ராஜவம்சம் (திரைப்பட விமர்சனம்)

19

படம்: ராஜவம்சம்

நடிப்பு:  சசிகுமார்,  நிக்கி கல்ராணி, ராதாரவி, தம்பி ரமையா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, சிங்கம் புலி, யோகி பாபு, ஆடம்ஸ், சரவணா சக்தி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ்கபூர், தாஸ், நமோ நாரயணன், சுந்தர், சாம்ஸ், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி ஷர்மா, மணிமேகலைம, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா,

இசை: சாம் சி.எஸ்.

ஒளிப்பதிவு: சித்தார்த்

தயாரிப்பு: டிடிராஜா, டி.ஆர்.சஞ்சய் குமார்

இயக்கம்:: கே.வி.கதிர்வேலு

 

40க்கும் அதிகமான உறவுகளை கொண்ட கூட்டு குடும்பத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவ்வளவு பேர் இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் பாசம் காட்டி அன்பாக பழகி ஊருக்கே எடுத்துக்காட்டாக வாழ்கின்றனர். சசிகுமார் வெளியூரில் ஐடி கம்பெனியில் பணியாற்றுகிறார். அவரிடம் 5000 கோடி மதிப்பிலான திட்டம் ஒன்றிற்கான பணியை நிறுவன அதிகாரி ஜெயபிரகாஷ் ஒப்படைக்கிறார். அந்த திட்டத்தை திருட வேறு சில கார்ப்பரேட் முதலாளிகள் முயற்சிக்கின்றனர். இந்நிலையில் தன் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்துகொள்ள சசிகுமார் சம்மதிக்கிறார். ஆனால் பெண் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் குடும்பத்தினரின் திருப்திக்காக தனது நிறுவனத்தில் பணியாற்றும் நிக்கி கல்ராணியை காதலியாக நடிக்க அழைத்துச் செல்கிறார். அவர் மீது சசிகுமார் குடும்பத்தினர் பாசத்தை பொழிகின்றனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் திருமணமும் செய்து வைக்கின்றனர். அப்போது நிக்கி கல்ராணி கடத்தப்படுகிறார். அவரை சசிகுமார் எப்படி காப்பாற்றுகிறார், முதலாளி தன்னிடம் ஒப்படைத்த 5000 கோடிக்கான திட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதே கிளைமாக்ஸ்.

கூட்டு குடும்பம், ஐடி கம்பெனி என இருவித களத்தை ஒருங்கிணைத்து கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் கதிர்வேலு. சுந்தர்சி.யிடம் இருந்த இவர் அவர் பாணியிலேயே கதையை நகைச்சுவை பொங்க படமாக்கி இருக்கிறார்.

சசிகுமாருக்கு ஐடி ஊழியர் என்ற கதாபாத்திரமென்றாலும் முழுக்க கூட்டு குடும்பக்காராக மாறி எந்நேரமும் குடும்பத்தினரை பற்றியே சிந்திப்பவராக நடித்திருக்கிறார். 40க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் நடித்திருப்பதால் யார் யாருக்கு என்ன உறவு என்பதை ஞாபகம் வைத்துக்கொள்வதே பெரிய விஷயம். சுமித்ரா, விஜயகுமார் குடும்ப பெரிய தலைகளாக வந்து கூட்டு குடும்பத்தை தாங்கிப் பிடிக்கின்றனர்.

சசிகுமாருக்கு திருமணம் ஆனபிறகுதான் தான் திருமணம் செய்துக்கொள்ளவிருப்பதாகவும் அதுவரை தனது கூந்தலை வெட்ட மாட்டேன் என்றும் சபதம் செய்து காமெடி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார் தம்பி ராமையா.

யோகிபாபு மாட்டு தொழுவத்தை பராமரிப்பவராக  வந்துபோகும் காட்சிகளிலெல்லாம் சிரிப்பூட்டுகிறார். தனது காதல் நிறைவேறாததால் விஷம் குடிக்கும் யோகிபாபு குடும்பத்தினரிடம் தான் விஷம் குடித்துவிட்டதாக சொல்ல அதை யாரும் நம்பாமல் சும்மா போப்பா என்று சிரித்துவிட்டு செல்வது அரங்கை கலகலப்பில் ஆழ்த்துகிறது.

நிக்கி கல்ராணி சஸ்பென்ஸ் பாத்திரமாக வந்தாலும் குடும்பக் கதைக்கு ஒத்துப்போகும் குடும்ப பாங்கான அம்சத்துடன் நடித்து மனதில் இடம் பிடிக்கிறார். ராதாரவி முதல் காட்சியில் மிரட்டல்விட்டு பிறகு அவ்வப்போது வந்து சசிகுமார் குடும்பத்துடன் சம்பந்தம் பேசி வாங்கிகட்டிக்கொள்கிறார்.

சாம் சி.எஸ் இசை யாரையும் அசரவிடாமல் பார்த்துக்கொள்கிறது. சித்தார்த் ஒளிப்பதிவு  நடசத்திர பட்டாளத்தை விட்டுவிடாமல்  படம் பிடித்திருக்கிறது.

ராஜவம்சம் – கூட்டு குடும்பத்தின் வலிமை.

Leave A Reply

Your email address will not be published.