ஆர் ஆர் ஆர் – விமர்சனம்!

4

டிப்பு: Jr.NTR, ராம்சரண், அலியாபட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா மற்றும் பலர்.

இசை: M.M.கீரவாணி

ஒளிப்பதிவு: K.K. செந்தில் குமார்

எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு: DVV என்டர்டைன்மென்ட்ஸ்

இயக்கம்: S.S.ராஜமௌலி.

வெளியீடு : லைக்கா

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்கையை தழுவி உருவாகியுள்ள திரைப்படம் தான் ஆர்.ஆர்.ஆர்.(RRR). அதாவது ஆட்சி நம் நாட்டை செய்யும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேல்குடி பெண் ஒருவருக்கு பழங்குடி இன பெண்ணின் மகளாக வரும் மல்லி, பாட்டுப்பாடிக்கொண்டே கையில் வண்ணம் தீட்டிவிட, அடடே இந்த அழகு மல்லி இனி இங்கிலாந்து அடிமை எனக் கூறி கையோடு அரண்மனைக்கு அழைத்துச் சென்று விடுகிறார் ராணி. அந்த சிறுமி மல்லியை மீட்க குழுவின் காப்பானாக பீம் ( ஜூனியர் என்.டி.ஆர்) திட்டம் தீட்டி ஆங்கிலேயர்களை நெருங்க, இந்த விஷயம் அவர்களின் காதுகளுக்கு செல்கிறது. இதனையடுத்து பீமை பிடிப்பதற்கான பொறுப்பு, பிரிட்டிஷ் போலீஸ் படையில் ஸ்பெஷல் போலீஸ்ஆபீசராக மாறத்துடிக்கும் ராமராஜூடம் கொடுக்கப்படுகிறது . ஆனால் அந்த ராமராஜூக்கும் பீமுக்கும் இடையே திடீர் நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பு என்னானது?, இருவரும் அவரவர் எடுத்துக்கொண்ட பாதையில் வெற்றி அடைந்தார்களா? மல்லி மீட்கப்பட்டாளா? போன்ற கேள்விகளுக்கான விடைதான் மீதிக்கதை..

படத்தில் ராம் சரணும் ஜூனியர் என்டிஆரும் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பழங்குடியினர் கதாபாத்திரத்திற்கு ஜூனியர் என்டிஆர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சாதுவான ராம்சரணை ‘பையா பையா’ என அழைப்பதாகட்டும், மல்லிகாவிடம் பாசத்தில் உருகுவதாகட்டும், நேர்மையின் நெஞ்சுறுதியை காட்சிக்கு காட்சி பார்வையாளர் களுக்கு கடத்துவதாகட்டும் என அனைத்திலும் முழு மதிப்பெண் ணுடன் அப்ளாஸ் வாங்குகிறார். குறிப்பாக தண்டனை பெறும் காட்சியில் மனதை உலுக்க வைக்கிறார். அதுபோல் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருக்கிறார் ராம் சரண். காதல், தந்தைக்கு கொடுத்த சத்தியம், லட்சியம் என்று நடிப்பில் பளிச்சிடுகிறார்.. இரண்டு சூப்பர் ஹீரோக்களில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்ற கேள்விக்கே இடம் கொடுக்காதவாறு ராம்சரண் நெருப்பு என்றும் ஜூனியர் என்டிஆர் நீர் என்றும் புரிய வைத்து இருவரின் கேரக்டரையும் ரேஸில் மாறி மாறி முன்னுக்கு வந்து, இறுதியில் ஒன்று சேர்ந்து இறுதிக் கோட்டை தொடும் போக்கு அபாரம். இண்டர்வெல்லு பிறகு வரும் அஜய் தேவ்கன் போராளியாக மனதில் நிற்கிறார். ஸ்ரேயாவிற்கு பெரியதாக வேலை இல்லை. ஆலியா பட், ராம் சரண் காதலியாக வந்து கவர்ந்து இருக்கிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் சமுத்திரக்கனி.

சுதந்திரத்திற்கு முன்பான பீரியட் படம் என்பதால் முழுக்க முழுக்க செட்டுக்குலேயே முக்கால்வாசி படபிடிப்புமே, ஆனால் எந்த காட்சியிலுமே செட் என பெரிதளவு நமக்கு தோன்றவில்லை மாறாக பிரம்மாண்டம் மட்டுமே தெரிகிறது. அந்தளவிற்கு கலை இயக்குனர் சாபுசிரிலின் வேலை பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், நடனம் என அனைவருமே தங்களது அதிகபட்ச உழைப்பையே கொடுத்துள்ளனர். VFX குழுவும் கிராபிக்ஸ் பணிகளை சிறப்பாக செய்து படத்தை மெருகேற்றி இருக்கிறார்கள். MM கீரவாணியின் இசையில் பாடல்கள் ஹிட்டடித்த நிலையில், பின்னணி இசையிலும் குறையில்லை.

பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்திற்கு பிறகு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி. அதே அளவு பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். சிறிய கதையை வைத்து அதில் சுதந்திர போராட்ட திரைக்கதை அமைத்து கொடுத்து இருக்கிறார். பல காட்சிகளை பிரமாண்டமாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். சில பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை. படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம் என்று சில நொடிகள் மட்டும் ஃபீல் பண்ண வைத்தாலும் நம் அருகே அமர்ந்து படம் பார்த்த சகா ஒருவர், “நம்ப முடிந்த கதையை, நம்ப முடியாத திரைக் கதையில் கொடுப்பதும்…நம்ப முடியாத கதையை, நம்ப முடிந்த திரைக்கதையில் கொடுப்பதும்தான்.. ஒரு படைப்பாளியின் திறமை. அது ராஜமெளலியிடம் நிறையவே இருக்கிறது..! இப்போதும் ஜெயிச்சிட்டார்..!’ என்று சொன்னதுதான் நிஜம்

ஆர் ஆர் ஆர்- ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் சொல்ல வைத்த படைப்பு

Leave A Reply

Your email address will not be published.