பயணிகள் கவனிக்கவும் – விமர்சனம்!
நடிப்பு : விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர்
இயக்கம் : எஸ்.பி.சக்திவேல்
தயாரிப்பு :ஆல் இன் பிக்சர்ஸ் விஜய ராகவேந்திரா
ரிலீஸ் : ஆஹா ஓடிடி தளம்
தவறான தகவலை பரப்புவது, சமூகத்தில் நடக்கும் தீவிரவாதம் என கூற முயற்சிக்கிறது படம். அதாவது வாய் பேச இயலாத நாயகன்
மெட்ரோ ரயிலில் தூங்கி கொண்டிருக்கும் காட்சியை போட்டோ எடுத்து குடித்து விட்டு தூங்குகிறார் என்ற சேதியுடன் சமூக வலைதளத்தில் பகிர்கிறார் ஒருவர், அதனால் எப்படி எல்லாம் பாதிக்கபடுகிறான் அந்த அப்பாவி நாயகன் என்பதை சகலரும் உணரும் விதத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
நாயகனாக வரும் விதார்த்தைத் தாண்டி வேறொருவரைக் இந்த கேரக்டரில் நினைத்தே பார்க்க வேண்டாத அளவில் சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவனாக நச்சென்று பொருந்தியிருக்கிறார். . முழுதாகப் பேச முடியாத- மூக்கால் பேசுவது போன்ற குரல் எழுப்பும், பேச்சு மாற்றுத் திறனாளி பாத்திரத்தில் வாழ்ந்து சாதித்திருக்கிறார் விதார்த் . அவரின் சைகையுடனாக பேச்சு, அதற்கேற்ற உடல் மொழிகள், அவர் சொல்வது ரசிகருக்கு ஓரளவையும் தாண்டி புரிய வேண்டும் என்கிற அளவுகோலைக் கவனத்தில் கொண்டு ஹீரோ என்ற எல்லைக்குள் அடங்காமல அதகளம் செய்து மனசில் வந்து ஒட்டிக் கொள்கிறார்..அவரது மனைவியாக வரும் லட்சுமி பிரியாவும் தன் யதார்த்த நடிப்பினால் ரசிக்க வைத்திருக்கிறார்
துபாய் ரிட்டன் ஆக வரும் கருணாகரன் யாதொரு கெட்ட நோக்கமும் இல்லை என்றாலும் முட்டாள்தனமாக செய்யும் ஒரு சிறு தவறு விதார்த் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்ற கதை களத்தை தோளில் சுமந்தபடி அநாயசமாக பயணிக்கிறார். அதிலும் நாயகன் வாய் பேச முடியாத அப்பாவி உண்மை தெரியும் நேரத்திலிருந்து குற்ற உணர்ச்சியிலும், தான் செய்த பாவம் தன்னை திரும்பி வந்து தாக்குமோ என்ற அச்சத்திலுமாக நகைச்சுவை தாண்டி தானும் நடிகண்டா என்று நிரூபித்து விட்டார்.
பாண்டிக் குமாரின் கேமிரா சென்னையை பல புதிய கோணங்களில் காட்டி ரசிக்க வைத்திருக்கிறது. அதிலும் கிட்டத்தட்ட மெட்ரோ ரயிலும் இதில் ஒரு பாத்திரமாக ஆகியுள்ள நிலையில் அந்தக் காட்சியையும் ரிபீட்டடாக இல்லாமல் காட்டி புன்னகைக்க வைத்து விட்டது. சமந்த நாக்கின் இசைக் கோர்ப்பும் சினிமா பயணிகள் பயணத்துக்கு இணையாக வந்து ஆராட்டுகிறது. .
மலையாளத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளை அள்ளிய விக்ருதி திரைப் படத்தின் ரீமேக் தான் இது. ஆனாலும் ஒரு மாற்று மொழிப் படத்தை நம் மனதுக்கு உகந்த அர்டிஸ்டுகளின் துணையோடு சொல்ல வந்த கருத்தை ஒரே நேர் கொட்டில் கொண்டு போய் அப்ளாஸ் வாங்குகிறார் டைரக்டர் சக்திவேல். அதிலும் இப்போது நம்மில் பெரும்பாலானோர் புழங்கும் சமூகவலைதள பகிர்வின் பாதிப்பை மிகச் சரியாக எக்ஸ்போஸ் செய்திருக்கிறார். இதன் பொருட்டு அனைத்து நடிகர்களும் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நியாயத்தை சரியாகவே கொடுத்து இருக்கிறார்கள்.
மொத்தத்தில் அனைவரும் பார்க்க கூடிய, ஒரு புதிய சேதி சொல்லும் படமாக ஆஹா ஓடிடியில் வெளியாகி இருக்கிறது இந்த பயணிகள் கவனிக்கவும்.
கண்டிப்பாக சினிமா பார்வையாளர்கள் இந்த படத்தை கவனித்தே ஆக வேண்டும்.