தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. இந்த தேர்தல் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததால் வாக்கு எண்ணிக்கை நடத்தப் படாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசர், பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதேபோல், இந்த அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்தலில் ஒவ்வொருவரும் பெற்ற வாக்குகள் குறித்து கீழே காணலாம்.
▶தலைவர் பதவிக்குப் பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்ட நாசர் 1,701 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் போட்டியிட்ட பாக்கியராஜ் 1054 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
▶இதேபோல், பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்ட பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால் 1720 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐசரி கணேஷ், 1032 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
▶பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்ட கார்த்தி 1827 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரசாந்த் 919 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
▶துணைத் தலைவர் பதவிக்கு பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்ட பூச்சி முருகன் 1612 வாக்குகளை பெற்றும், கருணாஸ் 1605 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர். இவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட குட்டி பத்மினி, 1015 வாக்குகளும், உதயா 973 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.