சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 114

26

‘பாகப்பிரிவினை’யும் ‘பட்டிக்காடா பட்டணமா’வும் கிராமத்துக்கதைதான். ஆனால், இரண்டு சிவாஜிகளுக்குள்ளும் இருநூறு வித்தியாச மேனரிஸங்கள்.

‘ராஜா’வும் ‘தங்கப்பதக்கம்’ செளத்ரியும் போலீஸ்தான். இதில் ஸ்டைல் என்றால் அதில் மிடுக்கு. சுதந்திரத்துக்காக வெள்ளையனை எதிர்த்த கட்டபொம்மனாகவும் சிவாஜியை ரசிக்கமுடியும். தேச ரகசியங்களையே விற்கத்துணியும் ‘அந்தநாள்’ சிவாஜியையும் ரசிக்கமுடியும்.

‘பலே பாண்டியா’வில் வருகிற விஞ்ஞானி சிவாஜி வேறு. ‘பாலும் பழமும்’ படத்தில் மருத்துவ விஞ்ஞானி வேறு. கூடுவிட்டு கூடு பாய்வது என்றொரு வார்த்தை உண்டு. அப்படிப் பாய்கிற சக்தி யாருக்கு இருந்ததோ… தன் நடிப்பால், வசன உச்சரிப்பால், உடல் மொழியால், நடையால், பார்வையால் கூடுவிட்டு கூடு பாய்ந்துகொண்டே இருந்ததுதான் அவரின் அளப்பரிய நடிப்புச் சக்தி. அப்படி அவர் தந்ததெல்லாம் நமக்கு, சினிமாவுக்கு, சினிமா ரசிகர்களுக்கு… எனர்ஜி பூஸ்டர்.

‘என்னய்யா சிவாஜி சிவாஜின்னு. பணக்கார கேரக்டர்தானே’ என்று பட்டியலிட்டு, அந்த ஆக்டிங் கங்கையை, ‘பணக்கார’ சொம்புக்குள் அடைத்துப் பார்க்கமுடியாது. குற்ற உணர்ச்சியில் தவித்து மருகி, நண்பன் துரோகம் செய்கிறான் என்று வெதும்பி, சொத்தும் வேண்டாம் சுகமும் வேண்டாம் என்று மரண விளிம்பு தொடும் ‘ஆலயமணி’ சிவாஜியும் பணக்காரர்தான்.

அப்பாவின் சொல்லை மீறமுடியவில்லை, காதலித்தவளை கரம்பிடிக்கமுடியவில்லை என்று இன்னொருத்தியை திருமணம் செய்துகொண்டு, அவளுக்கும் நேர்மையாக, காதலியின் நினைவுகளிலும் மூழ்கி, மிடுக்குடனும் தவிப்புடனும் இருக்கிற ‘உயர்ந்த மனிதன்’ சிவாஜியும் பணக்காரர்தான்.

இரண்டு மகள்களையும் கண்களாக பாவிப்பதும், இதில் ஒருத்தி தன் மகளில்லை என்று தெரிந்து வெறுப்பதும், அதனால் அப்படியே புறக்கணிப்பதும், அந்தஸ்து போய்விடுமே என்று பதறுவதும் இவள் மகளா, அவள் மகளா என்று தவித்துக் கலங்குவதும், இறுதியில் கெளரவத்தை விட அன்பும் பிரியமுமே சாஸ்வதம் என்று புரிந்துகொள்வதுமாக இருக்கிற ‘பார் மகளே பார்’ சிவாஜியும் பணக்காரர்தான்.

Leave A Reply

Your email address will not be published.