போத்தனூர் தபால் நிலையம் – விமர்சனம்!

5

டிப்பு: பிரவின், அஞ்சலிராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ், சீதராமன், தீனா, அங்கமுத்து, சம்பத்குமார்

தயாரிப்பு: சுதன், சுந்தரம் ஜி.ஜெயராமன்

இயக்கம்: பிரவின்

ரிலீஸ்: ஆஹா தமிழ் ஒடிடி

1990ம் ஆண்டில் நடந்த கதை . நாயகன் பிரவீன் சொந்தமாக பிசினஸ் ஆரம்பிப்பதற்காக வங்கி லோனுக்காக காத்திருக்கிறார். இவருடைய தந்தை போத்தனூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றுகிறார். ஒரு நாள் தபால் நிலையத்தில் டெபாசிட் ஆக வந்த பணத்தை, வங்கியில் செலுத்தாமல் விட்டுவிடுகிறார் கேஷியர். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தபால் நிலையத்தில் அந்தப் பணம் இருந்தால் பாதுகாப்பில்லை என கருதிப் போஸ்ட் மாஸ்டர் அந்த பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்கிறார். செல்லும் வழியில் அந்தப் பணத்தை யாரோ திருடி விடுகிறார்கள். திங்கட்கிழமை காலைக்குள் அந்த பணத்தை தபால் நிலையத்தில் வைக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் போஸ்ட் மாஸ்டர் மகன் பிரவீன், காணாமல் போன பணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் பணம் கிடைத்ததா? கொள்ளையடித்தவர்கள் யார்? என்பதே படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் பிரவீன், இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். 1990 கால கட்டத்தில் திரைக்கதை நகர்வதால் அதற்கு ஏற்றார் போல் சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்தி இருக்கிறார்கள். புதுமுக நடிகர் என்பதால் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனால், இயக்கத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லலாம். மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போக போக விறுவிறுப்பாக நகர்கிறது.

அவரது அப்பாவாக நடித்திருக்கும் ஜெகன் கிரிஷ், நடிப்பில் சற்றே மேடை நாடக பாணி தெரிந்தாலும் அந்த காலகட்டத்திற்கு அந்த நடிப்பு பொருத்தமாக இருக்கிறது. கேஷியர் சீதாராமன், பிரவீணின் அம்மாவாக வருபவர் மற்றும் காதலியாக வரும் அஞ்சலி ராவ் அனைவரும் தங்கள் பங்கைச் சரியாகவே அளித்திருக்கிறார்கள்.

இது போன்ற ‘டார்க் ஹியூமர்’ படங்களில் நகைச்சுவை பெரிதும் கைகொடுக்கும். இந்தப் படத்திலும் நகைச்சுவை இருக்கிறது. சுகுமாரன் சுந்தரின் ஒளிப்பதிவு, கலை இயக்கம் எல்லாமே நேர்த்தியாக இருக்கிறது. தென்மாவின் இசையும் பொருத்தம். ஆனால், நமக்கு அறிமுகமான ஒரு ஹீரோவும், படத்தில் இன்னும் கொஞ்சம் நகைச்சுவையும் விறுவிறுப்பும் கூட்டி இருந்தால் தியேட்டரில் வெளியிட்டாலும் பெரிய வெற்றியைத் தந்திருக்கும் படமாக இது இருக்கும்.

ஆனால் ஓடிடிக்கு மெத்தப் பொருத்தமான படமாக அமைந்திருக்கிறது. வீடுகளில் குடும்பத்துடன் கண்டு ரசிக்கத் தோதான படம்.

Leave A Reply

Your email address will not be published.