கோலிவுட்டின் பிரபலமான படு பிசியான படத்தொகுப்பு கலைஞர்களில் ஒருவர். கடந்த மார்ச் (2015) மாதம் தனது பணியிடத்திலேயே மயங்கி விழுந்து நினைவு திரும்பாமல் மருத்துவமனையில் இதே நாளில் இறந்து போனார்.
நம்ம தமிழ் சினிமாவின் பாலா, வெற்றிமாறன் போன்ற முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு தொகுப்பாளாராக பணிபுரிந்தவர். “ஆடுகளம்” படத்தொகுப்பிற்காக தேசிய விருது பெற்றவர். பரதேசி, மாப்பிள்ளை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா, எதிர்நீச்சல் போன்ற தமிழ்ப்படங்கள் மற்றும் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட 70-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பணியாற்றியவர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான கிஷோர், பத்தாம் கிளாஸ் வரை மட்டுமே படிச்சவர். சினிமாவில் ஆளாகும் ஆசையுடன் நுழைந்தவர் தற்செயலாகவே எடிட்டிங் துறைக்குள் வந்து சேர்ந்தார். பிரபல படத் தொகுப்பாளர் வி.டி விஜயனிடம் பயிற்சி எடுத்து பணியாற்றியவர். பின்னர் கடும் உழைப்போடும், துறைசார் நுட்பங்களை கற்றறிந்தும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய தொழில் நுட்பக் கலைஞராக உருவெடுத்தார்.
திருமணமாகாத இவர், இயக்குநர் வெற்றிமாறனின் ”விசாரணை” திரைப்படத்தின், தொகுப்பு பணியின் போது, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால், மயங்கி விழுந்து நினைவு திரும்பாமலேயே மரணமடைந்தார். இது குறித்து அப்போது சில ஊடகங்கள் மட்டும் இத்தொழிலில் நிலவும் டிப்ரெஷன் குறித்து ஓரிரு பக்க கட்டுரை எழுதி விட்டு அடுத்த பக்கத்தை நிரப்ப போய் விட்டார்கள்.
நம் உலக அளவிலான சினிமாவில் புதிய புதிய தொழில்நுட்பங்களைப் பேசுவோரும், தமிழ் சினிமாக்களின் போக்கை அணு அணுவாய் அலசிவோரும் எக்கச்சக்கமாய் உண்டு.
ஆனால் ஒரு தொழில் நுட்பக் கலைஞனின் அந்த மரணம் குறித்து அவர்கள் உட்பட தொழிலாளர்கள் எவருமே தீவிர ஆய்வு எதையும் செய்யவில்லை.
உண்மையில் கிராஃபிக்ஸோ இல்லை புதிய கேமாராவுக்கோ இருக்கும் மதிப்பு தொழிலாளிகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உயிர்களுக்கு இல்லை. கிஷோர் மரணம் நம் ஊடக நண்பர்களுக்கும் இன்றளவும் ஒரு எச்சரிக்கை என்பதை நினைவு கொள்வது நல்லது