O2- விமர்சனம்!

10

டிகர்கள்: நயன்தாரா, பேபி ரித்விக் மற்றும் பலர்.

இசை: விஷால் சந்திரசேகர்

ஒளிப்பதிவு: தமிழ் A அழகன்

எடிட்டிங்: செல்வா RK

தயாரிப்பு: ட்ரீம் வாரியர்ஸ்

இயக்கம்: G.K.விக்னேஷ்

OTT: டிஸ்னி + ஹாட்ஸ்டார்.

கட்டிய கணவன் காலமான நிலையில் தன் ஐந்து வயது சிறுவனுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார் நயன்தாரா. அதே சமயம் அவரது மகனுக்கு சுவாச தொடர்பான பிரச்சனை ஒன்றும் இருக்க செயற்கை சுவாசத்துடனேயே அவன் உயிர் வாழ வேண்டி இருக்கிறது.
அதற்கான அறுவை சிகிச்சை ஒன்றிற்காக கோவையில் இருந்து கொச்சிக்கு பஸ்ஸில் பயணப்படுகிறார் அவர். அவருடன் அதே பஸ்ஸில் வேறு சிலரும் பயணிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுயநல பிரச்சனை இருக்கிறது. அந்த பஸ் வழியில் ஒரு நிலச்சரிவில் பஸ் மாட்டிக்கொண்டு புதைந்து போக உள்ளே இருப்பவர்கள் எப்படி சுவாசிக்கப் போராடினார்கள் என்பது தான் இதன் கதை.

நயன்தாராவின் நடிப்பு பற்றி புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. வாழ்க்கையின் சகல முனைகளிலும் அவருக்கு பிரச்சினை தொற்றிக்கொள்ளும் வேடத்தில் அதை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை எல்ஸ்போஸ் செய்வதில் மிளிர்கிறார். மகனுக்கு வைத்திருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரையும் பிறர் சுயநலத்துக்காக இழக்க நேர்கையில் ஒரு தாயின் போராட்டம் எப்படி இருக்கும் என்பதை உக்கிரத்துடன் காட்டியிருக்கிறார். ஆனாலும் அவரது நடிப்புக்கு இன்னும் தீனி சேர்த்திருக்கலாம் என்றும் எண்ண வைத்திருக்கிறார்,

நயன்தாராவின் மகனாக யு டியூப் புகழ் ரித்விக். அந்த சிறுவன் மீது அனுதாபம் ஏற்படும் ஒரு கதாபாத்திரம். முதல் படம் என்று சொல்ல முடியாதபடி நடித்து தனிக் கவனம் பெறுகிறார் ரித்விக். அதிலும் நாயகி நயன்தாராவை விட ஒரு படி மேலே போய் நம்மை கவர்ந்து இருக்கிறார் என்பதுதான் ஹைலைட்.

படத்தின் பெரிய பலம் கேமராமேனின் உழைப்பு தான். ஒரு பஸுக்குள் சுருங்கி நிற்கும் கதையை கூடுமான வரை வெவ்வேறு லைட் செட்டிங், வெவ்வேறு கோணங்கள் என காட்டியிருக்கிறார். பின்னணி இசையும் ஒரு நல்ல திரில்லருக்கான மூட்-ஐ கொடுக்கிறது
எடிட்டிங் சிறப்பு

படம் தொடங்கிய 20 நிமிடங்களில் துவங்கும் த்ரில்லிங்கை க்ளைமாக்ஸ் வரை கொஞ்சமும் குறையாமல் கொண்டு சென்றுள்ளார் டைரக்டர். அதிலும் தாய் பாசம் என்பதை தாண்டி, ஆக்சிஜன் தேவையின் அவசியத்தையும், இயற்கையை காக்க வேண்டியதன் அவசியத்தை சொல்லி இருக்கிறார். நாம் இயற்கையை காப்பாற்றினால் அதுவும் நம்மை காக்கும். நாம் அழித்தால், அதுவும் நம்மை அழிக்கும் என்பதை இரண்டு மணி நேர படமாக சொல்லி இருக்கிறார்

வழக்கம் போல் சில லாஜிக் மீறல் இருந்தாலும் அறம், நெற்றிக்கண், டோரா போன்ற படங்களின் வரிசையில் நயன்தாராவின் ஓ2 படமும் பேசப்படுமென்றே நம்பலாம்

மொத்தத்தில் இந்த ஓ 2- ஓ கே ரகம்

Leave A Reply

Your email address will not be published.