சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 115

13

புதிய பறவை..

சிகரெட் புகையை உள்ளிழுத்து விடுவதிலும்,
மதுக் கோப்பையை கையில் எடுப்பதிலும்,
நுனி நாக்கை இரு விரல்களால் லேசாக தடவுவதில் கூட பாவனைகளில் சிலிர்ப்பூட்ட ஒருவரால் முடியும் என்று புரிய வைத்தவர்.
அவர்தான் சிவாஜி…

கர்ணன்..

சீற வேண்டாம்.தூற்ற வேண்டாம்.பதில் கேள்வி கொள்ள வேண்டாம்.ஏளனம் செய்பவரை, தூற்றுபவரை குரல் பலத்தால் ஒரே ஒரு சிம்ம கர்ஜனையால் நடுங்க வைக்க முடியும் என்று காட்டியவர் உண்டு.
அவர்தான் சிவாஜி.

ஞான ஒளி…

துப்பாக்கியால் தான் மிரட்டி பணிய வைக்க முடியும் இந்த கைதியை என்ற எண்ணத்துடன் இருக்கும் இன்ஸ்பெக்டரை தன் ஒரு விழி அசைவிலேயே பதில் மிரட்டல் காட்ட முரடன் ஆண்டனியாய் நடிக்க ஒருவரால் முடியும் என்றால்..
அவர் தான் சிவாஜி…

கௌரவம்..

ஜுனியர் வக்கீலின் வாதங்களாலும், வாதியால் வந்த தடுமாற்றத்தாலும், பதில் வாதத்தை எதிர்பார்க்கும் கோர்ட்டுக்கு மௌனம் காத்து No more questions என்று திகைக்க வைக்கும் பதில் சொல்லி அதையும் அசத்த வைக்கும் நடிப்பாக காட்டவும் ஒருவரால் முடியும் என்றால் ..
அவர்தான் சிவாஜி…

வீரபாண்டிய கட்டபொம்மன்..

அசதியால் துயில் கொள்ளும் மாமன்னன் அரசியல் தூது என்றதும், துயில் கலைத்து விரைந்து செல்லும் நடையிலே பிரமிக்க வைக்கவும் நடிப்பாற்றல் கொண்டவருண்டு.
அவர்தான் சிவாஜி.

தெய்வமகன்..

அருவருப்பாய் பிறந்ததாலேயே டாக்டரிடம் கொல்லச் சொன்ன மகனை தேடி,
பல வருடங்களுக்கு பின் அதே டாக்டரிடம் செல்ல, டாக்டர் மாடியிலிருந்து இறங்கி வருகிறார் என்பதை தன் கண் அசைவால் நமக்கு காட்டி, அசர வைத்தவர்.
அவர்தான் சிவாஜி.

சிவந்தமண்…

நாட்டை சீரழிக்கும் சர்வாதிகார ஆட்சியில், தந்தையும் தளபதியாய்இருந்தாலும், புரட்சியின் வீரியத்தை புரியவைத்து, தானும் இனி ஒரு புரட்சியாளனே என்றுரைத்து ஒரு சல்யூட் அடிப்பாரே. அந்த ஸ்டைலால் அரங்கத்தை அதிர வைத்தாரே.
அவர்தான் சிவாஜி.

உத்தமபுத்திரன்..

நாட்டை நினையாமல் நல்லதை புரியாமல் இன்பலோகத்தில் திரியும் உல்லாச வேந்தனுக்கு அறிவுரை யார் சொல்வது? தாய் சொன்னால் தெரியாதோ? அது புரியாதது போல் ஊஞ்சலாடி அதிலும் இன்பத்தில் திளைப்பது போல் நடிக்க ஒருவரால் முடியும்.
அவர்தான் சிவாஜி.

குங்குமம்..

கச்சேரியில் பெண்ணொருத்தி சின்னஞ் சிறிய வண்ணப்பறவை பாடலின் அடி மறக்க அடுத்த அடி இவர் தொடுக்க, அந்த ராக ஆலாபனையை முகத்தில் வடிக்க, பாடகர்களுக்கே இயலாத அந்த பாவனையை காட்டி எத்தனை அழகு படைத்தார்.
அவர்தான் சிவாஜி…

தங்கப்பதக்கம்..

தான் திரும்பி பழக்கமில்லை. தன்னை நோக்கி திரும்பி வைத்துதான் பழக்கம் என்று பேசி மாடிப்படியில் நின்று ஒரு போஸ் தருவாரே.அதிலும் கூட அற்புதம் செய்தாரே.
அவர்தான் சிவாஜி.

பாசமலர்..

பென்சில் சீவுவதில் என்ன சிறப்பை செய்ய முடியும்? அதுவும் தொழிலாளர் பிரச்சினை பேசுமிடத்தில்? ஆனால் அதில் காவியமே படைக்கலாமே என்று காட்டிய நடிகரல்லாவா.
அவர்தான் சிவாஜி.

எங்க ஊர் ராஜா..

யாரை நம்பி நான் பொறந்தேன் பாடல். இடிச்சத்தம் மழைச்சத்தம் என்று பிண்ணனி இசை முடிந்து வரும் “ஷ்ஷ்ஷ்ஷ் ” என்ற உச்சரிப்பிலேயே
மிரண்டல்லவா போய்விட்டோம்..வசன வார்த்தைகள் ஓராயிரம் இருந்தாலும் ஓரெழுத்தாக இருந்தாலும் அதை வியந்து போற்றவைக்க அவரால் மட்டுமே முடியும்.
அவர்தான் சிவாஜி.

பாலும் பழமும்..

நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வரும் அந்த ம்ம்ம் என்ற ஹம்மிங் .. அழகான தலையாட்டலில் அதை அற்புதம் ஆக்கினாரே.பெரும் ரசிகராக இருந்ததால் அல்லவா நமக்கும் அந்த ரசனை கிட்டியது.
அவர்தான் சிவாஜி.

எதிரொலி..

வக்கீலீன் பலம் அவர் வாதம்.வார்த்தைகளில் சொல்லி வந்த வாதத்தை கண்களாலேயே காட்டி, இப்படியும் புரியலாம் வாதம், இதுவும் ஓர் புதிய கலை என்பதை சொன்னவரல்லாவா.
அவர்தான் சிவாஜி.

படிக்காத மேதை..

கபடம் தெரியாத வெகுளி ரங்கனுக்கு வளர்ப்புத் தந்தைதான் யாவும்.
அவர், கட்டளைக்கு கீழ்ப்படி என்பதுதான் அவனது வேதம்.குடும்பப் பிரச்சினையால் வீட்டை விட்டு செல் என அவர் சொல்ல, எதற்கு என்று கூட கேட்காமல் செல்வார். வெகுளித்தன நடிப்பாக இருந்தாலும் அதிலும் உச்சம் தொட்டவர்.
அவர்தான் சிவாஜி…

ராஜா…

அடி கொடுப்பதுதான் வீரம் என்று காட்டி வந்த தமிழ் சினிமாவில் அதை வாங்குவதில் கூட வீரத்துடன் ஸ்டைலையும் காட்டியவர்.
அவர்தான் சிவாஜி…

மனோகரா…

அன்னையை அவமதித்தோரை வெகுண்டெழுந்து,
“இன்னுமா பொறுமை”
என்று கண்களில் கனல் கக்கி நோக்க, இப்போதுதான் பொறுமை என அன்னையின் சொல் கேட்டதும், கனல் கக்கிய விழிகள் அடுத்த நொடியே அந்த ஏமாற்றத்தை காண்பிக்குமே. நொடிப்போழுதில் கண்களில் கொண்டு வரும் நடிப்பை என்னவென்று சொல்வது?
அவர்தான் சிவாஜி..

தீபம்..

ராமதாசை அழைத்து எச்சரிக்கும் காட்சி. கோபத்தை மிரட்டி உருட்டித்தான் சொல்ல முடியுமா? பவ்யமாக சாந்தமாக சொல்லவும் காண்பிக்க வைத்த நடிப்புத்தான் என்னே?
அவர்தான் சிவாஜி..

பராசக்தி…

தூங்குபவனை எழுப்பினால் முழிக்காமல் என்ன செய்வான்? அதை போலீஸ்காரரிடமே சொல்லும் இயல்பான நடிப்பு.
அவர் தானே சிவாஜி..

Leave A Reply

Your email address will not be published.