ஓ மை டாக் – விமர்சனம்!

2

டிப்பு: அருண் விஜய், அர்னவ் விஜய், விஜயகுமார், பானுசந்தர், வினய் ராய், மகிமா நம்பியார், ஏ.வெங்கடேஷ், மனோபாலா, மற்ரும் பலர்

தயாரிப்பு: 2டி என்டர்டெயின்மென்ட் சூர்யா, ஜோதிகா

இசை: நிவாஸ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு: கோபிநாத்

இயக்கம்: சரோவ் சண்முகம்

ரிலீஸ்: பிரைம் வீடியோ ஒ டி டி தளம்

மிடில் கிளாஸ் பேமிலியைச் சேர்ந்த நாயகன் அருண் விஜய், மனைவி மகிமா நம்பியார், தந்தை விஜயகுமார், மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் ஊட்டியில் வாழ்ந்து வருகிறார். அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் எப்போதும் சேட்டை செய்பவராக இருக்கிறார்.
அதே ஊட்டியில் ஏகப்பட்ட டாக் ஷோ-க்களில் தான் வளர்க்கும் நாய்களை கலக்க விட்டு வெற்றிகளை மட்டும் பெற்று கெத்தாக வரும் வினய் வளர்க்கும் நாய்களில் கண் தெரியாத நாய் ஒன்று பிறக்கிறது. அந்த நாய் குட்டியை கொலை செய்யுமாறு வினய் கூறுகிறார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த கண் தெரியாத குட்டி நாய் அர்னவ் விஜய்யிடம் கிடைக்கிறது. அந்த குட்டி நாய்க்கு கண் ஆப்ரேஷன் எல்லாம் செய்து தானே அன்பாக வளர்க்க ஆரம்பிக்கிறார் அர்னவ். ஒரு கட்டத்தில் இண்டர்நேஷனல் டாக் ஷோ நடக்க இருக்கிறது. இந்த ஷோவில் அர்னவ் அடாப்ட் செய்து வளர்த்த நாய் பல சுற்றுகளில் முன்னேறுவதால் அந்த நாயை போட்டியில் கலந்துக் கொள்ளாமல் தடுக்க வினய் முயற்சி செய்கிறார். இறுதியில் அர்னவ்வின் நாய் டாக் ஷோவில் வெற்றி பெற்றதா?, வினய்யின் முயற்சி என்ன ஆனது? என்பதே படத்தின் கதை.

25 ஆண்டுகளுக்கும் மேல் கோலிவுட்டில் பயணம் செய்யும் அருண் விஜய், நடுத்தரக் குடும்ப தந்தை கதாபாத்திரத்தைப் புரிந்து . விஜயகுமார் மற்றும் அர்னவ்வுடன் கோபம் மற்றும் பாசம் என நடிப்பில் வழக்கம் போல் தன் பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அர்னவ் விஜய்க்கு முதல் படமிது என்றாலும் குடும்பத்தினரால் அடக்க முடியாத குறும்புகள், பள்ளியில் செய்யும் நமுட்டுச் சேட்டைகள், குட்டி நாய் ஒன்ரு கிடைத்தவுடன் அதனுடன் ஏற்படும் அன்னியோன்யம், முத்தாய்ப்பாக வில்லன் வினய் மனம் மாற வைக்கும் தூய அன்பு ஆகிய எல்லாவற்ரையும் புரிந்து சிறப்பாகச் செய்திருக்கிறார் . மகிமா நம்பியார் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஜயகுமார்.

ஸ்டைலிஷ் வில்லனாக வரும் வினய்யின் நடிப்பு பெரியதாக எடுபடவில்லை. அர்னவ்வின் நண்பர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். அதிலும் சிம்பா எனும் நாய்க்குட்டி படம் நெடுக வருகிறது. நாமும் தூக்கிக் கொஞ்சலாம் என நினைக்குமளவுக்கு இருக்கிறது.நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. கோபிநாத்தின் ஒளிப்பதிவு ஊட்டியின் அழகை தன்னால் முடிந்த அளவு காட்டி அசத்தி இருக்கிறார்.

அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம் குழந்தைகளுக்கு ஏற்ற திரைப்படத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருப்பது படம் உருவாக்கம் நெடுகிலும் தெரிகிறது, அதனால்தான் சூர்யா – ஜோதிகா தம்பதி தங்களது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் இப்படத்தை  தயாரித்திருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

மொத்தத்தில் கோடைக் கால ரசனைக்குரிய படமே இந்த ஓ மை டாக்

Leave A Reply

Your email address will not be published.