மருத (திரைப்பட விமர்சனம்)

74

படம் : மருத

நடிப்பு: ராதிகா சரத்குமார், விஜி, சரவணன், வேல ராமமூர்த்தி,  ஜி ஆர் எஸ், லவ்லின் சந்திரசேகர், மாரிமுத்து,  கஞ்சா கருப்பு

இசை: இசைஞானி இளையராஜா

ஒளிப்பதிவு:  பட்டுக்கோட்டை ரமேஷ் பி.

தயாரிப்பு: பிக்வே பிக்சர்ஸ் சபாபதி

இயக்கம்: ஜி ஆர் எஸ்

சரவணனின் தங்கை ராதிகா. செய்முறை வழக்கப்படி சரவணன் செய்த பல்லாயிரக்கணக்கான பணம்,  தங்க சங்கிலியை அவரது குடும்ப விழாவில் திருப்பி செய்ய முடியாத அளவுக்கு ஏழ்மையில் இருக்கிறார். சரவணனின் மனைவி விஜி தாங்கள் செய்த செய்முறை பணத்தை ராதிகா தி்ரும்ப செய்தே ஆகவேண்டும் என்று ராதிகாவை பார்க்கும்போதெல்லாம் அவமதிக்கிறார். ஒரு கட்டத்தில் விஜி வீட்டில் செய்முறை விழா நடக்கும் நிலையில் ராதிகாவீட்டுக்கு வரும் விஜி இம்முறை செய்முறை பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் ஊர் நடுவில் வைத்து அவமானப்படுத்துவேன் என்று கடுமையாக எச்சரிக்கிறார். அதேபோல் அவமானப்படுத்துகிறார். அதன்பிறகு நடப்பது என்ன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

மதுரை பகுதி கதைகளில் இது மற்றொரு பண்பாட்டை விளக்கும் படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஜிஆர் எஸ். அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.  லவ்லின் சந்திரசேகர் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். ஆனால் இந்த ஜோடியின் கதை எல்லாம் படத்தில் ஒரு பகுதியாகவே வந்து செல்கிறது, முழுகதையும் ராதிகா, விஜி ஆகியோர் மீதே செல்கிறது.

கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்குவார் என்பார்களே அதுபோல் ராதிகா செய்முறையை திரும்ப செய்ய முடியாமல் வீட்டுக்குள் பயந்து நடுங்கி அமர்ந்திருக்கும் காட்சியும் ராதிகாவுக்கு நடுவீதியில் வாழை இலை விரித்து அதில் கறி சோறு பரிமாறி செய்முறையை திரும்ப செலுத்த கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் விஜியும் நடிப்பில் இருதுருவங்களாக மாறி நிற்கின்றனர்.

இயக்குனர் ஜி ஆர் எஸ் ராதிகாவின் மகனாக கடைசி ரீல் வரை விளையாட்டு பிள்ளையாக சுற்றித்திருந்துவிட்டு தன் தாயை விஜி அவமானப்படுத்திவிட்டார் என்பது தெரிந்ததும் புயலாக சீறி விஜியை தலை குடுமியை அறுத்தெறிவ்யும்போது நடிப்பில் உக்ரமாகி இருக்கிறார். அதேபோல் லவ்லினும் இயல்பான நடிப்பால் மனதில் பதிகிறார்.

பருத்திவீரன் சரவணன் கம்பீரமான மீசையுடன் வந்தாலும் அவரது கதாபாத்திரம் சில காட்சிகளில் வேகம் காட்டியும் சில காட்சிகளில் சோகம் காட்டியும் நடமாடுகிற்து. வேல ராமமூர்த்தி, மாரிமுத்து இருவரும் கதைக்கு உந்துகோலாக பயன்பட்டிருக்கின்றனர்.

சபாபதி தயாரிக்க எழுதி இயக்கி இருக்கிறார் ஜி ஆர் எஸ். இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த இவரின் படைப்பும் குருவின் பாணியில் மண்ணின் கதையை பேசி இருக்கிறது.

படத்துக்கு பக்க பலம் இசைஞானி இளையராஜாவின் இசை. 80களின் காலகட்டத்தை நினைவுபடுத்தும் அவரது இசை தாலாட்டாக ஒலிக்கிறது.

மருத – மதுரை மண்ணின் பண்பாட்டை பேசுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.