நடிகர்கள்: உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிசந்திரன், ஆரி, ஷிவானி ராஜசேகர், மயில்சாமி மற்றும் பலர்.
இசை: திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்
எடிட்டிங்: ரூபன்
தயாரிப்பு: போனி கபூர்
இயக்கம்: அருண்ராஜா காமராஜ்.
ஒடுக்கப்பட்ட சமூகம் என்று குறிப்பிடப்படும் தலித் ஜாதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் மாயமாகிறார்கள். இருவர் தூக்கில் தொங்கவிடப்படுகிறார்கள். ஒரு பெண் , என்ன ஆனார் என தெரியவில்லை. அதை சாதாரண பெட்டி கேஸ் போல, அந்த வழக்கை கையாளும் காவலர்களுக்கு மத்தியில், புதிதாக அங்கு பொறுப்பேற்கும் ஏஎஸ்பி., உதயநிதி, உணர்வோடு அதை விசாரிக்கிறார். தூக்கிலிடப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைத்ததா? மாயமான பெண் கிடைத்தாரா? என்பது தான், நெஞ்சுக்கு நீதி.
நடிகர்களை பொறுத்தவரை இப்படத்திற்கு உதயநிதி ஐ பி எஸ் அதிகாரி என்றவுடன் புருவம் உயர்த்தியோரின் கண்ணில் காந்தங்களை அணிய வைத்து விடுகிறார்.. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் பார்த்த விடலைப் பையன் சரவணனா இப்படி கவனம் ஈர்க்கும் காவல் அதிகாரி பாத்திரத்தில் என்று வியக்க வைக்கிறார் நடிகர் உதயநிதி. அதிலும் தன்னுடையது பொறுப்பான கேரக்டர் என்பதை புரிந்து போலீஸூக்கு உரிய விறைப்பாக மட்டும் காட்டாமல் , சூழ்நிலைக்கேற்ப நடந்துகொள்ளும் விதம் தொடங்கி ஒவ்வொரு அடியிலும் பலே சொல்ல வைக்கிறார். இவரை தவிர ஆரி, ஷிவானி ராஜசேகர், இளவரசு, மயில்சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, தான்யா ரவிசந்திரன் என அனைவருமே படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர், கொடுத்த பாத்திரத்தை மிக அருமையாகவே செய்து கொடுத்துள்ளனர்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு ராவாக செல்லும் இப்படத்தை ஒருபடி மேலே ரிச்சாக காட்டியுள்ளது. திபு நினன் தாமஸின் இசையில் பாடல்களும் சரி, பின்னனி இசையும் சரி மிக அருமையாக வந்துள்ளது. அதாவது படத்தின் கதைக்குள் நம்மை அழைத்து செல்வதே , அந்த பின்னணி தான். படம் முழுக்கவே விளையாடியிருக்கிறார் திபு.
குறிப்பாக இப்படத்தின் வசனங்கள் உண்மையிலேயே மனதை உலுக்கும் படித்தான் அமைந்துள்ளது. உதாரணமாக, சுடுகாட்டில் பிணத்தை எரிக்கும் வெட்டியானிடம் அவரது மகன், “அப்பா இந்த பிணம் எரியும் இடமே நன்றாகத்தானே உள்ளது. ஏன் தாத்தாவை கீழே வச்சு எரிச்சோம் என கேட்க, அதற்கு அப்பா இங்கே நாம் எரிக்க தான் முடியும், எரிய முடியாது” என்கிற வசனமாகட்டும், “இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரையே பல பேர் ஒரு ஜாதி கட்சியின் தலைவராகத்தான் பார்க்கிறார்கள்” என்கிற வசனமாகட்டும் அருமையாக எழுதியுள்ளார்.
தற்போது முழு நேர அரசியல்வாதி ஆன நிலையிலும் அரசியல்வாதிகள் பார்க்கும் ஜாதியையும், ஜாதியை வைத்து அரசியல் செய்து பிழைப்பவர்களையும் சாடியிருக்கிறார்கள்; அதற்காகவே உதயநிதியை பாராட்டலாம்.
எந்த சமரசமும் இல்லாமல், துணிந்து ஜாதிய அரசியல் படத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கம்பீரம்!
மொத்தத்தில் சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் பார்த்தே ஆக வேண்டிய படம் இந்த‘நெஞ்சுக்கு நீதி’