சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 113

8

சிவாஜி கணேசனுக்கும் மெல்லிசை மன்னருக்குமான நட்பு பற்றி புலவர் புலமைப்பித்தன் அவர்கள் குறிப்பிட்டதிலிருந்த என் ஞாபகத்துக்கு வரும் சில துளிகள்…

“நேற்று இன்று நாளை” திரைப்படத்தில் ‘நீ என்னென்ன சொன்னாலும் கவிதை…’ என்ற புலவர் புலமைப்பித்தனின் பாடல் மெல்லிசை மன்னரின் அருமையான இசையில் அமைந்து வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்த சமயம், சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க சிவாஜி வீட்டுக்குச் சென்றிருந்தாராம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள்.

எல்லோரிடமும் எப்போதும் கிண்டலாகப் பேசும் சிவாஜி, அன்று எம்.எஸ்.வி-யிடம், “அதென்ன (எம்.ஜி.ஆர்) அண்ணனுக்கு நீ முத்து முத்தா பாட்டு போடுவியோ? ஏன் எனக்குப் போட மாட்டியலோ?’ எனக் கேட்க, அது கிண்டல் எனக்கூடப் புரியாமல் பதறிவிட்டாராம் மன்னர்.

‘அண்ணே… எனக்கு ஒரு சுக்கும் தெரியாது. மெட்டு போட்டது மட்டும்தான் நானு. பாட்டு எழுதினது எல்லாம் வாத்தியார் அய்யாதான். நீங்க அவர்கிட்ட கேட்டுக்கிடுங்க’ என எம்.எஸ்.வி., புலமைப்பித்தனைக் காட்டி விட்டு பதற்றத்துடன் நிற்க, சிவாஜி எம்.எஸ்.வியின் பதற்றத்தை ரசித்து, வாய்விட்டுச் சிரித்து எம்.எஸ்.வி-யைக் கட்டிப்பிடித்துக் கொண்டாராம்.
அவர் மகா கிண்டல்காரரானாலும் கூட மற்றவர் திறமையைப் தகுந்த நேரத்தில் பாராட்டத் தயங்காதவர். சிவாஜி அவர்கள் எம்.எஸ்.வி அவர்களை அவ்வப்போது கிண்டல் செய்வதும் பதிலுக்கு எம்.எஸ்.வி கிண்டல் செய்வதும் அடிக்கடி நடப்பது உண்டாம்.

மெல்லிசை மன்னர், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் நடிகராக நடிக்கத் தொடங்கிய காலத்தில் ஒரு சமயம் அவரை சந்தித்த சிவாஜி கிண்டலாக , “ஆபீஸ் பாய் அண்ணே , நடிப்பில் கலக்குறீங்க … சக்கைப் போடு போடுறீங்க…! ஒரு விஷயம் தெரியுமா? இனிமே நான் இசையமைக்கப் போறேன்…” என்றாராம்.
அதற்கு மெல்லிசை மன்னர், “நீங்க மியூஸிக் போட்டு நான் அதைக் கேட்டுத்தான் ஆகணும்னா நான் நடிக்கறதை நீங்களும் பாத்துதான் ஆகணும்.” என்றதும் சுற்றியிருந்த வர்கள் சிரிக்க, உடனே சிவாஜி சீரியஸாகச் சொன்னாராம்…

“ஏம்பா சிரிக்கிறீங்க? விஸ்வநாதன் ஒரு சிச்சுவேஷன்ல ‘மிங்கிள்’ ஆகி மியூஸிக் போடும் போது அந்தக் காட்சியில் நான் நடிக்கறதை ஒரு சவால் போல நினைப்பேன். எனக்கு ‘ஆக்ட்’ பண்ண அவரது பாடல்கள் நல்ல ‘ஸ்கோப்’ கொடுக்கும். அதே இன்வால்வ்மென்ட் இப்ப அவருக்கு ஆக்ட் பண்ணும்போதும் இருக்கு. நான் இப்ப கிண்டல் பண்ணலை. விசுவோட நடிப்பை நான் உண்மையிலேயே பாராட்டுறேன் !…”

“அதுதான் சிவாஜி !” என்று நினைத்துப் பூரித்துப் போனாராம் மெல்லிசை மன்னர்.

Leave A Reply

Your email address will not be published.