சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 111

8

வேட்டைக்குச் சென்ற வரலாறு

சிவாஜி கணேசனால், `தம்பி கிட்டு` என பாசத்துடன் அழைக்கப்பட்ட தாத்தூர் கிட்டு கவுண்டர், சிவாஜி குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

“கோவை வேட்டைக்காரன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துமாணிக்க கவுண்டரும், சிவாஜியும் நெருங்கிய நண்பர்களான வரலாறு சுவாரஸ்யமானது.

திரையில் பிஸியாக இருந்த நேரத்திலும், வேட்டையாடுவதில் சிவாஜிக்கு மிகுந்த விருப்பம் இருந்துள்ளது. திருச்சி, பெரம்பலூரில் காட்டுப் புறா, முயல், காடை, கௌதாரிகளை வேட்டையாடிக் கொண்டிருந்த சிவாஜிக்கு, தட்சிணாமூர்த்தி என்ற காவல் துறை அதிகாரியின் நட்பு கிடைத்தது. ஆனைமலையில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்த அவர், வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த முத்துமாணிக்க கவுண்டர் பெரும் வேட்டைக்காரர் என்று கூறி, அவரது வேட்டையாடும் திறமைகளை விளக்கியுள்ளார். இதையடுத்து, ஆனைமலையில் தட்சிணாமூர்த்தி வீட்டில், முத்துமாணிக்க கவுண்டரை சந்தித்துள்ளார் சிவாஜி. இதற்குப் பிறகு, கொங்கு மண்ணுடன் சிவாஜிக்கான தொடர்பு ஆழமாக வேரூன்றத் தொடங்கியது. மாமன், மச்சான், மாப்பிள்ளை என அழைக்கும் அளவுக்கு, சேத்துமடைக்கும், சூரக்கோட்டைக்கும் உறவு வளர்ந்தது. முத்துமாணிக்க கவுண்டரின் உறவினர்கள், சிவாஜிக்கும் உறவினர்களானார்கள்.

சிவாஜிக்கு வேட்டைக் கலையை கற்றுத் தந்தார் முத்துமாணிக்க கவுண்டர். டபுள்பேரல் துப்பாக்கியை மட்டுமை பயன்படுத்தி வந்த சிவாஜிக்கு, முத்துமாணிக்கம் வைத்திருந்த சக்திமிக்க ரைபிள் வகைகளான 316, 423, 500 எக்ஸ்பிரஸ் ஆகியவை வியப்பளித்தன.

முதல் வேட்டை

ஒருநாள் சிவாஜி, முத்துமாணிக்கம், அவரது தம்பி ரத்தினம், உறவினர்கள் சின்னுசாமி, பொன்னுசாமி, ராஜாராம் ஆகியோர், அந்திசாயும் நேரத்தில் சேத்துமடை வனப் பகுதிக்குள் ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். தேக்கடி ஆறு, கல்யாணகுடை ஆறுகளைக் கடந்து, ஐயப்பன் பொதிகை வனப் பகுதியை தாண்டியபோது, பாதையின் குறுக்கே ஒன்றரை டன் எடையுள்ள காட்டெருமை அவ்வழியே சென்றது.

ஜீப்பை ஓட்டிக்கொண்டிருந்த முத்துமாணிக்கம், `சுடுங்க கணேசன்` என்ற கூறிவிட்டு, அவரும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இருவரின் துப்பாக்கிகளில் இருந்த தோட்டாக்களும் அந்தக் காட்டெருமையைத் துளைத்தன. முதல் வேட்டையில், முதல் குறி தப்பாமல், தோட்டா இலக்கை வீழ்த்திய சந்தோஷம் சிவாஜிக்கு. இது, வேட்டையின் மீது அவருக்கிருந்த ஆர்வத்தை அதிகரித்தது. சிவாஜிக்கும், முத்துமாணிக்கத்துக்கும் அன்று அரும்பிய நட்பு, இரு குடும்பத்துக்கும் இடையே உறவாய் மாறியது. `ஏனுங்க, என்னங்க, சொல்லுங்க` என சிவாஜியை கொங்குத் தமிழ் பேச வைக்கும் அளவுக்கு, கொங்கு மண்ணோடு நெருக்கமாக்கியது.

புலி வேட்டையாடிய சூரக்கோட்டை சிங்கம்

ஆந்திர மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள கூடம் வனப்பகுதி, வேட்டையில் தேர்ந்த கோன்ட் இன பழங்குடியின மக்கள் நிறைந்த பகுதி. அங்கு, அடர்ந்த காடுகளில் வரிப் புலிகளும், சிறுத்தைகளும் அதிகம். முத்துமாணிக்கம், சிவாஜி, லங்கப்பூர் அரசர்கள் ஜெயசிம்மராஜா, கஜசிம்மராஜா, கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் புலி வேட்டைக்குக் கிளம்பினார்கள். அப்போதெல்லாம் வேட்டையாட தடை கிடையாது.

அந்த வனப் பகுதியில் உயர்ந்த மரங்களின் மீது பரண் அமைத்து, ‘கலைப்பு வேட்டை’ எனப்படும் ஒலிகளை எழுப்பி, விலங்குகளை மறைவிடங்களிலிருந்து வெளியேற வைக்க முயன்றனர். அப்போது, புதரிலிருந்து வெளியேறிய வரிப் புலியை சுட்டு வீழ்த்திய சிவாஜியின் துப்பாக்கி, சில விநாடிகளில் மீண்டும் வெடித்து மற்றுமொரு புலியை வேட்டையாடியது. இரு புலிகளை வேட்டையாடிய சூரக்கோட்டை சிங்கத்தைக் கண்டு வியந்தனர் அத்தனை பேரும்.

Leave A Reply

Your email address will not be published.