வியாபாரி முருகேசன் மீது தாக்குதல் – சரத்குமார் அறிக்கை..

3

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டம் இடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மற்றும் வியாபாரியான முருகேசன் ஊரடங்கு விதிகளை மீறி நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, இடையப்பட்டி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் சிக்கியதில், ஏத்தாப்பூர் காவல் துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி, முருகேசனை லத்தியால் ஆவாசமாக தாக்கியது அதிர்ச்சியளிக்கிறது. மனிதாபிமானமற்ற கொடூரத்தின் உச்சமான இச்செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவிவரும் இச்சம்பவத்தின் காணொலி காண்போர் நெஞ்சை பதறச் செய்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தவறு, அதிலும் ஊரடங்கு சமயத்தில் பிற மாவட்டத்திற்கு நண்பர்களுடன் சென்று மது அருந்திவிட்டு வருவதும் தவறு தான். ஆனால், எந்தெந்த குற்றங்களுக்கு எத்தகைய தண்டனைகள், விசாரணைகள் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றியெல்லாம் சட்டத்தில் தெளிவாக, விரிவாக விளக்கப்பட்டிருக்கும் போது, காவலர்களே சட்டத்தை மீறிய செயல் செய்தால் சமூகத்தின் நிலை என்ன? தமிழகத்தில் சில காவலர்கள் சட்டத்தை கையிலேந்தும் செயலால் ஒட்டுமொத்த காவல்துறையினரும் அவப்பெயருக்குள்ளாகும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

காவலர்கள் தாக்குதலால் உயிரிழந்த ஜெயராஜ் – பென்னிக்ஸின் முதலாண்டு நினைவுநாளில் பொதுவெளியில் மீண்டும் அதே போன்று ஓர் தாக்குதல். ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கு தற்போதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. காலங்கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி மட்டுமன்றி அது அநீதிக்கு சமமாகும். காவலர் பெரியசாமி கைது செய்யப்பட்டாலும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும், இனி இதுபோன்ற சம்பவங்களால் இன்னொரு உயிர் பறிபோகாமல் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்படும் சட்டங்களே இப்பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.

வியாபாரி முருகேசனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ரா.சரத்குமார்  கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.