால் பலமுறை வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக மே 13ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதுவும் நிறுத்தப்பட்டது.

தற்போது கேரளாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் படத்தின் வெளியீட்டை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி படத்தை வெளியிடுவதாக மோகன்லால் தனது டுவிட்டரில் அறிவித்திருக்கிறார். உங்களின் பிரார்த்தனையாலும், கடவுளின் அருளாலும் மரக்கார் படத்தை ஆகஸ்ட் 12 அன்று ஓணம் வெளியீடாக உங்களுக்கு வழங்குகிறோம். நம்பிக்கையோடு இருங்கள். என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.