ராக்கி (திரைப்பட விமர்சனம்)

2

படம்: ராக்கி
நடிப்பு: வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீணா ரவி, ரோகிணி, அனிஷா, ரவி வெங்கட்ராமன், பூ ராமு, ரிஷிகாந்த், ஜெயகுனார், கானா தண்டபானி, ஆகாஷ்,
இசை: தர்புகா சிவா
ஒளிப்பதிவு: ஷிரேயாஸ் கிருஷ்ணன்
தயாரிப்பு: சி ஆர்.மனோஜ்குமார்
இயக்கம்: அருண் மாதேஸ்வரன்

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மல்லியின் (ரோகிணி) மகன் ராக்கி(வசந்த் ரவி) சேராத கூட்டத்துடன் சேர்ந்து கொலை செய்யும் சூழலுக்குள்ளாகிறான். சிறையில் தண்டனை முடிந்து வெளியில் வரும் ராக்கி தனது தங்கையை தேடிச் செல்கிறான். கஷ்டப்பட்டு தங்கையை கண்டுபிடித்து அவரது வீட்டுக்கு செல்லும்போது பழைய பகையாளிகள் ராக்கியையும் தங்கையும் கொல்ல முயல்கின்றனர். இதில் தங்கை சாகிறார். தங்கையை கொன்றவர்களை பழிவாங்க புறப்படும் ராக்கி எதிரிகளை கொன்று குவிக்கிறான். ஒரு கட்டத்தில் தன்னை ஆரம்பகாலத்தில் வைத்து வேலை தந்த மணிமாறனிடம் மோதுவதுடன் அவரை கொல்ல கழுத்தில் கத்தி வைக்கிறான். ராக்கியை அவனது தங்கை குழந்தையை காட்டி மணிமாறன் தப்பிக்கிறார். குழந்தையை கூட்டிக்கொண்டு இலங்கைக்கே செல்ல முடிவு செய்யும் ராக்கி ஒரு காரில் குழந்தையையும் அழைத்துக்கொண்டு தனுஷ்கோடி நோக்கி செல்கிறான். ஆனால் வழியிலேயே ராக்கியை கொல்ல ஆள் அனுப்புகிறார் மணிமாறன். அவர்களை எப்படி எதிர்கொள்கிறான். இறுதியில் ராக்கி நினைத்தது நிறைவேறுகிறதா என்பதற்கு அனல்பறக்க விடை சொல்கிறது கிளைமாக்ஸ்.
ராக்கி என்ற பாத்திரத்தில் வசந்த் ரவி நடித்திருக்கிறார். மனம் மாறி அமைதியாக வாழ எண்ணும் வசந்த் ரவி தனது தங்கையை தேடி கண்டுபிடித்து ஆறுதல் அடைகிறார். அடுத்த சில நிமிடங்களில் ரவுடிகூட்டம் வீட்டுக்குள் புகுந்து வசந்த் ரவியின் தங்கையை கொன்றுவிட்டு வசந்த்தையும் தாக்குவது வன்முறைக்கு மீண்டும் தொடக்கப் புள்ளி வைக்கிறது.
தங்கையை கொன்றவர்களை தேடிச் சென்று ரவசந்த் ரவி பழி தீர்ப்பதும் தொடர்ந்து பாரதி ராஜாவின் அடியாட்களுடன் மோதி அவர்களை கொன்று குவிப்பதும் என முரட்டுத்தனமாக நடிப்பை வெளியிட்டி ருக்கிறார்.
மணிமாறன் என்ற ரவுடி கூட்ட தலைவனாக வரும் பாரதிராஜா மாறுபட்ட வில்லனாக வேடமேற்றிருக்கிறார். எப்படி இந்த வேடத்தை பாரதிராஜா ஏற்றார் என்ற கேள்வி எழும்போதெல்லாம் இலங்கை தமிழருக்கு உதவும் வசனம் பேசும்போது இதற்காகத்தான் இந்த வேடத்தை ஏற்றிருப்பார் என்று எண்ண வைக்கிறார்.
படத்தில் சில காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. தனுஷ்கோடிக்கு காரில் பயணமாகும் வசந்த் ரவி, தங்கை குழந்தை தன்னிடம் பேசக்கூட மறுப்பதை கண்டு மனம் குமுறுவது உருக்கம்.
கிளைமாஸில் பாரதிராஜாவின் ரவுடி கூட்டத்துக்கும் வசந்த் ரவிக்கும் நடக்கும் மோதலில் தோட்டாக்கள் பறக்கின்றன.

தர்புகா சிவாவின் இசையும், ஷிரேயாஸ் கிருஷ்ணனின் கேமராவும் இயக்குனரின் எண்ணத்துக்கு உருவம் கொடுத்திருக்கிறது
அருண் மாதேஸ்வரன் படத்தை வன்முறை கண்ணோட்டத்துடன் பார்த்திருப்பதாலோ என்னவோ கொலைகள் சர்வ சாதாராணமாக விழுகிறது. நடந்த சம்பவங்களை எங்கோ கேட்டு அதை கதையாக வடித்ததுபோல் ஒரு உணர்வை ஏற்பட வைக்கிறார் இயக்குனர்.

ராக்கி – உறவுகளை பலிகொடுத்தவனின் கோபம்.

by

க.ஜெயச்சந்திரன்

Leave A Reply

Your email address will not be published.