சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 109

52

நடிகர் திலகம் ஒரு காவிய புருஷனாக வாழ்ந்து காட்டிய பாபு திரைப்படம்தான் அந்த 1971 தீபாவளிக்கு வெளியாகியது. ACT என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட A C திருலோகசந்தர் அவர்கள் தயாரித்து இயக்கிய படம் பாபு.

இயக்குநர்களிலேயே முதுகலை பட்டதாரியாக அந்த காலத்திலேயே அறியப்பட்டவர் ACT. எவரிடமும் உதவியாளராக இல்லாமல் நேரிடையாக இயக்குனராக உயர்ந்தார். அதற்கு அவர் சினிமாவை பற்றி படித்த பல்வேறு புத்தகங்கள் உதவின. பார்த்தால் பசி தீரும் இவர் எழுதிய கதைதான் என்பது பலரும் அறியாத விஷயம்.அசோகன் மூலமாக ஏவிஎம் தொடர்பு ஏற்பட்டு அந்த வளாகத்தில் நுழைந்து ஏவிஎம் படங்களின் ஆஸ்தான இயக்குனராக இருந்த அவரை வெளி படங்களுக்கு இழுத்துக் கொண்டு வந்தவர் பாலாஜி. தனது இரண்டாவது தயாரிப்பான தங்கை படத்தை இயக்கும் பொறுப்பை ஏசிடியிடம் ஒப்படைத்தார் பாலாஜி.அங்கேதான் ஏசிடி நடிகர் திலகத்தை சந்திக்கிறார் (பார்த்தால் பசி தீரும் படத்திற்கு கதை எழுதியிருந்தால் கூட அங்கே படத்தின் செட்டில் பீம் பாயும் ஆரூர்தாஸும்தான் இருந்தார்கள்). அங்கே ஆரம்பித்த அவர்களது நட்பு மற்றும் தொழில் முறை உறவு 20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்தது. நடிகர் திலகத்தை வைத்து மிக அதிகமான படங்களை (20 படங்கள்) இயக்கிய பெருமையும் ஏசிடிக்கு கிடைத்தது.
நடிகர் திலகத்தை வைத்து சுமார் 4 வருடங்களில் 8 படங்களை இயக்கிய பிறகு ஏசிடிசொந்தமாக பட கம்பெனி ஆரம்பிக்கிறார். சினி பாரத் என்ற பெயரில் தொடங்கப்படும் அந்த நிறுவனத்தின் முதல் படத்தில் நாயகனாக நடிகர் திலகம் நடிக்கிறார் என்ற செய்தி வந்தது.1965ல் வெளியான மலையாள திரைப்படமான ஓடயில் நின்னு என்ற படத்தை தழுவி எடுக்கப்படுகிறது என்ற செய்தும் வெளியானது. மலையாளத்தில் பிரபல எழுத்தாளர் கேசவ தேவ் என்பவரின் நாவல் முதலில் வெளிவந்து பிறகு அங்கு அது திரைப்படமானது. சத்யன் நாயகனாக நடித்திருந்தார். ரீமேக் என்றாலும் திரைக்கதையில் நிறைய மாறுதல்களை செய்து தமிழுக்கேற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டது. அன்றைய நாட்களில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் என்பது அபூர்வமே. கை ரிக் ஷா ஒட்டி பிழைக்கும் ஒரு சாதாரண மனிதன் ஒரு வேளை சாப்பாடு போட்ட குடும்பத்துக்காக தனது வாழ்வையே அர்பணிப்பதுதான் படத்தின் அடிநாதம்.
இதிலும் நடிகர் திலகத்திற்கு ஜோடி கிடையாது.1971ஐ பொறுத்தவரை சில படங்களில் ஜோடி இல்லாதது மட்டுமல்ல ஜோடி இருந்த படங்களில் கூட டூயட் பாடல் கிடையாது என்பது குறிப்பிட வேண்டிய விஷயம். இதில் கூடையில் சோற்று பாத்திரங்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் பெண்ணான விஜயஸ்ரீயும் (பாவம் இளம் வயதில் தற்கொலை செய்து கொண்டார்) நடிகர் திலகமும் காதலிப்பதாக வந்தாலும் ஜோடி பாடலோ அல்லது காதல் காட்சிகளோ (ஒரேயொரு காட்சியை தவிர) கிடையாது. 1971 தேர்தலுக்கு பிறகு படப்பிடிப்பு துவங்கி முழு மூச்சாய் நடத்தி முடிக்கப்பட்டது. தீபாவளிக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வருடம் 1952க்கு பிறகு அக்டோபரில் வெகு முன்னதாகவே தீபாவளி வந்த வருடம். 1952ல் தீபாவளி அக்டோபர் 17 என்றால் அது 1971ல் அக்டோபர் 18 தீபாவளியாக வந்தது.
தீபாவளி ரிலீஸ் என்று 4 படங்கள் அறிவிக்கப்பட்டன. குறிப்பிட வேண்டிய விஷயம் நான்கில் மூன்று படங்கள் கலர். கேஎஸ்ஜியின் ஆதி பராசக்தி, ராமண்ணாவின் வீட்டுக்கு ஒரு பிள்ளை, பழைய அபூர்வ சகோதர்களை தழுவி எடுக்கப்பட்ட நீரும் நெருப்பும். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சாதாரணமாக கருப்பு வெள்ளை படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த ஜெய்சங்கர் நடிப்பில் கலர் படமாக வீட்டுக்கு ஒரு பிள்ளை வெளியானதுதான். பாபு மற்றுமே கருப்பு வெள்ளை. பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லாமல் வெளிவந்த படம் பாபு. அந்த 1971 அக்டோபர் 18
தீபாவளி நாள் தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரு முக்கியமான தேதியாக மாறியது. 1931ல் ஆரம்பித்து இப்போது 2021 வரை இந்த 90 வருட சினிமா சரித்திரத்தில் மிக பெரிய போட்டியாளர்களாக கருதப்பட்ட இருவர் (அவர்களுக்கு முன்பும் சரி, அவர்களுக்கு பின்பும் சரி வேறு எந்த இருவரும் அது போல் போட்டி போட்டதில்லை என்பது வரலாறு) நடித்த படங்களும் ஒரே நாளில் வெளியானது அதுதான் கடைசி முறை. அதன் பிறகு இருவர் படங்களும் ஒரே நாளில் வெளியாகவில்லை. அதற்கு முந்தைய நாளும் அதாவது 1971 அக்டோபர் 17 ஒரு முக்கியமான நிகழ்விற்கு சாட்சியானது. அன்றைய முதல்வர் கருணாநிதி தனது மூத்த மகனான மு க முத்துவை நாயகனாக்கி தனது சொந்த நிறுவனமான அஞ்சுகம் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த பிள்ளையோ பிள்ளை படத்தின் பூஜை அன்றுதான் நடைபெற்றது.முதல் காட்சியை கிளாப் அடித்து துவக்கி வைத்தவர் எம்ஜிஆர். சரித்திரம் எப்போதுமே பலருக்கும் பாடம் எடுக்கும்.எம்ஜிஆர் 1971 அக்டோபர் 17 அன்று எந்த கருணாநிதியின் சொந்த நிறுவனத்திற்காக கிளாப் அடித்து ஆரம்பித்து வைத்தாரோ, சரியாக ஒரு வருடம் கழித்து அதே அக்டோபர் 17 அன்று (1972) அதே கருணாநிதியின் கட்சிக்கு எதிராக அதிமுக என்ற கட்சியை கிளாப் அடித்து ஆரம்பித்தார் என்பதுதான் மிக மிக சுவாரஸ்யமான ஒற்றுமை.
அந்த தீபாவளியும் ஒரு திங்கட்கிழமை வந்தது. மதுரையில் பாபு ஸ்ரீதேவியில் ரிலீஸ். 1970 தீபாவளி முதல் தொடர்ந்து வெளியான நடிகர் திலகத்தின் 5வது படம். தீபாவளியன்று 5 காட்சிகள். இந்த முறை தீபாவளியே தாத்தா வீட்டில்தான். அதிகாலையிலேயே எழுந்து விட்டேன்.சாதாரணமாக படம் போவதற்கு மன்ற டோக்கன் வாங்கி விடுவோம். அந்த முறை மன்ற டோக்கன் அதற்கு முந்தைய வருடம் போல் முதலிலேயே கொடுக்கப்படவில்லை. காரணம் நான் முன்பு குறிப்பிட்டு சொல்லியிருந்த மதுரை மாவட்ட சிகர மன்ற தலைவராக செயல்பட்டுக் கொண்டிருந்த ஆர்.என் துரை சில தனிப்பட்ட காரணங்களுக்காக மன்றத்தை விட்டு விலகி மாற்று முகாமில் சேர்ந்து விட்டார். அதை தொடர்ந்து ஏற்பட்ட சில குழப்பங்களினால் டோக்கன் முறை சற்று பாதிக்கபப்ட்டது. தீபாவளி அன்று காலையில் வந்து தியேட்டரில் வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டனர். காலையில் ஓப்பனிங் ஷோவிற்கு முன்பாகவே சென்று விட்டோம். ஆனால் சரியான கூட்டம். எங்களுக்கு தெரிந்த மன்றத்து ஆளை தேடி கண்டு பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அந்த தாமதத்தினால் எங்களுக்கு ஓப்பனிங் ஷோ டிக்கெட் கிடைக்கவில்லை. எவ்வளோ முயன்றும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். மூன்றாவது காட்சி மதியம் 3 மணிக்கு டோக்கன் கிடைத்தது.
சரி என்று வாங்கி கொண்டு வரும்போது கஸினின் நண்பர் குழாம் (ஒரு 5,6 பேர்கள் இருக்கும்) சரி மூணு மணிக்குத்தான் ஷோ, நம்ம மீனாட்சிக்கு போகலாமா என்று கேட்க உடனே எல்லோரும் சரி என்று சொல்லி விட்டார்கள். அங்கே இந்தி படம்.போட்டிருந்தார்கள். ஏன் அதற்கு போவதற்கு ஆர்வம் என்றால் அங்கே தீபாவளிக்கு திரையிடப்பட்டிருந்தது ஜானி மேரா நாம். ஆம். நமது ராஜாவின் ஒரிஜினல் இந்தி வடிவம். தீபாவளி நாள் என்பதால் கூட்டம் இருந்தது. டிக்கெட் கிடைத்து உள்ளே போய் உட்கார்ந்தோம். படம் நல்ல சுவாரஸ்யமாக இருந்தது. தேவ் ஆனந்த் ஸ்டைல் என்ற பெயரில் சில செயற்கையான செய்கைகள் செய்வார். அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஓகே. நீ வர வேண்டும் பாடல் கொச்சினில் எடுக்கப்பட்டிருந்தது போல ஒ ஓ மேரா ராஜா பாடல் ஹிமாச்சல் மலைப்பிரேதசத்தில் கேபிள் காரில் எல்லாம் வைத்து எடுத்திருப்பார்கள். தமிழில் இல்லாத பாடல் ஒன்று இறுதியில் வில்லன் மாளிகையில் கட்டிட தொழிலாளியாக நுழையும் நேரத்தில் ஹேமா ஒரு பாடல் பாடுவார். அது தமிழில் இல்லை.காரணம் இரண்டில் ஒன்று முடிந்தவுடன் வரும் அடுத்த காட்சி என்பதனால் பாடல் அங்கே இடம்பெறவில்லை.
படம் முடிந்து வீட்டிற்கு வருகிறோம்.பாபு படத்தை பார்க்கும் ஆவலில் இருந்த எனக்கு அது கைகூடவில்லை. எங்கள் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் இல்லை என்பதினால் தாத்தா வீட்டிற்கு நான் வந்திருந்தேன். பண்டிகை நாளன்று ஒரே மகனான நான் வீட்டில் இல்லாமல் இருந்தது அப்பாவிற்கு வருத்தமாக இருந்திருக்கிறது. ஆகவே என்னை கிளம்பி வர சொல்லி தகவல் வரவே ஏமாற்றமாக ஏக்கமாக எங்கள் வீட்டிற்கு கிளம்பி போனேன். கஸின் மட்டும் போய்விட்டு வந்தார். அந்த முதல் நாள் பார்க்காதது பின்னர் சில பல காரணங்களினால் உடனே பார்க்க முடியாமல் 10,15 நாட்கள் கடந்து பிறகு ஸ்கூலுக்கு ஒரு விடுமுறை நாளன்று மாட்னி ஷோதான் போக முடிந்தது. அதற்குள் அனைத்து படங்களை பற்றிய ரிப்போர்ட்களும் வந்து விட்டன.பாபுவிற்கு ரிப்போர்ட் பிரமாதம் என்று வந்து விட்டது. ஆது போல் ஆதி பராசக்திக்கும் நல்ல ரிப்போர்ட்.மீண்டும் ஆச்சரியமாக வீட்டிற்கு ஒரு பிள்ளை படமும் ஓகே என்று சொல்கிறார்கள்.
நான் சில நாட்கள் சென்றுதான் பார்த்தேன் என்று சொன்னேன். அன்றும் நல்ல கூட்டம். நான் பார்த்தது நவம்பர் 5 வெள்ளிக்கிழமை, 19வது நாள்.(அன்றுதான் பாலசந்தரின் புன்னகை வெளியானது என நினைக்கிறேன்). படம் ஓடும்போது முதல் வாரத்தில் இருக்கும் அலப்பறை இல்லையே தவிர மற்றபடி படத்தில் முக்கியமான காட்சிகளுக்கெல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது. டைட்டில் போடும்போது சின்ன வயது பாபு திருடனை விரட்டி பிடிப்பது போன்ற காட்சிகளுக்கே நல்ல ரெஸ்பான்ஸ். நடிகர் திலகத்தின் அறிமுக காட்சியே சண்டைக்காட்சிதான். தொழிற்சாலையில் சக தொழிலாளியை அடிக்கும் முதலையின் மகனான எஸ் வி ராமதாஸை புரட்டி எடுப்பார். படத்திற்கு வருவதற்கு முன்பு படம் கொஞ்சம் சோகம் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். இந்த சண்டையோடு அறிமுகத்தை பார்த்தவுடன் ஆஹா என்று இருந்தது.
கடைத்தெருவில் ஹோட்டல் வைத்து நடத்தும் விகே ராமசாமி. அவரிடம் வாடிக்கையாக கணக்கு வைத்து சாப்பிடும் ரிக் ஷா தொழிலாளர்களாக நாகேஷ், ஏ கருணாநிதி போன்றவர்கள், இவர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கும் நபராக எம் ஆர் ஆர் வாசு. இதில் காமெடி ட்ராக்கை ஓட்டுவார்கள். அங்கே வாடிக்கையாக வருபவர்தான் நடிகர் திலகம். கடன் வைக்காமல் தன்னிடம் காசு இருந்தால் மட்டும் சாப்பிடுபவர் அவர். ஒரு நாள் ஒரு வயதான ரிக் ஷா தொழிலாளி கை ரிக் ஷாவை இழுக்க முடியாமல் திணறுவதை பார்த்துவிட்டு அவரிடமிருந்து அந்த ரிக் ஷாவை பெற்று, தான் ஓட்ட ஆரம்பிப்பார் நடிகர் திலகம். அந்த வண்டிக்கும் வாசுதான் பணம் கொடுத்திருப்பார். தினசரி ரிக் ஷா இழுத்து சம்பாதிப்பார். அதில் மிச்சம் பிடித்து விகேஆரிடம் கொடுத்து வைப்பார். அவர் ஆட்களை வைத்து கையால் ரிக் ஷா இழுப்பதை பல இடங்களிலும் படமாக்கியிருப்பார்கள். நடிகர் திலகமே இழுத்து வந்திருப்பார்.
இவர்கள் ரிக் ஷா ஸ்டாண்டிற்கு சாப்பாடு எடுத்து வரும் கூடைக்காரி விஜயஸ்ரீயிடம் ஒருவன் வம்பு பண்ண அவனை அடித்து துரத்துவார் நடிகர் திலகம். அவன் கறுவி கொண்டே போவான். விஜயஸ்ரீக்கும் நடிகர் திலகத்திற்கும் நடுவில் சின்னதாக ஒரு அன்பு மலர்வதை வசனம் இல்லாமல் காட்சிப்படுத்தியிருப்பார் ஏசிடி. அதை தொடர்ந்து வருவதுதான் வரதப்பா வரதப்பா காஞ்சி வரதப்பா பாடல். ஒரு டிபிக்கல் குத்து டான்ஸ் பாடலாக இருந்தாலும் சில ஸ்டெப்ஸ் நடிகர் திலகம் அசத்தியிருப்பார். வலது கையை அசைக்காமல் இடது கையை மட்டும் நீட்டி மடக்கி வளைத்து அவர் ஆடும்போது என்ன கைதட்டல். பாடல் முடியும்போது வேறு பின்னணி இசைக்கு அவரும் விஜயஸ்ரீயும் போடும் ஸ்டெப்ஸ் தியேட்டரில் விசில் பறக்கிறது.
அதற்கு அடுத்து படத்தின் முக்கியமான திருப்பம். ஆனால் அது முதல் முறை பார்க்கும்போது இந்த லீட் சீன்தான் படத்தின் கதையின் போக்கிற்கு உதவ போகிறது என்பது தெரியாமலே பார்க்கிறோம். L போர்ட் மாட்டி கொண்டு சௌகார் சார் ஓட்ட பழகிக் கொண்டிருக்க அவருக்கு அருகில் அமர்ந்து பாலாஜி சொல்லி தர பின் சீட்டிலிருந்து குழந்தை ஸ்ரீதேவி சிரித்துக் கொண்டே நடப்பதை வேடிக்கை பார்க்க சௌகார் பதட்டத்தில் காரை ஒரு கம்பத்தில் மோதி விடுவார். அதை அருகில் வந்து வேடிக்கை பார்க்கும் நடிகர் திலகம் காரை எடுக்க முடியாமல் தவிக்கும் பாலாஜியையும் குடும்பத்தினரையும் தனது கை ரிக் ஷாவில் வைத்து இழுத்து கொண்டு சென்று வீட்டில் விடுவார். மழையில் நனைந்து கிழிந்து போன சட்டையோடு நிற்கும் நடிகர் திலகத்தை பார்த்துவிட்டு பாலாஜி சௌகாரிடம் சொல்ல அவருமொரு பான்ட் ஷர்ட் கொண்டு தருவார். வேண்டாம் என்று மறுக்கும் நடிகர் திலகத்தை கட்டாயப்படுத்தி அணிய வைப்பார் பாலாஜி. நீங்க தேர்தலிலே நிற்க போறீங்களானு கேட்பார் நடிகர் திலகம். நான் அஞ்சு வருஷத்திற்கு ஒரு முறை சோசலிஷம் பேசற ஆள் இல்லை. எப்பவும் பேசறவன் என்பார் பாலாஜி. சாப்பாடு ரெடி என்று சொல்லும் சமையல்காரனிடம் நடிகர் திலகத்திற்கு சாப்பாடு அதுவும் வீட்டு ஹாலில் வைத்து பரிமாற சொல்ல சௌகார் பரிமாறுவார். எப்படிங்க சொல்லி வச்ச மாதிரி மூணு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க என்று வியப்போடு நடிகர் திலகம் கேட்கும்போது அவர் முகபாவம் பிரமாதம் என்றால் அவர்கள் காட்டிய அந்த அன்பிற்கு அவர் நெகிழ்ந்து போய் கண்களில் அதை காட்டுவது அற்புதம் என்றால் ஸ்ரீதேவி தனது இலையிலிருந்து காய்கறியை எடுப்பதை பார்த்து அதிர்ச்சியாக கண்களில் மிரட்சி தெரிய பார்க்க அதை பாலாஜியும் சௌகாரும் வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டு என் சகோதரனை போன்றவன் நீ. சாப்பிடு மேன் எனும்போது மீண்டும் அந்த கண்களில் அவர் காட்டும் பாவங்கள் அதிஅற்புதம் தன்னை போன்ற ஒரு சாதாரண மனிதனை அவ்வளவு பெரிய வீட்டிலிருப்பவர்கள் சமமாக மதித்து உடையளித்து உணவளித்து மகிழ்வதை அந்த உணர்வு தனக்குள் ஏற்படுத்தும் நெகிழ்வை கண்ணால் மட்டுமே வெளிப்படுத்தி அதை பார்வையாளனுக்கும் கடத்தும் பேராற்றல் நடிகர் திலகத்தை விட்டால் வேறு யாருக்கு இருக்கிறது? சும்மா சொல்லக்கூடாது. ஒரு 10 நிமிடத்துக்குள்ளாகவே வந்து போகும் சிறப்பு தோற்றத்தில் பாலாஜி பிரமாதமாக பண்ணியிருப்பார்.
தனக்கு கிடைத்த புதிய ஆடைகளையம் அந்த அனுபவத்தையும் விஜயஸ்ரீயிடம் நடிகர் திலகம் பகிர்ந்து கொள்ள அவர்கள் அமர்ந்து பேசும் ரயில் ட்ராக்கில் ரயில் வந்து விட பயந்து போய் நடிகர் திலகத்தை விஜயஸ்ரீ அணைத்துக்கொள்ள இனிமே ராத்திரி 8 மணிக்கு ரயில் வரும்போது என்று விஜயஸ்ரீ சொல்ல ஆரம்பிக்க கட்டி பிடிச்சுக்கலாம்ன்னு சொல்றியா என்று கேட்பார்.நடிகர் திலகத்திற்கு அமைந்த ஒரே ரொமான்டிக் சீன் அதுதான். மற்றொரு முக்கிய திருப்பமாக ரிக் ஷா ஸ்டாண்ட் தொழிலாளிகள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கீசக வாதம் நாட்டிய நாடகம் அதில் நடனமாடும் விஜயஸ்ரீ உடை மாற்ற தனியறைக்கு செல்ல ஏற்கனவே அவமானப்பட்டிருந்த அந்த மைனர் உள்ளே நுழைந்து பலவந்தமாக வியாஜ்யஸ்ரீயை ஆக்ரமித்து அதன் காரணமாக அவர் இறந்து போவார். இவரை தேடி வரும் நடிகர் திலகத்தை பார்த்தவுடன் மைனர் ஓட ஆரம்பிக்க துரத்தி செல்லும் நடிகர் திலகத்திற்கும் அவனுக்கும் ஏற்படும் மோதல். நல்ல சண்டைக்கு காட்சி. ஒரு தோப்பில் இரவு நேரத்தில் நடைபெறுவதாக காட்சி. ஒரு அரிவாளை வைத்து நடிகர் திலகத்தை தாக்க முயற்சிக்க கை நழுவி கீழே வீழும் அரிவாள் முனையிலே வந்து வீழ்ந்து மைனர் உயிர் விட நடிகர் திலகத்திற்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை.
சிறைவாசம் முடிந்து வெளியே வரும் நடிகர் திலகம் விகேஆரை பார்க்க, சேர்த்து வைத்திருந்த நடிகர் திலகத்தின் பணத்தை வைத்து ஒரு புதிய ரிக் ஷா வாங்கி வைத்திருப்பார் விகேஆர்.அதை வைத்து மீண்டும் வாழ்க்கையை துவக்கும் நடிகர் திலகம் ஒரு நாள் கடை தெருவில் ஸ்ரீதேவியை ஒரு பிச்சைக்கார கோலத்தில் சந்திக்க அதிர்ந்து போவார். அவரையும் கூட்டி அவர்களின் குடிசைக்கு போக விதவை கோலத்தில் சௌகார்.ஒரு கார் விபத்தில் கணவனை பறிக்க கொடுத்து விட்டேன் திடீரென்று நடந்ததால் சேமிப்பு பணம் எல்லாம் கரைந்து போய் இந்த குடிசைக்கு வந்துவிட்டதாக சொல்வார் நடிகர் திலகம் செய்ய நினைக்கும் உதவிகளை மறுப்பார் சௌகார். நடிகர் திலகத்தின் வற்புறுத்தலால் ஒப்பு கொள்வார். ஒரு நாள் இரவு இரண்டு குடிகாரர்கள் குடிசைக்கு வந்து சௌகரிடம் தவறாக நடக்க முயற்சிக்க அவர்களை அடித்து விரட்டுவார் நடிகர் திலகம். அவர்களுக்கு துணையாக அங்கே வெளியில் தங்குவார். இந்த சண்டைக் காட்சியும் கைதட்ட ஏதுவாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஒரு நாள் இரவு ஸ்ரீதேவி நடிகர் திலகத்திடம் கடவுள் பற்றி கேள்வி கேட்க நடிகர் திலகம் சொல்லும் பதிலால் திருப்தி அடையாமல் ஒரு விளக்கு எடுத்து வந்து நடிகர் திலகத்தின் காலில் வைத்து அவரை வணங்க நடிகர் திலகம் தடுத்து பாடும் பாடல்தான் அழியா வரம் பெற்ற இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாடல். வாலியின் அற்புதமான வரிகள். (குறிப்பாக பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொது நலன் நினைத்து நீ வழங்கும் செல்வம் பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்) அற்புதமானவை.சற்றே மார்க்கெட் டல்லாக இருந்த தன்னை மீண்டும் பிசியாக்கியது இந்த பாடல்தான் என்று வாலியே பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீதேவியின் விருப்பப்படியே அவரை ஸ்கூலிலும் சேர்த்து விடுவார் நடிகர் திலகம்.
குழந்தையாக இருந்த ஸ்ரீதேவி வளரும்போது ரோஜாரமணியாக மாறுவார். அப்போதுதான் அவர் ஒரு ரிக் ஷாக்காரர் என்ற ஒரு ஏளன உணர்வு ரோஜாரமணி மனதில் வளர நடிகர் திலகத்தை மதிக்க மாட்டார். ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு தன்னை தேடி பள்ளி வகுப்பறைக்கே வந்து சில்லறை காசுக்களாகவும் நோட்டுகளாகவும் கொடுக்க ரோஜாரமணி வீட்டில் வந்து சௌகரிடம் எகிறுவார். காட்சிகள் மாற ரோஜாரமணி இப்போது வெண்ணிற ஆடை நிர்மலா. அந்த அலட்சியம் திமிர் அனைத்தும் வளர்ந்திருக்கும். இதற்குள் நடிகர் திலகத்திற்கு காச நோய் என்று தெரிய வர அவர் அதை பற்றி கவலை கொள்ளாமல் நிர்மலாவின் படிப்பை முடிப்பதற்கு என்ன தேவையோ அதை செய்ய தயாராக இருப்பார். நிர்மலா தோழிகளோடு பிக்னிக் கடற்கரைக்கு செல்ல அங்கே அவருக்கும் ஸ்விம்மிங் உடை அணிவிக்கப்படும். அந்த காலத்தில் கண்ணனும் கோபியரும் என்ற எல் ஆர் ஈஸ்வரி பாடல். அங்கே படம் வரைபவராக வரும் சிவகுமார் நிர்மலாவின் தோழியின் அண்ணனாக இருப்பார். இருவரும் காதலிக்க தொடங்குவார்கள். நிர்மலாவை தனது காரில் ஏற்றி கொண்டு விட ஆரம்பிப்பார் சிவகுமார்.
ஒரு நாள் நடிகர் திலகம் கண் முன்னே நிர்மலாவை காரில் ஏற்றி போவார். பஸ் ஸ்டாப்பில் நிற்பவர்கள் நிர்மலாவை கேவலமாக பேச நடிகர் திலகம் துடித்து போவார்.அங்கே மழையில் ஒரு டூயட் பாடல் என்ன சொல்ல என்ன சொல்ல எஸ்பிபி ஈஸ்வரி குரல்களில்.நன்றாக வந்திருக்கும் பாட்டு. பாடல் முடிந்து வீட்டிற்கு வரும் நிர்மலாவை சத்தம் போட நீங்கள் யார் என்னை கேள்வி கேட்க என்று நிர்மலா நடிகர் திலகத்தை பார்த்து கேட்க அதை கேட்கும் சௌகார் நிர்மலாவை அடி பின்ன நடிகர் திலகம் பதறி தடுப்பார். சிறிது நேரம் பொறுத்து சாப்பிடாமல் இருக்கிறார் என்று தெரிந்து வந்து நடிகர் திலகம் அவர் தலையை கோத, தனது தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பார் நிர்மலா. பட்டம் வாங்குவது மட்டுமே தனது கடமை என முடிவு செய்யும் நிர்மலா சிவகுமாரிடம் தன்னை மறந்து விட சொல்ல சிவகுமார் நடிகர் திலகத்திடம் வந்து பேச அவர் மறுத்து விடுவார். இதற்கிடையே நிர்மலா பட்டம் வாங்க அதை கல்லூரி வளாகத்திற்கு வெளியே இருந்து பார்த்து மகிழ்வார் நடிகர் திலகம்.
இறுதியாக சிவகுமாரின் தந்தையான மேஜர் சிவகுமாரையும் கூட்டி நேரில் வர முதலில் மறுக்கும் நடிகர் திலகம் பின் மேஜர் தன் மீது நிர்மலாவின் எதிர்காலத்தை கெடுப்பதாக குற்றம் சொல்ல சௌகாரிடம் நிர்மலாவிடமும் சம்மதம் கேட்டு திருமணம் நிச்சயம் செய்வார்கள். கல்யாண வீட்டிற்கு கிளம்பும் நிர்மலாவிடம் ஒரு நாய் பொம்மை பரிசளிப்பார் நடிகர் திலகம். கல்யாணத்திற்கு போக வேண்டாம் என முடிவெடுத்திருக்கும் நடிகர் திலகம் அந்த பொம்மையை வைத்து விட்டு போய்விட்ட நிர்மலாவிடம் கொடுக்க ஓடுவார். தன்னை யார் என்று வெளிப்படுத்தாமல் கல்யாணத்தை பார்த்துவிட்டு பந்திக்கு செல்ல அங்கே அவருக்கு இருக்கும் இருமல் அவரை காட்டிக் கொடுத்துவிட நிர்மலாவின் உணர்ச்சிவசப்பட்ட பேச்சிற்கு பின் அவர்கள் இருவரையும் நடிகர் திலகம் ஆசிர்வதிக்க முற்படும்போது உயிர் துறக்க இதோ எந்தன் தெய்வம் பாடலின் வரி ஒலிக்க வணக்கம்
நடிகர் திலகம் நடிப்பில் பின்னியிருக்கும் சில காட்சிகளை குறிப்பிட வேண்டும். கேவலம் ஒரு ரிக் ஷாக்காரர் என்று தான் தோல் மீது போட்டு வளர்த்த பெண் சொல்லும்போது அவர் மனம் படும் பாடு, எக்ஸாம் பீஸ் கட்டுவதற்காக தனது ரிக் ஷாவை விற்க சொல்லி விகேஆரிடம் வாதம் செய்யும் காட்சி. பணத்தை வாங்கி கொண்டு ரிக் ஷாவை ஒரு முறை தொட்டு பார்த்துவிட்டு நடந்து பின் ஏதோ நினைவு வந்தது போல அடையாள வில்லையை கழட்டி கொடுப்பது, நிர்மலாவிடம் முதலில் கடிந்து பேசி பின் தன் நிலை உணர்ந்து வருந்தி பேசுவது, சிவகுமாரிடம் காட்டும் கண்டிப்பு சிவகுமார் நிர்மலா தன்னிடம் எங்க மாமா சொன்ன பேச்சை மீற மாட்டேன் என்று சொல்லி விட்டா என்றதும் அதை நினைத்து பூரிப்பது, மேஜரிடம் வாதம் செய்வது, தன்னுடைய செய்கை அவளின் எதிர்கால வாழ்வையே பாதிக்கிறது என்றவுடன் கலங்கி போய் சௌகாரிடமும் நிர்மலாவிடமும் சம்மதம் கேட்பது, நாய் பொம்மையை பரிசளிக்கும்போது தன்னையே உருவகப்படுத்தி கொள்வது என்று எதை சொல்ல எதை விட?
படம் நல்ல வெற்றி முதலில் சொன்னது போல் கலர் படங்களோடு போட்டியிட்ட இந்த கருப்பு வெள்ளை படம் பெரிய வெற்றியை பெற்றது. 1971 அக்டோபறில் நடந்த நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவின் செய்தி சுருள் (எப்படி 1970 பிறந்த நாள் விழா, 1971ல் சவாலே சமாளி 150வது பட விழா செய்தி சுருளாக காட்டப்பட்டதோ அது போல) 50,60 நாட்களுக்கு மேல் பாபு திரையிடப்பட்ட அரங்குகளில் காண்பிக்கப்பட்டது. சென்னையில் சாந்தி கிரௌன் புவனேஸ்வரி மூன்று திரையரங்குகளிலும் திருச்சி பிரபாத் அரங்கிலும் 100 நாட்கள் ஓடியது. மதுரையில் பொங்கல் வரை 89 நாட்கள் ஓடியது. 1970 அக்டோபர் 29 தீபாவளி நாள் துவங்கி 1972 ஜனவரி 14 வரை 444 நாட்கள் தொடர்ச்சியாக நமது நடிகர் திலகத்தின் படங்களே ஓடி சாதனை படைத்தது. அந்த 1972ம் வருடம் பொங்கல் ஜனவரி 15 அன்று வந்தது. அன்று ஏபிஎன் இயக்கிய அகத்தியர் திரையிடப்பட்டது. கோவை மற்றும் சேலம் நகரங்களிலும் 75 நாட்களை கடந்தது. கடல் கடந்து இலங்கையில் கொழும்பிலும் யாழ் நகரிலும் 100 நாட்களை தாண்டி ஓடியது.
பாபு பற்றி சொல்லும்போது ஒரு விஷயத்தை குறிப்பிடாமல் இருக்க முடியாது. பல முறை பல்வேறு தளங்களில் நானே சொல்லியிருக்கிறேன். 1971ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் விஷயத்தில் பாபுவிற்கு விருது கிடைக்கவில்லை என்று பலரும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். அது தவறு என்றும் பாபு போட்டியில் கலந்து கொள்ளவேயில்லை காரணம் அது ரீமேக் (மொழி மாற்ற படம்) ஆகையால் போட்டியில் பரிசீலனைக்கு எடுத்து கொள்ள மாட்டார்களென்பதை பல முறை சொல்லியாகி விட்டது. ஆனாலும் இந்த தவறான தகவல் வந்து கொண்டேயிருக்கிறது. ரீமேக் படங்கள் போட்டியில் ஏதாவது ஒரு பிரிவில் கலந்து கொண்டு பரிசை வெல்ல முடியுமா என்றால் அது பாடல்கள் பிரிவில்தான். அதாவது ஒரிஜினல் படத்தின் இசையிலிருந்து வேறுபட்டு அமைந்திருந்தால் பாடலாசிரியருக்கோ இசையமைப்பாளருக்கோ பின்னணி பாடகருக்கோ விருதுகள் கிடைக்கும். இதற்கு ஒரு உதாரணம் உத்தர் புருஷ் படத்தின் ரீமேக்காக இருந்தாலும் உயர்ந்த மனிதன் படத்தில் நாளை இந்த வேளை படத்திற்கு சுசீலாம்மாவிற்கு முதல் தேசிய விருது கிடைத்தது.
அப்படியானால் 1971 தேசிய விருதுக்கு சென்ற நமது படம் எதுவென்று கேட்டால் அது சவாலே சமாளி திரைப்படம்தான். சவாலே சமாளி நடிப்பிற்காக நிச்சயமாக நடிகர் திலகத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய விருது அன்றைய தமிழக ஆளும் கட்சியின் அரசியல் அழுத்தத்தினால் நிராகரிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. அது போல மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும். தேசிய விருதுகள் 1954 முதல் விருதுகள் கொடுக்கப்பட்டு வந்தாலும் கூட 1967 ஆண்டு முதல்தான் சிறந்த நடிகருக்கான விருது வழங்குவது தொடங்கப்பட்டது. ஆகவே ஏன் கட்டபொம்மனுக்கு கொடுக்கப்படவில்லை, ஏன் பாச மலருக்கு கொடுக்கப்படவில்லை, ஏன் உத்தம புத்திரனுக்கு கொடுக்கப்படவில்லை என்றெல்லாம் எழுதுவதை நிறுத்தினால் நலம்.
இத்தோடு 1971 முடிகிறது. நம்முடைய ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாத கோல்டன் வருடம் 1972ல் கடக்க இருக்கிறோம்.1967 தீபாவளியோடு ஒரு ரசிகனாக ஆரம்பித்த என் பயணம் இந்த 4 வருடங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்து 1972ல் அடுத்த கட்டத்திற்கு நகர ஆரம்பித்தது.

Leave A Reply

Your email address will not be published.