சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 112

9

அண்ணன் எம் ஜி ஆருக்கும், எனக்கும் ரொம்ப நெருக்கமான உறவு ஏற்பட்டது. அப்போது நாங்கள் வால்டாக்ஸ் முனையில் இருந்த ஒரு பெரிய பில்டிங்கில் தங்கி இருந்தோம். அதிலிருந்து சிறிது தள்ளியிருந்த மூன்றாவது வீட்டில் தான் அண்ணன் இருந்தார். அப்போது அவர் பல கம்பெனிகளில் வேலை தேடுகிற நேரம். இருந்தாலும், டிபன் சாப்பிட எனக்காக காத்திருப்பார். நாங்கள் இருவரும் சாப்பிட்டதும் அவர் சென்று விடுவார்; நானும் வந்திடுவேன். பகல் சாப்பாடும் இப்படித்தான் நடக்கும். ஆனால், இரவில், நான் நாடகம் முடிந்து வரும் வரை காத்திருப்பார். இரவு, 10:00 மணிக்கு மேல் தான் நாடகம் முடியும். அதற்குபின், நாங்கள் நடந்து போய், சினிமா பார்ப்போம்.

சினிமாவில் அண்ணன் நடிக்க ஆரம்பித்து, ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்த நேரம் அது! அதனால், தலையில் முண்டாசும், வேட்டியை வரிந்து கட்டி, சினிமாவுக்கு வருவார். ஆனால், என்னை யாருக்கும் தெரியாது. சினிமா பார்த்து விட்டு, இரவு, 1:00 மணிக்கு திரும்பி வரும் போது, மின்ட் தெருவில் இருந்த சேட்டு கடையில் சப்பாத்தி மற்றும் பால் சாப்பிடுவோம். எல்லாம் அண்ணன் செலவு தான். அப்போ, என்கிட்ட ஏது பணம்? அப்பவே பிறருக்கு உதவி செய்யும் பழக்கம் அவருக்கு அதிகம். அன்றைய நிலையிலேயே நண்பர்களுக்காக நிறைய செலவு செய்வார். வசதியாய் இருக்கும் போது எவ்வளவு செய்திருப்பார்ன்னு நினைத்து பாருங்கள்… இதற்கு பின், நான் தங்கியிருக்கும் வீட்டில் என்னை, விட்டு விட்டு, அவர் வீட்டுக்கு போவார். இம்மாதிரி வளர்ந்தது தான் எங்கள் நட்பு. அன்பை பொழிவதில் அவருக்கு இணை கிடையாது. ஒருமுறை, தி.மு.க., கட்சி சார்பில், ஏழாவது சுயமரியாதை மாநாட்டை நடத்தும் மும்முரத்தில் இருந்தார் அறிஞர் அண்ணாதுரை. மாநாட்டில், ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்காக கதை, வசனம் எழுதினார் அண்ணா.
அப்போது, கோவையில் இருந்தார் எம்.ஜி.ஆர்., அச்சமயம், அவர், காங்கிரஸ்காரர். விபூதி பூசியிருப்பார். கதர் தவிர வேறு எதுவும் அணிய மாட்டார். கட்சி மற்றும் கொள்கை வேறுபட்டாலும் ரொம்ப பரந்த உள்ளம் கொண்ட தேசியவாதி அவர். அண்ணா எழுதிய, சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில், சிவாஜி வேடத்தில் அண்ணன் நடிப்பதாக இருந்தது; ஆனால், அவர் நடிக்கவில்லை. அண்ணா என்னைப் பார்த்து, ‘கணேசா… நீ நடிக்கிறாயா?’ எனக் கேட்டதும், ‘நடிக்கிறேன்…’ என்று கூறினேன். அந்நாடகத்தின் மொத்த வசனம், 110 பக்கம்; அதை காலையில் என்னிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு போய் விட்டார் அண்ணாதுரை. அன்று மாலை, நான் தங்கியிருந்த,’திராவிட நாடு’ அலுவலகத்திற்கு வந்தவர், ‘என்ன படிச்சியா?’ என்று கேட்டார். உடனே நான், ‘பாடமே செய்துட்டேன்…’ என்றேன்.
‘உண்மையாகவா!’ என்றார் ஆச்சரியத்துடன். ‘ஆமாம்…’ என்றேன். ‘சொல்லு பார்க்கலாம்…’ என்றார். அப்போது அண்ணாதுரையின் நண்பர்கள் தங்கவேலு முதலியார் மற்றும் ராஜகோபாலும் உடன் இருந்தனர். நான், அண்ணா முன், நடித்து காட்டினேன். கோட்டையை உடைக்கிற அக்காட்சியை நடித்து காட்டி முடித்ததும், ஓடி வந்து என்னை கட்டி தழுவினார் அண்ணா. அதன்பின் தான் நாடகத்தில் சிவாஜியாக நடித்தேன். சிவாஜி வேடத்தில் அண்ணன் எம்.ஜி.ஆர்., நடிக்காததால், அந்த வேடம் எனக்கு கிடைத்தது மட்டுமல்லாமல், அந்த வேடத்தின் பெயரே எனக்கு நிலைத்து விட்டது. இதுவே, என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

Leave A Reply

Your email address will not be published.