அன்றைய பொடிசுகள் சினிமாவைப் பார்த்து ரசிக்கத் தொடங்கியிருந்த காலத்தில், பயமுறுத்துகிற வகையிலும், பெண்களிடம் கெட்டபெயரும், வசை பாட்டும் வாங்குகிற வகை யிலும், வெள்ளித் திரையை ஆக்கிரமித்துப் போனவர்தான் பி.எஸ். வீரப்பா.
அவருடைய பயங்கரமான சிரிப்பும், வசனம் பேசு கின்ற பாணியும் ரசிகர் களை மிகவும் கவர்ந்த ஒன்று. அது அவருக்கு கதாநாயகயர்களுக்கு இணையான ஆண் ரசிகர்களையும் பெற்றுத் தந்தது. வீரப்பா வருகின்ற முதல் காட்சியில் ஆண் ரசிகர்களிடம் இருந்து கைதட்டல்களும், விசில் சத்தங்களும் எழும் அதே நேரத்தில், பெண்களிடம் இருந்து வசைப்பாட்டுகள் வருவது வாடிக்கையாகிப் போனது.
சண்டைக் காட்சிகள் நிறைந்த எம்.ஜி.ஆர். திரைப்படங்களில், எம்.ஜி.ஆர். வந்ததும் தான் படம் சூடுபிடிக்கும். அதே வேளையில் எம்.ஜி.ஆர். படத்தில் பி.எஸ்.வீரப்பா இருந்தால், அவர் வந்ததுமே படம் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும் என்பது தான் பி.எஸ். வீரப்பாவுக்கு கிடைத்த வெற்றி. கோயம்புத்தூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த பி.எஸ்.வீரப்பா, சினிமாத் துறையில் அறிமுகமானது 1939-ம் ஆண்டு வெளியான ‘மணிமேகலை’ திரைப் படத்தில் தான். ஆனால் அவருக்கு பெயர் பெற்றுத் தந்தது, 1948-ம் ஆண்டு தியாகராஜபாகவதர் நடிப்பில் வெளியான ‘ராஜமுக்தி’ திரைப்படம்.
தொடர்ந்து பி.எஸ்.வீரப்பா நடித்த படங்களில் தனக் கென நிலையான ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். அவரது வசனங்களில், ‘மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’, ‘இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்’ போன்ற வசனங்கள் மிகவும் பிரபலம். இந்த வசனங் களை இன்றும் கூட சிலர் உச்சரிப்பதை கேட்க முடியும்.
தவிர ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் பத்மினியும், வைஜெயந்தி மாலாவும் ஆடும் போட்டி நடனத்தின் நடுவே ‘சபாஷ்! சரியான போட்டி’ என்று சொல்லும் பி.எஸ்.வீரப்பா வின் வசனமும் குறிப்பிடத் தக்க ஒன்று.