எம்.ஜி.ஆர்., எனக்கு நிறைய அறிவுரை கூறுவார்

9

ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து, திரையுலகில் இருப்பது தொடர்பாக, பிரபல நடிகை லதா:

ராமநாதபுரம் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். படித்தது, சென்னை தி.நகரில். பள்ளியில் படிக்கும் போது, ரொம்ப அமைதியாக இருப்பேன்.

நடனம், கலை நிகழ்ச்சிகள் என்றால் இஷ்டம். அதனால், பள்ளியில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளுக்கு என் பெயரை, என்னை கேட்காமலேயே ஆசிரியர்கள் சேர்த்து விடுவர்.

எங்கள் பள்ளி போட்டோகிராபர் தான், நடிகர், ஆர்.எஸ்.மனோகரோட போட்டோகிராபர்.

என் படத்தை தற்செயலாக பார்த்த மனோகர், அதை, எம்.ஜி.ஆரிடம் சொல்லியுள்ளார். மேலும், அப்போது எடுக்க இருந்த புதுப்படத்திற்கு, நான் சரியாக இருப்பேன் என்றும், அவரிடம் கூறியுள்ளார்.

என்னையும், என் தாயையும் எம்.ஜி.ஆர்., அவர் வீட்டிற்கு அழைத்தார். அம்மாவுடன் சென்றேன் நான். அப்போது, ‘சினிமாவில் நடிப்பது எங்கள் குடும்பத்திற்கு பிடிக்காது; அதனால், நடிக்க ஆர்வம் இல்லை’ என, என் அம்மா கூறினார்.

அவரை சமாதானம் செய்த, எம்.ஜி.ஆர்., ‘உங்கள் கவுரவத்திற்கு எந்தப் பாதிப்பும் வராத வகையில் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என உறுதியளித்து, நடிக்க சம்மதம் கேட்டார். அதன் பின், ஒத்துக் கொண்டோம்.

அப்போது, 1970. உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எம்.ஜி.ஆர்., எடுத்துக் கொண்டிருந்தார்.

அவரின் இரண்டு நாயகிகளில் ஒருவராக, என்னை அவர் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார்.

அதற்கு முன், இரண்டு மாதங்கள் எனக்கு, நடனம், பேச்சுப் பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்தார். சினிமாவுக்கு ஏற்ற மாதிரி நடிக்கவும், பேசவும் பயிற்சி அளித்த பிறகு தான், படத்தில் நடிக்கத் துவங்கினேன்.

எம்.ஜி.ஆர்., இயக்கிய மூன்று படங்களில், இரண்டு படங்களில் நான் நடித்துள்ளேன். அவர் முதல்வராக ஆகும் முன் நடித்த, கடைசி படமான, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திலும் நான் நடித்தேன்.

படப்பிடிப்பின் போது, எம்.ஜி.ஆர்., எனக்கு நிறைய அறிவுரை கூறுவார். ‘எல்லாரையும் நம்பக் கூடாது; யாரையும், பெயர் சொல்லி அழைக்கக் கூடாது; மரியாதையாக கூப்பிட வேண்டும்’ என, பல அறிவுரைகளை அவர் கூறியுள்ளார்.

படப்பிடிப்பில் அவர் என்ன சாப்பிடுவாரோ அதைத் தான், உடன் நடிப்பவர்களும் சாப்பிட வேண்டும் என, விரும்புவார். அவரின் குணம், எனக்கும் வந்து விட்டது.

இப்போதும் படப்பிடிப்பில், ‘பிசி’யாக இருக்கும் நான், அனைவருடனும் சேர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன். அவருடன் நிறைய படங்களில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன்.

நடிக்க வந்து, 50 ஆண்டுகள் ஆகி விட்டன; இடையில் சில ஆண்டுகள் தவிர்த்து, இப்போது வரை, பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன்!

Leave A Reply

Your email address will not be published.