புரட்சிதலைவர் எம் ஜி ஆர் பிறந்தநாள்

1

புரட்சி தலைவர் எம் ஜி ஆர் பிறந்த நாள் இன்று. தான் யாருக்கு சொந்தம் என்று அவரே தெரிவித்தார்.

‘எம்.ஜி.ஆர். யார்? அவர் பூர்வீகம் என்ன? என்ற விஷயம் தமிழக அரசியல் மேடைகளில் அலசப்பட்டுக் கொண்டிருந்த நேரம்…

“இலங்கை நான் பிறந்தது… கேரளம் என்னை வளர்த்தது…. தமிழகம்- என்னை வாழ வைத்தது. அப்படியானால் நான் யாருக்குச் சொந்தம்? நல்லவர்களுக்கெல்லாம் நான் சொந்தமானவன்!” என்று மேலே எழுப்பப்பட்ட சர்ச்சைக்கு, இலங்கையில் பொதுவிளக்கம் கொடுத்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

‘சன்’ என்ற ஆங்கிலப் பத்திரிகை: ‘திவசா’ என்ற சிங்களப்பத்திரிகை, ‘ராதா’ என்ற தமிழ்ப் பத்திரிகைகளை நடத்திக் கொண்டிருக்கும் ‘இன்டிபெண்டன்ட் நியூஸ் பேப்பர்ஸ்’ என்ற இலங்கைப் பத்திரிக்கை நிறுவனம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை விருந்தினராக அழைத்திருந்தது.

அதை ஏற்று, 1966- ஆம் ஆண்டுதான் பிறந்த இலங்கை தேசத்துக்குப் புறப்பட்டார். புரட்சி நடிகர் உடன் சரோஜா தேவியும் சென்றார்.
இன்டியன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து கொழும்பு விமானதளத்தில் கால் வைக்கிறார் மக்கள்திலகம்.. விமான தளத்தைச் சுற்றி மக்கள் கூட்டம் வெள்ளம் போல் காட்சியளித்தது. எம்.ஜி.ஆரைக்கண்ட மகிழ்ச்சி ஆரவாரம் விண்ணைப் பிளக்கிறது. சாலையின் இருபுறத்திலும் மக்கள் படை வரிசையாய் நிற்க, திறந்த காரில்கைகூப்பிச சென்ற மக்கள் திலகம், கடற்கரையில் உள்ள ‘கால்பேஸ்’ ஓட்டலில் தங்குகிறார்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் (நடிகராக இருந்த பொழுதே) இலங்கையிலும் முடுசூடா மன்னனாக மக்கள் மனதில் வாழ்ந்தவர்.

1957 இல் இலங்கையில் ஏ. நெயினார் என்பவர்- எம்.ஜி.ஆர் மன்றத்தைத் துவக்கி, தமிழ்நாட்டில் மக்கள் திலகம் என்னென்ன சமுதாயப் பணிகளைச் செய்ய வந்தாரோ- அதே பணிகளை இலங்கை எம்.ஜி.ஆர் மன்றத்தின் மூலம் செய்துகொண்டிருந்தார்.

இந்த மக்கள் திலகம் எம்.ஜி. ஆருக்கு முகவாயில் குழிவிழுந்த பள்ளம் இருக்கும். அது இரட்டை நாடிபோல் தெரியும். ஆரம்பத்தில் இதுவே அவர் ஹீரோவாகத் தடையாக இருந்தது. ‘முகம் குதிரை மாதிரி இருக்கிறது’ என்று கிண்டல் செய்தவர்களும் உண்டு. ஆனால் ஹீரோவாக அவர் வெற்றி பெற்ற பின்னர், அதே போல் தங்களுக்கும் தாடையில் பள்ளம் இருக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் ரசிகர்கள் , ஏன்- சிங்கள் ரசிகர்களும் கத்தியால் தங்களுடைய முகவாயில் கிறி, பள்ளம் விழச் செய்துகொண்டார்கள்.

1967-இல் மக்கள் திலகத்தின் ‘அடிமைப்பெண்’ படம் கொழும்பு மருதாணை சென்டரிலில் ரிலீஸாகிறது. அந்தப் படத்தில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை போடுவது போல் இடம் பெற்றிருந்த ஒரு காட்சியை இலங்கைத் தணிக்கைக் குழு நீக்கி விட்டது. இந்தச் செய்தி அறிந்த எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் நெயினார, அந்த இரவிலேயே ஐந்தாயிரம் ரசிகர்களை ஒன்று திரட்டி, சென்ட்ரல் பட மாளிகை முன் மீண்டும்,அந்தக் காட்சியைச் சேர்க்கச் சொல்லி மறியல் செய்கிறார். உனே அன்றைய பிரதமர் ட்ட்லி சேன நாயகா, அந்தக் காட்சியை மீண்டும் சேர்க்கச் சொல்லி ஆணை பிறப்பித்தார்.

சிங்களப்போராளி இயக்கமான ‘சேகுவேரா’ (ஜனதா விமுக்தி பெரமுனா) என்ற மக்கள் விடுதலை முன்னணிப் போராளி இயக்கத்தில் உறுப்பினராகச்சேருவதற்கு, ‘பந்தி பகாய்’ என்று ஐந்து வகுப்பில் பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற வேண்டும். அதில் ‘தெவனி பந்திய’ என்ற இரண்டாம் வகுப்பில், ‘இந்திய ஏகாதிபத்தியத் திணிப்பு’ என்ற தலைப்பில், “எம்.ஜி.ஆர். என்கிற ஒரு நடிகரின் திரைப்படங்கள் முதலாளித் துவத்துக்கு எதிராகவும் ஏழைகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றன. எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் வெளியிடுவதால் இந்தியாவின் கொள்களை இலங்கையில் புகுத்தப்படுகிறது. எனவே, எம்.ஜி.ஆரின் படங்களை இலங்கையில் தடை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இப்படி எம்.ஜி.ஆரின் படங்களைப்பார்த்து மிகப்பெரிய போராளி இயக்கமே பயந்தது.

இப்படி, கடல் கடந்தும் கல்வெட்டாய் மக்கள் மனங்களில் பதிந்திருந்த் மக்கள்திலகம் – ‘கால்பேஸ்’ ஓட்டலில் தங்கியிருந்த பொழுது, அந்த ஓட்டலுக்குமுன்புறம் இரவு – பகலாக ஆயிரக்கணக்கான மக்கள் காத்துக்கிடந்தார்கள். 1957-ல் இருந்து 1966-வரை எம்.ஜி.ஆர் மன்றம்மூலம் நற்பணியாற்றி வந்த நெயினார் முகமது, முதன்முதலாக்க் கால்பேஸ் ஹோட்டல் நான்காவதுத மாடியில் தங்கியிருந்த மக்கள் திலகத்தைச் சந்திக்கிறார். தன்னை அறிமுகம் செய்து கொண்ட முகமது நெயினாரை மக்கள் திலகம் அகமகிழ்வுடன், “நீங்க தான் அந்த நெயினாரா!” என்று பரிவுடன் விசாரிக்கிறார். “உங்களுடைய பணிகள் எல்லாத்தையும் பத்திரிகைகள் மூலமாகவும், இங்கிருந்த வரும் நண்பர்கள் மூலமாகவும் தெரிந்து கொண்டேன். தொடர்ந்து தொண்டாற்றுங்கள்!” என நெயினாரின் தோள்களைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டுகிறார் மக்கள் திலகம்.

பாராட்டிய கையோடு, கொழும்பிலிருந்து எழுபதுகிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ‘இக்களுவா’ என்ற கடற்கரைக்குச்செல்ல ஹோட்டல் அறையில் இருந்து இறங்கி வருகிறார். ஓட்டலைச் சுற்றி இலட்சக்கணக்கான மக்கள்! எல்லோரையும் வணங்கிவிட்டு மக்கள் திலகம் காரில் கிளம்புகிறார். மக்கள் திலகத்தின் காரின் முன்னும் பின்னும் நூற்றுக்கணக்கான கார்கள் செல்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள், பார்த்தது போதும் என்றில்லாமல், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வத்துடிப்போடும் காரின் வேகத்துக்குப் பின்னால் ஓடி வருகிறார்கள்.

இந்த அற்புதக் காட்சியை அருகில் இருந்த பாராளுமன்றப் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா (அந்நாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தாய்) பார்த்து அதிசயத்துப் போய், தன்னுடன் வந்து கொண்டிருந்த பி.ஏ. செல்லையாவிடம், “யாருக்காக இப்படியொரு கூட்டம் அலைமோத ஓடிக்கொண்டிருக்கிறது?” என்று கேட்கிறார். அதறகு செல்லையா “இந்தக் கூட்டம் எம்.ஜி.ஆர் என்ற நடிகருக்காக மட்டுமல்ல, மக்கள் தலைவன் என்று போற்றப்படுகிற எம்.ஜி.ஆருக்காக!” என்கிறார். இதைக்கேட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயகா, தன்னுடைய கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, ‘மகே அம்மே’ என்று கூறி வியக்கிறார்.

இக்களுவா, நுவரேலியா, மட்டக்களப்பு, மாத்தளை, யாழ்ப்பாணம் என்று ஒரு வாரம்தங்கி மகிழ்கிறார் மக்கள் திலகம். கடைசியாக, மக்கள் திலகம் கருவாகி, உருவாகிப் பிறந்த கண்டிக்குச் செல்கிறார். கண்கலங்க நின்ற மக்கள் திலகத்திடம், “இந்தப் பள்ளி இருக்கும் இடம்தான் நீங்கள் பிறந்த இடம்!” என்று அருகில் உள்ளவர் சொல்ல, உடன் இருந்த எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் நெயினார் முகமதுவிடம், “என்னுடைய ‘இன்பக் கனவு’ நாடகத்தில் நான் பிறந்த வீட்டைப் பள்ளிக்கூடமாக மாற்றுங்கள் என்று பேசுவேன். அது இங்கே உண்மையாக்கப்பட்டிருக்கிறது!” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் மக்கள் திலகம்.

இந்த இலங்கைப் பயணத்தில், மக்கள் திலகம் இதயத்தில் இடம் பிடித்த மும்மது நெயினார், 1975 இல் முதன்முதலாகத் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க வருகிறார். ராதாசலுஜா மற்றும் சில பட உலகப்பிரமுகர்களுடன் இருந்த மக்கள் திலகத்திடன் வாசனை சோப்பும், மதுபாட்டில் வடிவில் இருந்த சில தேங்காய் எண்ணய் பாட்டில்களையும் தருகிறார். பாட்டிலைப் பார்த்து பயந்துபோன மக்கள் திலகம், “என்னப்பா இதை என்கிட்ட தர்றே?” என்று கேட்கிறார்.

“இது நீங்க நினைக்கிறமாதிரி அது இல்லைங்கண்ணே! தேங்காய் எண்ணெய்தான்!” என்று நெயினார் சொல்கிறார். வாங்கிக் கொண்ட எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் ஆளுக் கொன்றாகத்தருகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர் படப்பிடிப்புக்குச செல்லக் கிளம்புகிறார். அப்போது சுற்றியிருந்த கூட்டத்தில், “எங்கே இலங்கை நெயினார்?” என்று கேட்கிறார். பின்னால் நின்றிருந்த நெயினார் அந்த நிமிடத்தில் இலங்கை நெயினாராகப் பெயர் மாற்றப்பட்டு மக்கள் திலகத்துடன் காரில் ஏறிச்செல்கிறார். ஒரு மாதம் மக்கள் திலகத்தின் விருந்தாளியாகத் தங்கியிருந்த இலங்கை நெயினார் மீண்டும் இலங்கை செல்கிறார்.

1977-இல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராகப் பதவி ஏற்கிறார். 1981 இல் உலகிலேயே பெரிய நூலகமான யாழ்ப்பாண நூலகம் ராணவத்தினரால் தீக்கிரையாக்கப்படுகிறது. இலங்கை நெயினார், எம்.ஜி.ஆர் மன்றம் மூலம் இதை முதல்வர் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கிறார். உடனடியாக எம்.ஜி.ஆர் ஆறு இலட்சம் ரூபாய்க்கான நூல்களை அனுப்பி வைக்கிறார்.

அதையடுத்து, 1982 – ல் இலங்கை கிழக்கு மாகாணமான மட்டக்களப்புப் பகுதி புயல், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு விடுகிறது. உடனே இலங்கை நெயினார், அப்பொழுது அமெரிக்கா சென்றிருந்த எம்.ஜி.ஆரிடம் தகவல் சொல்ல, கொழும்பு தொலைபேசியிலிருந்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத் துடன் தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆர் எங்கு தங்கியிருக்கிறார் என்ற விவரம் கேட்கிறார். ‘சிங்கப்பூர் சென்றுவிட்டார்’ என்று அமெரிக்க தூதரகம் சொல்கிறது. உடனே சிங்கப்பூர் இந்தியத் தூதரகத்திடம், ‘எம்.ஜி.ஆர் எங்கு தங்கியிருக்கிறார்’ என்று விபரம் கேட்கப் படுகிறது. சிங்கப்பூர் இந்தியத்தூதரகம் எம்.ஜி.ஆர் ஜப்பான் சென்று விட்டதாகச் சொல்கிறது. அடுத்து ஜப்பான் இந்தியத் தூதரகத்திடம் தொடர்பு கொண்டபோது, அவர்கள்மக்கள் திலகம் தங்கியிருந்த ஓட்டல், தொலைபேசி எண், அறை எண் தருகிறார்கள். அப்பொழுது ஜப்பான் நேரம் இரவு 12.30 மணி, தயங்கிய படியே இலங்கை நெயினார் மட்டக்களப்பு புயல் பாதிப்பைச சொல்கிறார். உடனடியாக முப்பது இலட்சம் ரூபாய்க்கு உணவு, உடை, மருந்து என்று அனைத்தையும் அனுப்ப ஏற்பாடு செய்கிறார் எம்.ஜி.ஆர். ‘மறுநாள் இந்தியா திரும்பும்பொழுது மட்டக் களப்பு வந்து செல்கிறேன்’ என்ற செய்தியையும் சொல்கிறார் மக்கள் திலகம்.

மகிழ்ச்சியும், ஆறுதலும் அடைந்த இலங்கை நெயினார் மறுநாள் மக்கள் திலகத்தின் வருகைக்காக்க் காத்திருக்கிறார். ஆனால் சொல்லியபடி வர இயாலத எம்.ஜி.ஆர் போனிலேயே மட்டக் களப்பு வருவதாகத்தான் இருந்தேன். ஆனால்தமிழ்நாட்டில் இராமேசுவரம் பெரும் புயலில் பாதிக்கப்பட்டதாகச் செய்தி வந்திருக்கிறது. எனவே நான் அங்கு செல்கிறேன்!” என்று இலங்கை நெயினாரிடம் இதமாகச் சொல்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.