மாஸ்டர் (பட விமர்சனம்)

33

படம்: மாஸ்டர்
நடிப்பு: விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், நாசர், சாந்தனு பாக்யராஜ்

இசை: அனிரூத்

ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்

தயாரிப்பு: சேவியர் பிரிட்டோ

இயக்கம்: லோகேஷ் கனகராஜ்

 

கல்லூரியில் மாணவர்களின் ஆதரவு பெற்ற பேராசிரியர் விஜய். தப்பு என்றால் எதையும் தட்டிக்கேட்பார். மந்திரி பிள்ளைகள் தப்பு செய்தார்கள் என்று அவர்களை துரத்தி பிடித்து போலீஸில் ஒப்படைக்கிறார். கல்லூரி தேர்தல் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கேட்க அதற்கு ஆதரவாக குரல் கொடுத்து  தேர்தலில் கலவரம் நடந்தால் கல்லூரியை விட்டு செல்வதாக எழுதி தருகிறார். தேர்தல் அமைதியாக முடிந்த பிறகும் ஒரு கலாட்டா நடக்க அங்கிருந்து போதை மருந்து, மது என  கூத்தடிக்கும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு வாத்தியாராக செல்கிறார். கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு 2 சிறுவர்களை  சரண் அடையச் செல்லும் ரவுடி விஜய் சேதுபதி அந்த சிறுவர்கள் மறுத்ததும், அவர்களை அடித்து தூக்கில் தொங்கவிடுகிறார். அதையறிந்து கொதிப்படையும் விஜய், விஜய் சேதுபதியை எப்படி பழி வாங்கிறார் என்பதற்கு அதிரடியாக விடை சொல்கிறது மாஸ்டர்.

கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வரும், அல்லது தீபாவளிக்கு வரும் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய மாஸ்டர் ஒரு வழியாக போகியுடன் சூடாக ரிலீஸ் ஆகிவிட்டது. விசில் அடிக்காமல், ஆரவாரம் செய்யாமல் கைகளை கட்டிப்போட்டது இருந்த ரசிகர்களுக்கு கட்டுக்களை அவிழ்த்துவிட்டதுபோல் விஜய்யின் சண்டைக்காட்சிகளில்  அரங்கம் அதிர்கிறது.

விஜய் சீர் திருத்தப்பள்ளிக்கு வாத்தியாராக வந்த பிறகுதான் கதையின் வேகம் ஜெட் வேகத்தில் எகிறுகிறது. அங்கிருக்கும் அர்ஜுன் தாஸ் விஜய் சேதுபதியின் கையாளாக இருந்துக்கொண்டு சிறுவர்களை மிரட்டுவதும், அடிப்பதுமாக செய்யும் அடாவடி ஒருபக்கம் இருக்க அங்குள்ள சிறுவர்களை தான் செய்யும் கொலைகளுக்கும் தவறுக்கும் தனக்கு பதிலாக அவர்களை போலீசில் ஆஜர்படுத்தும் விஜய் சேதுபதி வில்லனத்தில் மாஸ்டராகி விடுகிறார்.

சிறுவர்கள் இருவரை பிரியாணி சாப்பிட வைத்து பிறகு அடித்து கொல்வதும், தன்னை எதிர்த்து பேசுபவர்களை கையாலேயே அடித்து கொல்வதும் பயங்கரம். சிறுவர்களை கொன்ற விஜய் சேதுபதியை கொல்ல துடிக்கும் விஜய் நேராக அவர் இருக்கும் இடத்துக்கே சென்று எச்சரிக்கை விட்டு வருவது சூப்பர் சீன்.

விஜய் பாதி லோக்கல், விஜய் சேதுபதி தரை லோக்கல் என்று மாறி மாறி ரகளை செய்திருக்கின்றனர். சிறுவனின் கையை உடைத்த அர்ஜுன்தாஸின் ஆட்களை அடிக்க நேரம் பார்த்துக்கொண்டிருக்கும் விஜய்க்கு சரியான வாய்ப்பாக கபடி ஆட்டம் ஆட அழைப்பதும் இதுதான் சமயம் என்று  அவர்களை பிரித்து மேய்ந்துவிடுகிறார்.

விஜய் ஏன் குடிகாரானார் என்று கடைசிவரை சொல்லாவிட்டாலும் யாராவது காரணம் கேட்டால் காதல் கோட்டை, பிரேமம், டைட்டனிக் காதல் கதைகளை சொல்லி டகுல் விடுவது காமெடி. விஜய் சேதுபதியுடன் எப்படியும் ஒரு டூடய் பாடிவிடுவார் மாளவிகா என்று எதிர்பார்த்தால் கடைசிவரை அதற்கே வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. ஆண்ட்ரியா வில் வித்தை வீரங்கனையாக வந்து ஆக்‌ஷன் காட்சிக்கு கைகொடுக்கிறார்.

ரவுடி கூட்டம், போதை மருந்து சமாச்சாரத்தை வைத்து மாஸ்டர் படத்தை தந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் கச்சிதமாக காட்சிகளை படமாக்கி இருக்கிறார். அனிருத் பங்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்திருக்கிறது. வாத்தி கம்மிங் பாடலில் விஜய் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அரங்கில் ஆட வைக்கிறார்.

மாஸ்டர் – மிரட்டல்.

Leave A Reply

Your email address will not be published.