படம்: புஷ்பா தி ரைஸ் (பாகம் 1) (திரைப்பட விமர்சனம்)

17

படம்: புஷ்பா தி ரைஸ் (பாகம் 1)

நடிப்பு: அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத் பாசில், தனஞ்ஜெய், சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், ஜெகதீஷ் பிரதாப், ஷஹத்ரு, அனுசுயா பரத்வாஜ்

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு: மிடோஸ்லா குபா புரோசெக்

தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ், முட்டம் செட்டி மீடியா

வசனம்: மதன் கார்க்கி

இயக்கம்: சுகுமார்

 

திருப்பதி அருகே உள்ள மலைகாட்டு பகுதியில் செஞ்சந்தன மரங்களை வெட்டி கடத்துவதை இரண்டு கோஷ்டி சட்ட விரோத மாக நடத்தி வருகிறது. அந்த காட்டில் மரங் களை வெட்டி கடத்துவதில் தனித் திறமையும் துணிச்சலும் கொண்டவனாக உலா வருகிறான் புஷ்பராஜ். யாருக்கும் அடங்காதவனான புஷ்பராஜின் திறமையை கடத்தல் கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறது. வியாபாரத்திலும் அடித்து பேசி கோடிகளை புரட்ட தெரிந்த புஷ்பா தன்னை சேர்த்துக் கொண்ட கூட்டத்துக்கே பாடம் கற்று தருகிறான். கூலியாக இருந்த புஷ்பராஜ் பிஸ்னஸ் பார்ட்னராகி ஒரு கட்டத்தில் தனி சாம்ராஜ்யமே அமைக்கிறான். அவனை பிடித்து ஜெயிலில் அடைக்க கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கும் போலீஸ் அதிகாரியையே திணறடிக்க வைத்தும் அசகாய சூர வித்தைகளை புஷ்பராஜ் அரங்கேற்றி காட்டுகிறான். இந்த மோதலில் ஜெயிப்பது யார் என்பதை பிரமாண்டமாக சொல்கிறது புஷ்பா தி ரைஸ் படம்.

டிப் டாப் உடையில் அழகிய வாலிபனாக இதுவரை கண்டுவந்த அல்லு அர்ஜூன் முற்றிலும் முரட்டு மனிதனாக தரைலோக்கல் பாத்திரம் ஏற்று புஷ்பராஜாக நடித்து காட்சிக்கு காட்சி அதிர வைக்கிறார்.

குடோனில் டன் கணக்கில் மறைத்துவைக்கப் பட்டிருக்கும் செஞ்சந்தன மரங்களை கைப்பற்ற போலீஸ் பட்டாளம் திரண்டு வருவதை அறிந்ததும் அவ்வளவு மரங் களையும் ஆற்றில் தள்ளி அதை அணையில் தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்து போலீஸ் பட்டாளத்தையே தனி ஆளாக அலைகழிக்கச் செய்யும் உருண்டு விழும் ராட்சத கட்டைகள் மீது அந்தர் பல்டிகள் அடித்து அசத்துகிறார் அல்லு.

ஒவ்வொரு அடியும் இடிபோல் இருக்கா? என்று கேட்கும் அளவுக்கு தன்னை தாக்க வரும் அடியாட்களை ஒற்றை அடியில் நிலையகுலையச் செய்யும் அல்லுவின் ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது.

போலீஸ் அதிகாரியாக பஹத் பாசில் மொட்டை தலையுடன் வந்தாலும் அல்லுவுக்கு செம போட்டி யாக நடித்து மிரள வைக்கிறார். போலீஸ் நிலையத்தில் வைத்து அல்லுவை பஹத் அவமானப்படுத்தி அனுப்ப அதற்கு பதிலடியாக காட்டுப்பகுதியில் பஹத்தை பேண்ட் சர்ட்டை கழற்றவைத்து ஜட்டியுடன் நடுரோட்டுக்கு அனுப்பி, அல்லு பழி வாங்குவதும் அடுத்த மோதல் இவர்களுக்குள் எப்படி இருக்குமோ என்ற எதிர்ப்பார்ப்பை கிளப்புகிறது. இதற்கு அடுத்து படமாகவிருக்கும் புஷ்பா இரண்டாம் பாகத்தில்தான் விடை கிடைக்கும் என்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

காட்டுப் பகுதியில் வசிக்கும் பெண்ணாக வரும் ராஷ்மிகா முதல் காட்சியிலேயே முந்தனையை கழற்றி ரசிகர்களின் பார்வையை தன்பக்கம் இழுக்கிறார். அவருடன் அல்லு நடத்தும் காதல் சிலுமிசங்கள் கிக் ஏற்றுகிறது.

“சாமி மந்திரசாமி” பாடலில் ராஷ்மிகா போட்டிருக்கும் குத்து பல்போன தாத்தக்களையும் ஜொள்ளுவிட வைக்கிறது.

படம் முழுவதையும் கண்கொட்டாமல் பார்க்கும் அளவுக்கு பிரமாண்டத்தை அள்ளித்தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இதுக்கு மேல என்ன வேணும் என்றளவுக்கு பாடல்களை தெறிக்க விட்டிருக்கிறார். காட்சிகளுக்கு ஏற்ப ரீ ரிக்கார்டிங்கும் பிரமாண்டமாக ஒலிக்கிறது.

இயக்குனர் சுகுமார் உச்ச கட்ட ஆக்‌ஷன் காட்சிகளை முதல் பாகத்தில் தந்திருப்பதால் இரண்டாவது பாகம் இன்னும் எவ்வளவு அதிரடியாக இருக்குமோ என்ற மலைப்பை ஏற்படுத்திவ இருக்கிறார்.

புஷ்பா தி ரைஸ் – அல்லுவின் ஒன்மேன் ஆர்மி ஆக்‌ஷன்.

by
க.ஜெயச்சந்திரன்

Leave A Reply

Your email address will not be published.