சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 102

40

அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக நடித்தால் தந்தை பெரியாரால் வி.சி.கணேசனாக இருந்தவர் சிவாஜி கணேசனாக்கப்பட்டார்.

வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்து ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் கண்ணீர் விட்டு கதறினார். ‘என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நினைவுப்படுத்துவது போல் நடித்தீர்கள்’ என்று சிவாஜியைப் பாராட்டினார்.

சிவாஜி படங்களை ரீமேக் செய்யும்போது ‘சிவாஜி நடிக்கின்ற கதாபாத்திரங்களில் எங்களால் நடிக்க முடியாது’ என்று இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் அனைத்து மொழிப் பட உலகைச் சேர்ந்த மாபெரும் கலைஞர்கள் அறிவித்தார்கள். இன்றைய கலைஞர்களுக்கு நடிப்பின் பெட்டகமாக இன்றுவரை திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். மார்லன் பிராண்டோ போன்ற ஹாலிவுட் நடிகர்கள் இவரது படங்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள்.

‘எங்களால் நம்பவே முடியவில்லை இப்படியெல்லாம் ஒருவரால் நடிக்க முடியுமா? அபாரம், அற்புதம் இதுபோன்று வேறு எவராலும் நடிக்க முடியாது. எங்களைப் போல் உங்களால் நடிக்க முடியும், உங்களைப் போல் எங்களால் நடிக்க முடியாது,’ என்று ஆச்சரியப்பட்டு நடிகர் திலகத்தை மனம் திறந்து பாராட்டினார்கள். அவருடன் இணைந்து படமெடுத்துக் கொண்டு மகிழ்ந்தார்கள்.

சிவாஜியைப் பாராட்டிய மேலும் சில பிரபலங்கள்…

தன்னுடைய கைவிரல் அசைப்பின் மூலமே நம்மையெல்லாம் கவர்ந்துவிட்ட சிவாஜிகணேசன் ஓர் உலகப் பெரு நடிகர். – முதறிஞர் ராஜாஜி.

உலகிலேயே சிறந்த நடிகரான சிவாஜிகணேசன் தமிழ்நாட்டில் இருப்பது நாம் பெற்ற பாக்கியமாகும். – தந்தை பெரியார்.

நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவரே நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். நம் பாரத நாட்டிற்கு அவர் தம் நடிப்பின் மூலம் மகத்தான பெயரைத் தேடித் தந்திருக்கிறார். அவரைப் பெற்றதால் இந்த நாடே பெருமையடைகிறது. பாரதத் தாய் பூரிப்படைகிறாள். – பெருந்தலைவர் காமராஜர்.

எனது திரைக்கதை, உரையாடல்களுக்கு உயிரோட்டம் தந்தவர் என்றும் தமிழாக, தமிழ் உரை நடையாக வாழக்கூடியவர் எனது நண்பர் சிவாஜி கணேசன். – கலைஞர் மு. கருணாநிதி.

தமிழகம் பெருமைப்படும் வகையில், தனது திறமையின் மூலம் புகழ்பெற்று வாழ்பவர் அறிஞர் அண்ணா போற்றிய என் அன்புத் தம்பியான கணேசன். – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

சிவாஜியின் நடிப்பாற்றலை ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் இணைந்து நடிக்கும்போது பார்த்தேன், தலைச்சிறந்த கலைஞரோடு நான் நடித்தது எனது பாக்கியம். – என்.டி. ராமாராவ் .

புதிய தலைமுறை நடிகர் நடிகையர் நடிப்பைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் சிவாஜி அவர்கள் நடித்த படங்களைப் பார்த்தாலே போதும். ஒரு பல்கலைக் கழகத்தில் பயின்றது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.  செல்வி. ஜெ.ஜெயலலிதா.

எங்கள் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் நடிகர் திலகமும், நடிகர் அசோகனும் இணைந்து நடித்தார்கள். ஒரு காட்சியில் நடிப்பதற்கு அசோகன் பல டேக்குகள் வாங்கினார். அங்கிருந்த சிவாஜி அவரை இப்படி நடிக்கச் சொல்லுங்கள் என்று எங்களுக்கு நடித்துக் காட்டினார். அதில் பத்து பர்சன்ட்தான் அசோகனால் நடிக்க முடிந்தது. அந்த 10% நடிப்பிற்கே அவ்வளவு பாராட்டுக்கள் வந்து குவிந்தது. 10 பர்சன்டுக்கே இவ்வளவு பாராட்டுக்கள்… அவர் சொல்லிக் கொடுத்தபடி 100 சதவீதம் நடித்திருந்தால்…? நாங்கள் வியந்துபோனாம். – ஏவிஎம் சரவணன்.

இன்றைய தமிழ் திரைப்படங்களின் தலையெழுத்து முற்றிலுமாக மாறிவிட்டது. 10 வது நாளுக்கே பார் புகழும் பத்தாவது நாள் என்று விளம்பரங்கள்..

ஒரு திரைப்படம் இருபத்தைந்து  நாள் ஓடிவிட்டால் அது ஒரு மாபெரும் வெற்றிப்படம் போன்ற தோற்ற மயக்கம். ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் ஏன் மூன்று படங்கள்  கூட வெளியாகி மாபெரும் சாதனைகள் படைத்த வரலாறும் நடிகர் திலகத்தின் படங்களுக்கு உண்டு.  இன்றைக்கும் எந்த சமயத்தினில் பார்த்தாலும் மனதை சந்தோஷப்படுத்த கூடிய திரைப்படங்கள் நடிகர் திலகத்தின் பல படங்கள் உண்டு…  அவ்வகையினிலே நான் ரசித்த ‘ புதிய பறவை ‘ திரைப்படம் குறித்த எனது பழைய பதிவினை உங்களுடன் பகிர்கின்றேன்.

சமீபத்திய ஒரு சிறிய விடுமுறை நாளில் ‘ புதிய பறவை ‘ எனும் நடிகர் திலகத்தின் மகுடத்தினில் உள்ள ஒரு வைரத்தினை காண நேர்ந்தது… ஆஹா..என்ன ஒரு அழுத்தமான கதையம்சத்துடன், அவரின் நடிப்பினால் மெருகேற்றப்பட்ட ஒரு அற்புதமான திரைப்படம். பாடல்களோ…காதிலும்..உள்ளத்திலும் தேனை அள்ளி ஊற்றியது…கொள்ளை கொண்டது…மயங்கவைத்தது…

அனைவருமே அற்புதமாக தனது பங்களிப்பினை சிறப்பாக செய்திருந்தார்கள்…யாரை கூறுவது ..யாரை விடுவது…என்ன ஒரு அருமையான நடிப்புத்திறன் படைத்த வல்லுனர்கள் கூட்டணி.. நடிப்பு என்றால் சும்மா…எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனார் என்ற பாணி அல்ல…உணர்வோடு கலந்த நடிப்பு…பார்ப்போர் யாரும் நடிப்பு என்று சொல்ல முடியாது.

மிகப்பெரும் பணக்காரரான கோபால்..சிங்கப்பூரில் இருந்து கப்பலில் இந்தியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும்போது ..மற்றொரு சக பயணியான தன் மகள் லதாவுடன் பயணிக்கும் ராமதுரை என்பவரை சந்திக்கிறார். கோபாலுக்கும் லதாவுக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது..இந்தியாவில் ஊட்டியில் உள்ள தனது பங்களாவில் நீங்கள் தங்கலாமே என்று அழைப்பு விடுக்க..அவர்களும் சம்மதித்து வந்து தங்குகிறார்கள்..

ஒருமுறை லதாவும் கோபாலும் வெளியே செல்லும்போது.. ரயில்வே கேட் மூடப்பட்டதால் காரில் காத்திருக்கும்போது..புகைவண்டி செல்லுவதை பார்க்கும்போது..அதிர்ச்சி ஏற்பட்டு மயக்கம் வருவதனை பார்த்து காரணம் கேட்க, கோபால் தனது கடந்த கால வாழ்க்கையை பற்றி கூறுகிறார்.

சிங்கப்பூரில் இருந்தபோது அவரின் தாயாரின் மறைவுக்குப்பிறகு…மனமுடைந்து அமைதியற்ற மனதுடன் அலைந்து திரியும்போது..ஒரு இரவுவிடுதியில் சித்ரா என்னும் பாடகியை சந்திக்கிறார்..அவளின் சந்திப்பு காதலாக மாற சித்ராவின் சகோதரனின் சம்மதத்தோடு திருமணம் நடைபெறுகிறது. ஆனால் இதில் கோபாலின் தந்தைக்கு விருப்பமில்லை. விரைவிலேயே…சித்ராவின் நடத்தையில் கோபாலுக்கு கோபமும் ஏமாற்றமும் வெறுப்பும் ஏற்படுகிறது…வீட்டுக்கு வரும்போது குடி போதையுடன் வருவதும்…அவளின் அலட்சியமான பொறுப்பற்ற பேச்சும் செயலும் மனம் வேதனைக்குள்ளாக்குகிறது. உச்சக்கட்டமாக அவனின் பிறந்த நாள் விழாவில் அவள் குடிபோதையில் செய்யும் அட்டகாசம் கண்டு..அதிர்ச்சியில் அவன் தந்தை மாரடைப்பில் உயிர் விட..சித்ரா..கோபாலை விட்டு விலகி..வீட்டை விட்டு வெளியேறி செல்ல முயல..அவளை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தோல்வியுற..மீறி சித்ரா..போதையுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.மறுநாள் காலை அவள் ரயில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக செய்தி கிடைக்கிறது. இந்த நிகழ்வில் அதிர்சியடைந்துதான் இந்தியா திரும்பியதாக கூறிய கோபாலின் மீது பரிவு கொண்டு லதா அவன் மேல் காதல் கொள்கிறாள்..

இவர்களின் மனமறிந்து அவளின் தந்தையும் சம்மதிக்க திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிற சமயத்தில் .. அந்த நிகழ்வில் திடீரென…சித்ரா..தனது மாமாவுடன் அங்கே..ஆஜராக..கோபாலுக்கு அதிர்ச்சி.. இவள் சித்ராவே அல்ல என்று அடித்து கூறும் கோபாலின் பேச்சு எடுபடாதவண்ணம், அனைத்து ஆதாரங்களும் இவளே சித்ரா..என்பது போல இருக்க..நிச்சயதார்த்தம் நின்று போகிறது…மனமுடைந்த கோபால்..இந்த சூழலில் எங்கே..லதாவும் தன்னை விட்டு போய் விடுவாளோ..என்ற பயத்தில்..அவள் மீதுள்ள அன்பினால் நடந்த சம்பவத்தினை அனைவரின் முன்பும் கூறும்போது…பழைய சம்பவத்தில் சித்ரா வீட்டை விட்டு செல்ல முயலுகையில் ஏற்பட்ட ஒரு ஆத்திர.. மூட்டும் விவாதத்தில், தான் சித்ராவை அறைந்து விட..ஏற்கனவே பலவீனமான இதய நோய் கொண்ட சித்ரா.. சுருண்டு விழுந்த அவள் எழவே இல்லை இறந்து விட்டாள்..ஆகா..தனது கோபம் அவளை பலிகொன்டதே..என்று..குடும்ப மானம் அந்தஸ்து கருதி..தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டி..அவளது உடலை கொண்டுபோய் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் வரும் முன்பு போட்டுவிட்டு வந்த உண்மையை கோபால் சொல்லிவிடுகிறான்…

இப்போது…அங்கே….சூழல் முற்றிலுமாக மாறுகிறது…தன் தற்போதய காதலி..மாமனார்..முன்னாள் மைத்துனன்…முன்னாள் மனைவி..என்று நின்று இருந்த அனைவரும்..அந்த கூட்டமே சிங்கப்பூரின் ரகசிய காவல் துறையினர் என்பது தெரிய வருகிறது…அவர்கள் கோபாலை கைது செய்கின்றனர்…அதன் பிறகு நடைபெறுவதே..ரசமானது…உண்மையை அறிய காதலியாக நடிக்க வந்த லதா, தான் நடிக்கவே வந்தேன்.. காதலிப்பது போல நடித்தேன்…ஆனால் உங்களிடம் உண்மையிலேயே…காதல் கொண்டு விட்டேன்…என்னை மன்னித்து விடுங்கள்…நீங்கள் திரும்பி வரும்வரை உங்களுக்காகவே காத்திருப்பேன்…என்பதுடன் படம் முடிகிறது.

நடிகர் திலகத்தின் நடிப்பு படம் முழுவதும் முழுமையாக வியாபித்து இருப்பதோடு..ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு..படத்துடன் அவர்களை ஒன்றிடச் செய்கிறது படத்தின் கதை செல்லும் பாதையில் அவர்களையும் உணர்வுப்பூர்வமாக பயணிக்க வைக்கிறது.

உடன் நடித்துள்ள அத்துணை சக நடிகர்களும் தங்களது பங்களிப்பினை மிக நிறைவாக செய்துள்ளனர். சௌகார் ஜானகி, சரோஜாதேவி, M.R. ராதா, V.K. ராமசாமி, நாகேஷ், மனோரமா, O.A.K., தேவர், S.V. ராமதாஸ், இவர்களின் பொருத்தமான இசைந்து நடிக்கும் அழகினை காணும்போது..

 

ஆஹா..எத்தகைய திறமையாளர்களை நாம் இழந்துள்ளோம் என்றுதான் தோன்றுகிறது… சற்றேறக்குறைய கிட்டத்தட்ட ஐம்பத்திரண்டு வருடங்களுக்கு முந்தைய படமாயினும்…விறுவிறுப்புக்கும் சுவைக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை …M.R. ராதா கொடுக்கும் டார்ச்சரை பார்க்கும்போது..ஏன் நாயகன் கோபால் பொளேர் என்று அவரை ஒரு அறை கொடுக்க மாட்டாரா…என்று பார்வையாளர்களுக்கு மனதில் தோன்றவைக்கும் அளவுக்கு அவரின் நடிப்பு பரிமளிக்கிறது.

பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு பக்கத்துணை என்பதனை கூறவும் வேண்டுமோ..?

விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணியில் அற்புதமான இசையமைப்பு, காலத்தால் அழியாத சாகாவரம் பெற்ற பாடல்கள்…அனைத்துமே முத்துக்கள்.

பார்த்த ஞாபகம் இல்லையோ…(மெய்சிலிர்க்கவைக்கும் இசையமைப்பு)

உன்னை ஒன்று கேட்பேன்…உண்மை சொல்ல வேண்டும்…

ஆஹா..மெல்ல நட..மெல்ல நட…மேனி என்னாகும்…

எங்கே நிம்மதி…எங்கே நிம்மதி,

சிட்டுக்குருவி…முத்தம் கொடுத்து…சேர்ந்திடக் கண்டேனே …

அனைத்துப்பாடல்களும் கவியரசர் கண்ணதாசனின் கைவண்ணம்…மனிதர் புகுந்து விளையாடி உள்ளார். கவியரசர் வாழ்ந்த காலக்கட்டத்தில் பலவிதமான சோதனைகள்..கஷ்டங்களை எதிர்நோக்கிதான் வாழ்ந்து வந்தார்…

இன்பமும் துன்பமும் மாறி மாறிதான் வந்தது, ஒரு வகையில் அவரின் சொந்த உணர்வுகள் பல பாடல்களில் பிரதி பலிக்கும்.. கீழே உள்ள பாடலும் அவருக்குரியதுதானோ…என்பது போல இருக்கும்…(படத்திலே கதாநாயகனுக்கும்

அந்த சூழலுக்கும் மிகப் பொருந்தி இருக்கும் என்பதனையும் மீறி..)

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்.

எங்கே மனிதர் யாரும் இல்லையோ

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

(எங்கே நிம்மதி)

எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது

எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது.

என்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என்பவனே

கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே

ஓ! இறைவன் கொடியவனே

(எங்கே நிம்மதி)

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே

புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

என்னை கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே

இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே

ஒ! உறங்குவேன் தாயே….

படத்தின் இறுதிக்கட்ட காட்சியில்… நடிகர் திலகத்தின் நடிப்பு…ஆகா…வர்ணிக்க வார்த்தைகளே இல்லை…அவ்வளவு…அருமையான ஒரு காட்சி….

சித்ராவ…நாந்தான் கொலை செஞ்சேன்…இந்த கைதான் அவள அடிச்சுது…இந்தக் கண்தான்…அவளோட பிரேதத்தை பார்த்தது..அதிர்ச்சியா இருக்கா…ஆச்சரியமா இருக்கா…திகைப்பை குடுக்குதா..? இல்லை திடுக்கிட வைக்குதா..?

லதா..ரயில்வே கேட்டுலே..ஒன்கிட்டே நான் நான் சொன்ன என்னோட கடந்த கால கதையை நான் அரைகுரையாதான் உன்கிட்டே முடிச்சேன்…ஏன் தெரியுமா..? என் குடும்ப விளக்கை ஏத்தி வைக்க போற ஒருத்திக்கு நான் கொலைகாரன்னு தெரியக்கூடாது.. ங்கரத்துக்காக.. இதோ அதோட தொடர்ச்சி…எல்லாரும்..கேளுங்க…சித்ராவ வழிமறிச்சு தடுத்து நான் கூப்புட அவ மறுத்து என்ன கேவலமா பேச …ஆத்திரம் தாங்காம நான் அவள அடிக்க…அவ கீழே விழுந்தான்னு சொன்னேன்.. இல்லியா…அது தப்பு..அவளுக்கும் எனக்கும் இருந்த தொடர்பு அறுந்து விட்டது என்று நான் அவளை விட்டுவிட்டு காரில் சென்றுகொண்டிருந்தபோது…சித்ராவுக்கு இருதய பலவீனம் உண்டு..அவளுக்கு சிறு அதிர்ச்சி ஏற்பட்டாலும் அவளின் உயிருக்கே ஆபத்து என்று எனது குடும்ப டாக்டர்…பிறந்த நாள் விழாவிலே…கூறினாரே… அது என் நினைவுக்கு வந்தது…உடனே காரை திருப்பினேன்…என்னதான் இருந்தாலும் அவள் என் மனைவி அல்லவா…?

எப்படியாவது அவளை சமாதானப்படுத்தி வீட்டுக்கு திரும்ப அழைத்து போய்விடலாம் என்ற ஆசையில் அந்த இடத்துக்கு விரைந்தேன்…

அதுதான் என் இறுதி முயற்சி என்றும் தீர்மானித்துக்கொண்டேன்…ஆனால்..நான் அங்கு போனபோது..சித்ராவின் கார் அங்கேயே நின்றுகொண்டிருந்தது…ஏன் இவ்வளவு நாழிகை சித்ரா..இங்கே என்ன செய்கிறாள் என்று..நான் எண்ணி..கொண்டே..சென்று பார்த்தபோது…சித்ரா..அந்த இடத்திலேயே விழுந்து கிடந்தாள்…

அவள் கையை பிடித்தேன்..அது துவண்டு விழுந்து விட்டது..சந்தேகப்பட்ட நான் அவள் அருகில் உட்கார்ந்து மூச்சை பரிசோதனை செய்தேன்… ஐயோ…நான் நினைத்தது சரியாகி விட்டது…சித்ரா…சித்ரா..இறந்து விட்டாள்…சித்ரா..இறந்து விட்டாள்…இந்தக்கை..இந்தக்கைதானே அவளை அடித்தது…இந்தக்கைதானே அவளை அடித்தது…

ஐயோ…அவள் இவ்வளவு பலகீனமானவளாக இருப்பாள் என்று நான் நினைக்கவே இல்லை…கடவுளே..நான் என்ன செய்வேன் …இப்போது எங்கு செல்வேன்… ஒன்றுமே புரியாத நிலையில் அவளின் பிரேதத்தை என் தோளிலே சுமந்து புறப்பட்டேன்…எந்தக்காரில் மணமகளாக என் அருகில் அமர்ந்து மணக்கோலத்தில் ஊர்வலம் வந்தேனோ..? அதே காரில் அவளை பிணக் கோலத்தில் வைப்பேன் என்று நான் கனவு கூட காணவில்லை… அதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் இடையில் என் உள்ளம் பதறியது…உடல் நடுங்கியது…யாரும் பார்ப்பதற்கு முன்பாக அந்த இடத்தை விட்டே போய்விட வேண்டும் என்று தீர்மானித்தேன்…

சரி நடப்பது நடக்கட்டும் சித்ராவின் உடலை போலீசில் ஒப்படைத்து விடுவோம் என முடிவெடுத்து சென்றபோது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது…(மனசாட்சியின் குரல்.. கோபால் எங்கே போகிறாய்…போலீஸ் ஸ்டேஷனுக்கா…உனக்கும் சித்ராவுக்கும் உள்ள மனவருத்தம் எல்லோருக்குமே தெரியும்…அப்படி இருக்கும்போது…அவள் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டாள் என்று சொன்னால் போலீசார் நம்புவார்களா…? யார்தான் நம்புவார்கள்…வேண்டும்,என்றே நீ கொலைசெய்து விட்டதாகத்தானே அவர்கள் நம்புவார்கள்…)

இப்படி ஒரு புது எண்ணம் என் போக்கை மாற்றியது.. குடும்ப கெளரவம், கொலைகாரன் என்ற பழிச்சொல்…கோர்ட், தூக்குதண்டனை..இவையெல்லாம் நினைத்தபடி..சித்ராவின் பிரேதத்துடன்…காரில் ஒரு சிலையாக உட்கார்ந்திருந்தேன்…அப்போது தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்டது…அதே சமயம் என் மனதில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது…சித்ராவின் பிரேதத்தை தண்டவாளத்துக்கு இடையில் போட்டு..அவள் தற்கொலை செய்து கொண்டதாக உலகத்தை நம்ப வைத்து விட்டால்….நம்ப வைத்து விட்டால்…அவள் தற்கொலை செய்து கொண்டதாக உலகத்தை நம்ப வைத்து விட்டால்..

ரயில்நெருங்கிக்கொண்டிருந்தது…அதற்கு முன்னதாக பிரேதத்தை தண்டவாளத்துக்கு குறுக்கே வைத்துவிட்டு வந்துவிட்டேன் …ரயிலின் சக்கரங்கள் .. என் சித்ராவின் உடலை சிதைத்த கோரக்காட்சியை கண்ணால் பார்த்தேன்…ஹா…(அலறல்) ஆனா..ஒண்ணுமட்டும் சொல்றேன்… திட்டம் போட்டோ…இல்லை திடீர்னு உணர்ச்சிவசப்பட்டோ.. இல்லை கொலை செய்யணும்.. னுங்கர எண்ணத்… தோடையோ..நான் அவளை கொல்லலே… அவ பேசுனது..என்னால ஆத்திரம்…அவமானம் தாங்கமுடியாம தான் அடிச்சேன்…அதுவும் ஒரே..அடி..எனக்கு நல்லா தெரியும்…அந்த அடியினால அவ நிச்சயம் செத்திருக்கவே முடியாது…கீழே விழுந்த அதிர்ச்சியினால..அவ இருதயம் மேலும் பலஹீனப்பட்டு அதனால தான் செத்திருக்க முடியும்…இதுதான் நடந்தது…இப்போ நான் சொன்னது அத்தனையும் உண்மை…என் தாய் மேல ஆணையா…அத்தனையும் உண்மை…

ராஜூ.. டேய்..ராஜு…பைலட் ஆபீசர்…. நீ சொல்லுடா..இவ சித்ரா…இல்லேல்ல…

இல்லை…

ஹா..ஹா.. டேய் ரங்கா..ப்ளாக் மெயிலர் நீ சொல்லு…இவ சித்ரா இல்லேல்ல…

இல்லை…

லதா…என் கண்ணே…இப்போ நீ சொல்லு…இவ சித்ரா… இல்லேல்ல…

(லதா மெளனமாக தன் முகத்தினை இன்ஸ்பெக்டரை நோக்கி திருப்பிக்கொண்டு)

இன்ஸ்பெக்டர் கோபாலோட வாக்குமூலத்தை பதிவு செஞ்சிட்டீங்கல்லே….

அவர நீங்க கைது பண்ணுங்க…

இந்த இடத்தில் கோபால் மட்டுமல்ல அரங்கமே…அதிர்ச்சியடையும்..அழகான அற்புதமான ட்விஸ்ட்… படம் முழுவதுமே…நடிப்பினால் உயர்ந்து நிற்கும் கணேசன்…இங்கே உச்சக்கட்ட நடிப்புக்கு செல்லுகிறார்..

கலைக்குரிசில் படம் முழுவதும் நடிப்பினால் வியாபித்து காட்சிக்கும் கதைக்கும் உயிர் கொடுத்து…கலக்கி இருக்கிறார்.. இயக்குனர் தாதா மிராசியின் இயக்கத்தில் நிறைவான ஒரு திகிலூட்டும் அற்புதமான படம்.

அவரின் கலைப்பயணத்தில் இதுவும் என்றும் அவரின் பெயர் கூறும் படமே…புதிய பறவை..அன்றும் இன்றும் உயரவே…பறக்கிறது என்றும்…பறக்கும்..

Leave A Reply

Your email address will not be published.