சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 117

15

 

கோடை கால நிலா ! குளிர் கால சூரியன் !!

பொதுவாக எல்லோருக்கும் இரண்டு கண்கள்தான். அந்த இரண்டு கண்கள், ஒன்பது விதமான ரசங்களை காட்டும். ஆனால் நமது சிவாஜி கணேசனோ தனது இரண்டு கண்களில், ஓராயிரம் ரசங்களைக் காட்டி, நம்மையெல்லாம் திகைக்க வைத்திருக்கிறார்.

நாம் பார்த்து வியந்த தெய்வமகன் திரைப்படத்தை எடுத்துக் கொண்டால், அதிலும் 3 வேடங்கள், தந்தையாக வரும் சிவாஜியின் கண்களில் குற்ற உணர்வையும், பாச உணர்வையும் எடுத்துக்காட்டும், அதேபோல் வேண்டாத பிள்ளையாக வரும் சிவாஜியின் கண்களில் ஏக்கமும், ஏமாற்ற‍மும், பாசமும் ஒருங்கே இருக்கும். இரண்டாவது மகனாக வரும் சிவாஜியின் கண்களில் அப்பாவித் தனமும், தந்தைமீதுள்ள பயமும், தாய்மீதுள்ள செல்லமும் இந்த மூன்றும் ஒருங்கே மிளிரும். என்ன ஒரு அற்புதமாக நடிப்பு அது.

அதேபோல் சிவாஜி அவர்கள் 9 வேடங்கள் ஏற்று நடித்த நவராத்திரி என்றொரு திரைப்படத்தை இங்குள்ள பெரும்பாலானோர் பார்த்திருப்பீர்கள். இந்த நவராத்திரி யை திரைப்படத்தை எடுத்துக்கொண்டால், காதலாக வரும் சிவாஜியின் கண்களில் காதலும் இளமையும் ததும்பும், பெருஞ்செல்வந்தனாக வரும் சிவாஜியின் கண்களில், கண்ணியத்தையும், பண்பையும் எடுத்துக்காட்டும், வாழ்வை வெறுத்து, தடம்மாறும் வாலிபனாக வரும் சிவாஜியின் கண்களிலோ வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட தோல்வியையும், அதனால் ஏற்பட்ட விரக்தியையும் வெளிக்காட்டும்,. கொலைகாரனாக வரும் சிவாஜியின் கண்களில் கொடூரத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் விதமாக பயங்கரமாக வெளிப்படுத்தி நம்மை அச்சுறுத்தும். மனநல மருத்துவராக வரும் சிவாஜியின் கண்களில் கருணையையும், வயது முதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட பக்குவத்தையும் எடுத்துக்காட்டும். நோயாளியாக வரும் சிவாஜியின் கண்களில், தனது இயலாமையையும் நோயின் தீவிரத்தையும் எடுத்துக்காட்டும், நாடக நடிகராக வரும் சிவாஜியின் கண்களில் சற்றே பெண்மைத் தனத்தையும், கலைமீதுள்ள பக்தியை எடுத்துக்காட்டும். விவசாயியாக வரும் சிவாஜியின் கண்களில், வெகுளித் தனத்தை அப்படியே வெளிக்காட்டும், காவல் துறை அதிகாரியாக வரும் சிவாஜியின் கண்களில் அதிகார தோரணையும் கம்பீரமும் தெறித்திருக்கும்.

ஒரு திரைப்படத்தில் திருநாவுக்கரசராக நடித்திருப்பார். அப்போது அவரது கண்களில் மஹா பெரியவாவின் அருட்பார்வை, சிவாஜியினை கண்கள் அப்ப‍டியே பிரதிபலித்திருக்கும்.

நமது கண்களுக்கு விருந்தளித்த நடிகர் சிவாஜி நடித்த திருவிளையாடல் திரைப் படத்தில், சிவபெருமான் பல அவதாரங்கள் எடுத்திருப்பார். அந்த திரைப்படத்தில், சிவபெருமானாக இருக்கும்போது, அவரது கண்களில் கனிவும் கருணையும் குடி கொண்டிருக்கும், நக்கீரனை, நெற்றிக்கண் திறந்து எரிக்கும்போது, நெற்றிக் கண்ணில் எப்படி தீம்பிழம்பு வெளிவந்து நக்கீரனை எரித்ததோ, அதே அளவில் அவரது இரண்டு கண்களில் தீம்பிழம்பு தெரியும். அதே திரைப்படத்தில் வரும் பாகவதரின் ஆணவத்தை அடக்கி, நல்லபுத்தியை புகட்ட, விறகுவெட்டியாக வரும் சிவாஜியின் கண்களில் ஒரு பாமரனின் பார்வை அதிலே இருக்கும்.

தங்கப்பதக்கம் திரைப்படத்தில், தனது நண்பர் V.K.ராமசாமியோடு விளையாடுவார் அப்போது அவரது கண்களில் மழலையின் பார்வை இருக்கும். அதே நேரத்தில் சமூக விரோதியாக வரும் மனோகர் அவர்களை, கைது செய்யும் போது அவரது பார்வையில் துணிச்சலும், கம்பீரமும் மிரட்டும்.

பாசமலர் திரைப்படத்தை பார்க்காதவர்கள் யாரும் இல்லை. பார்த்தவர்கள் அழாத வர்கள் யாரும் இல்லை எனலாம். ஆம்! திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சியில், சிவாஜி கண்களை இழந்தபிறகு தனது தங்கையின் மகளையும், தனது மகனையும் தூக்கிக் கொண்டு, பாட்டு பாடுவார். இங்கே பாருங்கள் கண்களை இழந்த பிறகும் நம் கண்களில் நீர் வழியச் செய்திருப்பார் அந்த ஒற்றை காட்சியில்

ஞான ஒளி திரைப்படத்தில் அந்தோணியாக வரும் சிவாஜியின் கண்களில் அப்பப்பா என்ன ஒரு முரட்டுத்தனமான பார்வை. அதே திரைப்படத்தில் பணம் படைத்த‍ அருணாக தோன்றும் சிவாஜியின் கண்களில், என்ன ஒரு மிடுக்கான பார்வை. இதில் ஒரு காட்சி, மருத்துவராக வி.கே. ராமசாமி அவர்கள், பணபலம் படைத்த அருணாக தோன்றும் சிவாஜியின் உடல்நிலையை பரிசோதிப்பார். அப்போது பாருங்கள், சிவாஜியின் கூலிங்கிளாஸ் அணிந்திருப்பார். கூலிங்கிளாஸ் அணிந்த போதும் அவரது கண்கள் அங்கே நடித்திருக்கும்.

மொத்தத்தில், திரைப்படங்ளில் சிவாஜியின் கண்கள் அழுதால், நமது கண்களும் அழும், சிவாஜியின் கண்கள் மகிழ்ச்சி அடைந்தால் நமது கண்களும் மகிழும். சிவாஜியின் கண்கள் மிரட்டினால், நமது கண்களில் பயம் தொற்றிக் கொள்ளும்.

ஆகவே

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது முதுமொழி
சிவாஜியின் பாதிப்பின்றி ஒரு நடிகராலும் நடிக்க முடியாது இது புதுமொழி

Leave A Reply

Your email address will not be published.