படம்: மதில்
நடிப்பு: கே.எஸ்.ரவிகுமார், மைம் கோபி, மதுமிதா, காத்தாடி ராமமுர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன்,
இசை: எல்.வி.முத்துகுமாரசாமி
ஒளிப்பதிவு: ஜி.பாலமுருகன்
தயாரிப்பு: சிங்கா சங்கரன்
இயக்கம்: மித்ரன் ஜவஹர்
ரிலீஸ்: ஜி 5
அர்த்தமுள்ள அரசியல் கதைக்கு ஆஜானபாகு ஹீரோ தேவையில்லை என்பதை நிரூபிக்கும் படம் மதில்.
தன்னிடம் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பவர்களை மன்னிக்கும் மனோபாவம் கொண்டவர் லட்சுமி காந்தன். 30 வருடம் உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு சொந்தவீடு கட்டி குடிபுகுகிறார். அவரது வீட்டு சுவற்றில் அந்த பகுதி அரசியல்வாதி தனது விளம்பரத்தை எழுதி படமும் வரைகிறார். அதைக்கண்டு கோபம் அடையும் லட்சுமிகாந்தன் தன் அனுமதி இல்லாமல் தன் வீட்டு சுவர் மீது எழுதிய விளம்பரத்தை அழிக்கிறார். கோபம் அடைந்த அரசியல்வாதி லட்சுமிகாந்தனை தாக்குகிறார். அதற்கு அஞ்சாமல் தனக்கு நேர்ந்த அவமானத்தை சமூகவலைதளம் மூலம் வெளிப்படுத்தி மக்கள் ஆதரவு திரட்டுகிறார். இந்நிலையில் அவரை கொல்வதற்கு அடியாட்கள் வருகின்றனர். அதை சாதுர்யமாக எதிர்கொள்கிறார். இறுதியில் அரசியல்வாதியை பணிய வைத்தாரா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
லட்சுமிகாந்தன் கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார் நடிக்க அரசிய ல்வாதியாக மைம் கோபி நடித்திருக்கிறார். இருவருமே பாத்திரத்தோடு ஒன்றி இருக்கின்றனர். சிறுவயதாய் இருக்கும்போது தந்தை இறந்தவுடன் வீட்டுக்காரர் வீட்டை காலி செய்யும்படி சொன்னதும் சொந்தவீடு கட்ட வேண்டும் என்ற உறுதி ரவிகுமாருக்கு வர அதை 30 வருடம் கழித்து நிறைவேற்றுவது கதையின் தொடக்கப்புள்ளியாக அமைகிறது.
தனது வீட்டு சுவர் மீது அரசியல்வாதி விளம்பரம் எழுதி வைத்திருப்பதை கண்டு கோபம் அடையும் ரவிகுமார் சகமனிதர்களிலிருந்து மாறுபட்டவர் என்று உணர்த்துகிறார். அரசியல்வாதியை பற்றி போலீசில் புகார் கொடுப்பதும் நஷ்ட ஈடாக தரும் பணத்தை தூக்கி எறிந்துவிட்டு வீட்டு சுவற்றை வந்து சுத்தம் செஞ்சிட்டு மன்னிப்பு கேட்கச் சொல் என்று மைம் கோபியின் அடியாளிடம் ரவிகுமார் எசசரித்துவிட்டு வருவதும் அதன்பிறகு இரு தரப்புக்கும் எழும்மோதலும் காட்சிகளை பரபரப்பாக்குகிறது.
ரவிகுமாரை வீட்டுக்கு வரவழைத்து அவரது கன்னத்தில் மைம் கோபி அறைவது ஷாக். அதற்கு கலங்காமல் மீண்டும் ரவிகுமார் எச்சரிக்கை விடுவது சூடு பறக்கும் காட்சி. மைம் கோபிக்கு எம் எல் ஏ சீட்டு கிடைக்காமல் செய்ய ரவிகுமார் நடத்தும் எதிர்போராட்டம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
ரவிகுமாருடனே வரும் நாடக கோஷ்டி காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமி நாதன், மதுமிதா காமெடி செய்கின்றனர்.. இசை: எல்.வி.முத்து குமாரசாமி கேட்கலாம். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு காட்சிகளை துல்லியமாக படம் பிடித்திருக்கிறது.
மதில்- நேர்மை போராட்டதுக்கு வெற்றி.