சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 106

14

எழுத்து: (சிவாஜி) கணேசன்….. தொடர்ச்சி….
ஏ.வி.எம்., ஸ்டுடியோவின் மூன்றாவது படப்பிடிப்பு தளத்தில், படப்பிடிப்பின் இடைவெளியில் பத்திரிகை நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். ‘வணக்கம்…’ சொல்லி, என் வலது கையை, தன் வலது கையால் பற்றிக் கொண்டு, ‘வாழ்த்துக்கள்…’ என்று சொல்லியபடி குலுக்கினார். இந்த வாழ்த்து எதற்கென்று தெரியாமல் விழித்தேன். பதில் அவரிடமிருந்தே வந்தது… ‘1968ன் சிறந்த தமிழ்ப்படம், தில்லானா மோகனாம்பாள்…’ என்று இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனாதிபதியின் பரிசு கிடைத்திருப்பதைச் சொல்லி, ‘நீங்கள் அதில் கதாநாயகன் ஆயிற்றே…’ என்று, விளக்கம் தந்தார். ‘நன்றி’ என்றேன். அவருக்கு நான் அப்படி சொல்லிக் கொண்டிருந்தபோது, படப்பிடிப்பு தளத்திற்குள் வந்து கொண்டிருந்த ஒரு ஆஜானுபாகுவான உருவத்தையும், என் கண்கள் நன்றிப் பெருக்குடன் பார்த்தன.
அந்த ஆஜானுபாகுவான உருவம், இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தருக்கே சொந்தமான உருவம். அவரைப் பார்த்ததும், தெய்வமகன் படம் ஆஸ்கர் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதும், என் நினைவுக்கு வந்தது. தெய்வமகன் ஆஸ்கர் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் செய்தியை, என்னிடம் முதலில் கூறியவரும், இயக்குனர் திருலோகசந்தர்தான். தில்லானா மோகனாம்பாள் படம் இந்திய அரசின் பரிசுக்கு, தெய்வமகன் படம் அமெரிக்க ஆஸ்கர் விருது போட்டிக்கு!
இந்த பெருமை எல்லாம் யாருக்கு? தமிழ்க் கலைஞர்கள் அனைவருக்கும் சொந்தமானது. அப்படித்தான் நான் நினைக்கிறேன். தில்லானா மோகனாம்பாளை எடுத்துக் கொள்ளுங்கள். இதில், சிக்கல் சண்முக சுந்தரத்தையும், தில்லானா புகழ் மோகனாம்பாளையும் படைத்த கொத்தமங்கலம் சுப்புவையும் மறக்க முடியுமா? அவர், இந்தப் பாத்திரங்களை படைத்திரா விட்டால் படம் எங்கே?
தில்லானா மோகனாம்பாள் தொடர் கதையாக வந்து முடிந்ததும், அதைப் படமாக்க விரும்பிய இயக்குனர் ஏ.பி.நாகராஜன், சுப்புவிடம் தன் எண்ணத்தை வெளியிட்டார். சுப்பு, அந்த கதையின் உரிமை, ஜெமினி வாசனிடம் இருப்பதாகச் சொல்லி விட்டார். ஜெமினியின் சார்பில், அதை, வாசன் படமாக்கலாம் என நினைத்து, ஏ.பி.என்., மேலே தொடாமல் அப்படியே விட்டு விட்டார். மாதங்கள் பல கடந்தன. ஜெமினி நிறுவனத்தில், ‘தில்லானா’வைப் படம் எடுப்பதற்கான அடையாளங்களே தென் படவில்லை. ஏ.பி.என்., மனதில் மீண்டும், மோகனாம்பாளின் மீதுள்ள ஆசை துளிர்விட்டது. வாசனிடம் சென்று, ‘நான் மோகனாம்பாளைப் படமாக்க நினைக்கிறேன்…’ என்றார். ‘நானும் அதைப் படமாக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறேன்; வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். நாம் இருவரும் இணைந்து, அதை எடுக்கலாம்…’ என்று பதில் கூறினார் வாசன்.
வாசன் ஒரு இமயமலை; ஜெமினி நிறுவனம் பெருங்கடல்; நாமோ சிறு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்…’ என்ற எண்ணத்தில், ஏ.பி.என்., இரண்டாவது முறையாக எழுந்த மோகனாம்பாள் ஆசையை, சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். மாதங்கள் பல சென்றன. மோகனாம்பாள் படத்தைப் பற்றிய பேச்சே இல்லை.
தொடரும்…..
?️???️?️????️?️

Leave A Reply

Your email address will not be published.